இன்னும் 10 நாட்கள் தான் உங்களுக்கு அவகாசம் - தருமபுரி நகராட்சிக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் வார்னிங்

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: நகராட்சி அதிகாரிகளின் செயல்பாட்டால் திமுக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது என தருமபுரி நகராட்சிக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் இன்று(ஆகஸ்ட் 22) அவசரக் கூட்டம் நடந்தது. நகராட்சி அலுவலக அண்ணா கூட்டரங்கில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் லட்சுமி(திமுக) தலைமை வகித்தார். துணைத் தலைவர் நித்யா முன்னிலை வகித்தார். ஆணையாளர் புவனேஸ்வரன் வரவேற்றார்.

கூட்டத்தில், வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு கவுன்சிலர்களின் ஒப்புதல் பெறுவது தொடர்பாக விவாதம் மேற்கொள்ளப்பட்டு ரூ.1 கோடியே 2 லட்சம் மதிப்பில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் பெறப்பட்டது. இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினர்.

அந்த வரிசையில், தருமபுரி நகராட்சியின் 25-வது வார்டு கவுன்சிலர் சத்யா முல்லைவேந்தன்(திமுக) பேசும்போது, ‘25-வது வார்டு பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் சுமார் 250 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் கழிப்பிட வசதி இல்லாததால் மாணவ, மாணவியர் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இப்பள்ளியில் போதிய கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தர 18 மாதங்களாக நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வருகிறேன். ஆனாலும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இவ்வாறு நகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதால் பொதுமக்கள் மத்தியில் திமுக அரசுக்குத் தான் அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது. இன்னும் 10 நாட்கள் தான் உங்களுக்கு அவகாசம். அதற்குள் 25-வது வார்டில் உள்ள நகராட்சிப் பள்ளியில் கழிப்பறை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்’ என்று ஆவேசத்துடன் விளாசித் தள்ளினார். இதைக் கேட்டு சங்கடத்தில் ஆழ்ந்த நகராட்சி அதிகாரிகள் நெளியத் தொடங்கினர். இதனால் நகராட்சிக் கூட்டத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், அவரது கோரிக்கைக்கு பதிலளித்த நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வரன், ‘குறிப்பிட்ட பள்ளியில் கழிப்பறை அமைக்க திட்ட மதிப்பீடு எடுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவாக கோரிக்கை நிறைவேற்றப்படும்’ என்றார். அதன் பின்னரே நகராட்சிக் கூட்டரங்கில் இயல்பு நிலை ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE