கல்விக் கூடங்களில் ஹிஜாப் அணியத் தடையில்லை என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடுக: சீமான்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தின் கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்துசெல்வதற்கு எவ்விதத் தடையுமில்லை என்பதை தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பாக வெளியிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவண்ணாமலை மாவட்டம், புதூரில் இயங்கும் அண்ணாமலை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தட்சணப் பாரத் இந்தி பிரச்சார சபா நடத்திய இந்தி தேர்வினை ஹிஜாப் அணிந்துகொண்டு எழுதச்சென்ற ஆசிரியர் ஷபனாவைத் தேர்வெழுத அனுமதி மறுத்து தேர்வு கூடத்திலிருந்து வெளியேற்றியுள்ள நிகழ்வு வன்மையான கண்டனத்துக்குரியது.

கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தாம்பரத்திலுள்ள சங்கர வித்யாலயா பள்ளிக்கு மாணவர் சேர்க்கைக்குச் சென்ற பெண்ணின் ஹிஜாப்பை அப்பள்ளி நிர்வாகம் அகற்றக்கோரியதும், அதே ஆண்டு மே மாதம் கள்ளக்குறிச்சி, களமருதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஹிஜாப் அணிந்துகொண்டு தேர்வெழுதச்சென்ற மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிகழ்வுகளும் அடுத்தடுத்து அரங்கேறிய நிலையில், தற்போது மீண்டும் அப்படி ஒரு கொடும் நிகழ்வு நிகழ்ந்திருப்பது தமிழகத்தில் நடைபெறுவது திமுக ஆட்சியா? அல்லது பாஜக ஆட்சியா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. பாஜகவின் இந்துத்துவக் கொள்கைகளை அப்படியே நடைமுறைப்படுத்துவதற்குப் பெயர்தான் திமுகவின் திராவிட மாடல் ஆட்சியா? என்ற கேள்வியும் எழுகிறது.

உடலில் பூணூல் அணிந்து செல்வதற்கும், நெற்றியில் திருநீறு பூசிச்செல்வதற்கும், கையில் கயிறு அணிந்துசெல்வதற்கும், ருத்திராட்சை அணிந்துசெல்வதற்கும் கல்விக் கூடங்கள் எவ்விதத் தடையுமிடாதபோது, இஸ்லாமியர்களின் ஹிஜாப் உடைக்கு மட்டும் தடையிடுவது எதனால்? எல்லோரும் அவரவரது மதக்கோட்பாடுகளைப் பின்பற்றுவதற்குக் கல்விக்கூடங்கள் அனுமதிக்கும்போது இஸ்லாமியர்களுக்கு மட்டும் அனுமதி மறுப்பது சமத்துவமற்ற அணுகுமுறை இல்லையா?.

ஹிஜாப் அணிந்துகொண்டு தெர்வெழுதச் செல்வதற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் பெருமக்கள், ஹிஜாப் அணிந்துகொண்டு வாக்குச் செலுத்தும்போது எதிர்ப்புத் தெரிவிக்காததேன்? அப்போது ஹிஜாப் உடை சிக்கலாகப்படவில்லை; இப்போது மட்டும் கண்ணை உறுத்துகிறதா? இஸ்லாமியர்களின் வாக்கு இனிக்கிறது; அவர்களது உரிமை கசக்கிறதா?

இஸ்லாமியர்களின் உடை உரிமை மறுக்கப்படுவதைத் தடுக்காது கை கட்டி வேடிக்கை பார்க்கும் திமுக அரசு, சீக்கியர்களின் தலைப்பாகை அகற்றப்பட்டால் இதேபோன்று அமைதி காக்குமா? தாம்பரத்திலும், கள்ளக்குறிச்சியிலும் ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டபோதே திமுக அரசு தலையிட்டு கடும் நடவடிக்கை எடுத்திருந்தால் மீண்டும் அதே போன்றதொரு நிகழ்வு தற்போது நடந்திருப்பதைத் தடுத்திருக்க முடியும்.

இந்துத்துவா மதவெறியர்கள் மீது திமுக அரசு கடைபிடித்து வரும் மென்மையான அணுகுமுறையே தமிழகத்தில் இஸ்லாம் மற்றும் கிறித்துவர்கள் மீது மத வெறுப்பு நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரிக்க முதன்மையான காரணமாகும்.

அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தை முன்வைத்து, பாஜக போன்ற இந்துத்துவ இயக்கங்கள் பெரும் மதப்பூசலை உருவாக்கி, சமூக அமைதியைக் குலைத்து, மதவெறியாட்டமாடியதன் விளைவாக, ஏறக்குறைய 33,000 மாணவிகள் தேர்வெழுத இயலாதுபோன பெரும் அவலமானது நிகழ்காலச்சாட்சியாக இருக்கும் நிலையில், அத்தகைய கோரச்சம்பவங்கள் தமிழகத்தில் நிகழாவண்ணம் தடுத்து, மதவெறிக்கூட்டத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பும், கடமையுமாகும்.

ஆகவே, தமிழகத்தின் கல்விக் கூடங்களில் ஹிஜாப் அணிந்து செல்வதற்கு எவ்விதத் தடையுமில்லை என்பதை தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிட வேண்டுமெனவும், ஹிஜாப் அணியக் கூடாது போன்ற அடிப்படை மத உரிமைகளுக்கு எதிரான மத வெறுப்புச் செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று சீமான் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்