இமாச்சலப் பிரதேச மழை நிவாரணப் பணிகளுக்கு தமிழக அரசு ரூ.10 கோடி நிதியுதவி

By செய்திப்பிரிவு

சென்னை: இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்தின் நிவாரண பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி உதவியை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு: கடந்த சில நாட்களாக கடும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் நிவாரண பணிகளுக்காக 10 கோடி ரூபாய் வழங்கி, அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங்குக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக, இன்று (22-8-2023) காலை இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு, பேரிடரால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்த விவரங்களைத் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த இயற்கை பேரிடர் காரணமாக அம்மாநில மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் ஏற்பட்ட கடும் சேதங்கள் தன்னை மிகுந்த வருத்தத்திற்கும், வேதனைக்கும் ஆளாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். மிகவும் நெருக்கடியான இந்த சூழ்நிலையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை திறமையாக மேற்கொண்டு வருவதற்காக இமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சர் பாராட்டியுள்ளார்.

அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தமிழ்நாடு அரசின் பங்களிப்பாக இமாச்சல பிரதேச அரசுக்கு ரூபாய் 10 கோடி வழங்குவதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டுள்ள இமாச்சலப் பிரதேசத்திற்கு உதவுவதற்காக தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும் எப்போதும் தயாராக இருப்பதாகவும், ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தன்னை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE