மழைக்காலத்தில் தனித்தீவாக மாறும் தளிஞ்சி மலை கிராமம் - கூட்டாற்றில் பாலம் கட்ட எதிர்பார்ப்பு

By செய்திப்பிரிவு

உடுமலை அருகே உள்ள கூட்டாற்றில் பாலம் கட்ட வேண்டும் என்ற 60 ஆண்டுகால கோரிக்கை கிடப்பில் உள்ளதாக மலைவாழ் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். உடுமலை கோட்டத்துக்கு உட்பட்டு 18 மலைவாழ் கிராமங்கள் உள்ளன. அதில் சுமார் 4,000 பேர் வசிக்கின்றனர். அங்கு வசிக்கும் மக்கள் மழைக்காலங்களில் குடியிருப்புகளைவிட்டு இடம்பெயர முடியாமலும், அத்தியாவசியமான பொருட்கள் கிடைக்காமலும் அவதிக்குள்ளாகும் நிலையுள்ளது. இதில், தளிஞ்சி மற்றும் தளிஞ்சி வயல் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழக எல்லையில் உள்ள சின்னாற்றை அடுத்து தளிஞ்சி செல்லும் வழியில் தேனாறு, பாம்பாறு, சின்னாறு ஆகியவை சந்திக்கும் கூட்டாறு உள்ளது. மலைவாழ் மக்கள் கூட்டாற்றை கடந்துதான் நகருக்கு வந்து செல்ல வேண்டும். அருகில் உள்ள வனப்பகுதி கேரள மாநிலத்துக்கு உட்பட்டது. அங்குள்ள ஒரு வழியும் அம்மாநில வனத்துறையினர் மட்டும் பயன்படுத்தும் வகையில் அடைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது: கேரள மாநிலத்துக்குட்பட்ட சம்பக்காடு வழித்தடத்தை கேரள வனத்துறை தடுத்து விட்டது. அதனால் கூட்டாறு வழியாகத்தான் வந்து செல்ல வேண்டியுள்ளது. கூட்டாறின் நடுவே பாலம் கட்ட பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

3 ஆண்டுகளுக்கு முன் கால்நடைத் துறை அமைச்சராக இருந்த உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து, 3 மாதங்களில் பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பதாக கூறிச்சென்றார். 3 ஆண்டுகள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வெள்ளக் காலங்களில் எங்கள் கிராமங்கள் தனித்தீவுபோல மாறி விடுகிறது. இக்கிராமங்களில் இருந்து வெளியேற, கூட்டாற்றின் நடுவே கயிறு கட்டி, அதன் மூலம் ஆற்றை கடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே மலைவாழ் மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் கூட்டாற்றில் மேம்பாலம் அமைக்க வேண்டும், என்றனர்.

இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, ‘‘மலைவாழ் மக்களின் கோரிக்கை தொடர்பாக உயர் அதிகாரிகள், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உரிய நிதி ஒதுக்கீடுகள் மற்றும் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE