தகுதியுள்ள குடும்பத் தலைவிகள் பயன்பெறச் செய்வதே நோக்கம்: மகளிர் உரிமைத் தொகை குறித்து முதல்வர் விவரிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: "அரசின் கனவுத் திட்டமான மகளிர் உரிமைத் திட்டத்தில் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளைத் தேர்ந்தெடுத்து, பயன்பெறச் செய்ய வேண்டும் என்பதே அரசின் நோக்கம்" என்று பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஆக.21) முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் கலந்துகொண்டார். அந்த கூட்டத்தில் முதல்வர் பேசியது: தமிழகத்தின் வளர்ச்சியிலும், அந்த வளர்ச்சி அனைவருக்கும் பயனளிப்பதாக இருப்பதை உறுதிசெய்வதிலும் கண்ணும் கருத்துமாக கவனம் செலுத்தி வருகிறது. இதற்கான ஒவ்வொரு திட்டத்தையும் வடிவமைப்பதில் இருந்து அதனைச் செயல்படுத்தும் வரை, பல்வேறு துறை வல்லுநர்களிடம் கருத்துகளைக் கேட்பதோடு மட்டுமன்றி, உங்களைப் போன்ற தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களின் ஆலோசனைகளையும் கேட்டறிந்து, செயல்பட்டு வருகிறது.

இந்தக் குழுவின் கடந்த கூட்டங்களின் போது, தமிழகத்தின் உற்பத்தித் துறையை மேம்படுத்தி, இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான பல உத்திகளைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டீர்கள்.இதன் அடிப்படையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் உற்பத்தித் துறையில் தமிழ்நாடு ஏற்றுமதிக் கொள்கை, தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை, தமிழ்நாடு சரக்குப் போக்குவரத்துக் கொள்கை, தமிழ்நாடு மின் வாகனங்கள் கொள்கை போன்ற பல்வேறு துறைகளுக்கான தனித்தனிக் கொள்கைகளை வகுத்து அறிவித்துள்ளோம்.

குறிப்பாக, பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளைத் தரக்கூடிய தோல் அல்லாத காலணி உற்பத்தியிலும், எதிர்கால வளர்ச்சித் துறையான மின்வாகன உற்பத்தியிலும் நாட்டிலேயே அதிக முதலீடுகளைப் பெற்றுள்ளோம்.மொத்தமாக, உற்பத்தித் துறையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மிட்சுபிஷி, பெகட்ரான், ஓலா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட 241 முதலீட்டுக் கருத்துருக்கள் மூலம், 2 லட்சத்து 97 ஆயிரத்து 196 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளோம்.

2020-21-ஆம் ஆண்டில் மின்னணுவியல் பொருட்கள் உற்பத்தியில் நான்காவது இடத்தில் இருந்த தமிழகத்தை, கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல் இடத்துக்கு உயர்த்தியுள்ளோம். இத்தகைய பல்வேறு முயற்சிகளால், நாட்டிலுள்ள மாநிலங்களிலேயே ஏற்றுமதி வளர்ச்சிக்கான தயார்நிலைக் குறியீட்டில் தமிழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இவ்வாறு உற்பத்தித் துறையில் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் தமிழகத்தை முன்னிறுத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.இந்த முயற்சிகள் வெற்றியடையும் போது, தமிழக இளைஞர்களுக்குத் தேவையான வேலைவாய்ப்புகள் பெருகிடும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். கல்வியிலும், மருத்துவத்திலும், வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

`மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தின் விளைவாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் மருத்துவச் செலவினம் குறைந்துள்ளதாகவும், மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருப்பதாக மாநிலத் திட்டக் குழு அளித்துள்ள தரவுகளின் மூலம் வெளிப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு இணையாக, கல்வித் துறையில் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தக் கொண்டு வரப்பட்டுள்ள திட்டமான ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தின் மூலம் இதுவரை 27 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.

மேலும், உயர்கல்வி பெறும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த பயிற்சியினை வழங்கி, தங்கள் துறையில் முதன்மையாகத் திகழ வேண்டும் என்பதற்காக,‘நான் முதல்வன் திட்டம்’ என்ற தொலைநோக்குத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். இந்தத் திட்டம் தொடங்கி ஓராண்டு முடிந்த நிலையில், 13 லட்சம் மாணவர்கள் திறன்பயிற்சி பெற்றுள்ளனர். இந்தத் திட்டத்தின் மூலம் ஏறத்தாழ 25 ஆயிரம் உயர்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

பெண் கல்வியின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்துள்ள நமது அரசு, பெண் கல்வியை ஊக்குவிக்கும் வண்ணம், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து தேர்ச்சி பெற்று உயர்கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் மூலம் மாதம் 1,000 ரூபாய் வழங்கி வருகிறோம். இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.

ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பல ஆயிரம் பெண்கள் தடையின்றி உயர்கல்வி பெற இந்தத் திட்டம் வழிவகுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டினைப் போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். இந்தத் திட்டத்தில் தற்போது 1,978 பள்ளிகளில் பயிலும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்தத் திட்டத்தினால் மாணவர்களின் வருகை உயர்ந்துள்ளதோடு, இடைநிற்றலும் குறைந்துள்ளது என மாநிலத் திட்டக்குழுவின் ஆய்வு கூறுகிறது.இந்தியாவுக்கே முன்மாதிரியான இந்தத் திட்டத்தை, 404 கோடி ரூபாய் செலவில், 31 ஆயிரத்து 8 பள்ளிகளில் பயிலும் 18 லட்சத்து 53 ஆயிரத்து 798 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விரிவுபடுத்திட எண்ணியுள்ளோம்.

இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் எனச் சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15-ம் நாள் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.Universal Basic Income கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ள ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டது. குடும்பத்துக்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும்.

நமது அரசின் கனவுத் திட்டமான மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் மற்றும் தகுதியின்மைகள் வரையறை செய்யப்பட்டு, விண்ணப்பங்களைப் பெறுவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, 1 கோடியே 54 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. வருவாய், சொத்துகள், மின் பயன்பாடு போன்ற தகுதிக் குறியீடுகள் பற்றிய தரவுகளை பல மாதங்களாகத் தொகுத்துள்ளோம். இவற்றின் மூலம் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளைத் தேர்ந்தெடுத்து, பயன்பெறச் செய்ய வேண்டும் என்பதே நமது அரசின் நோக்கம். இந்தத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்துவதற்கு உங்களுடைய ஆலோசனைகள் இன்றியமையாதது” என்று முதல்வர் பேசியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்