ரிட் மனுக்களில் 8 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை: ரிட் மனுக்களில் 8 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற ரிட் விதிகளை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் குடும்ப ஓய்வூதியத்துக்கு சம்பந்தப்பட்ட அரசு ஊழியரின் முந்தைய பணிக்காலத்தில் 50 சதவீதத்தை சேர்க்கக்கோரி 2016-ல் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏழரை ஆண்டுகளாக பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து பதில் மனு தாக்கல் செய்ய அனுமதி கோரி வருவாய்த்துறை செயலாளர், மதுரை மாவட்ட ஆட்சியர், உசிலம்பட்டி கோட்டாட்சியர், திருமங்கலம் வட்டாட்சியர் தரப்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பட்டு தேவனாந்த் பிறப்பித்த உத்தரவில், "சென்னை உயர் நீதிமன்ற ரிட் விதிகளில் வழக்குகளில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட 8 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும், 8 வாரத்துக்கு மேல் அவகாசம் வேண்டும் என்றால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதி பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதை அனைவரும் பின்பற்ற வேண்டும். விரைவு நீதிக்கான உரிமை என்பது அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு அங்கமாகும்.

இந்த வழக்கில் ஏழரை ஆண்டுகளாக பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இப்போது அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் உசிலம்பட்டி, திருமங்கலம் கோட்டாட்சியர் அலுவலகம் பிரிப்பு தவிர வேறு காரணம் கூறப்படவில்லை. சில ரிட் மனுக்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளது.

பதில் மனு தாக்கல் செய்யாமல் இருப்பது உட்பட பல்வேறு காரணங்களுக்காக வழக்குகள் விசாரணை முடியாமல் நிலுவையில் உள்ளன. சரியான நேரத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு குடிமகன்களின் உரிமையாகும். நீண்ட காலம் வழக்குகள் நிலுவையில் இருப்பதை தீவிரமாக அணுக வேண்டும். வழக்கு நிலுவை வழக்கு தொடர்ந்தவர்களின் வாழ்க்கையை பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும்.

வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டியது அவசர தேவையாகும். நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பதில் மனுத் தாக்கல் செய்ய காலக்கெடு விதிக்க வேண்டும். தாமதத்தை அனுமதிக்கக்கூடாது.

இதனால் மதுரை கலைஞர் நூலகத்க்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மனு அனுமதிக்கப்படுகிறது. இப்பணத்தை பதில் மனு தாக்கல் செய்ய தாமதம் ஏற்படுத்திய அதிகாரிகளிடம் வசூலிக்க வேண்டும். பதில் மனு தாக்கல் செய்வதில் சென்னை உயர் நீதிமன்ற ரிட் விதிகளை பின்பற்ற அனைத்து அதிகாரிகளுக்கும் தலைமை செயலாளர், தலைமை வழக்கறிஞர் மற்றும் மத்திய அரசின் கூடுதல்/ துணை சொலிசிட்டர் ஜெனரலுக்கு உத்தரவு நகலை அனுப்ப வேண்டும்" இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE