திருவண்ணாமலை கோயில் தேர் வரும் வீதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் தேர் வலம் வரக்கூடிய பெரிய வீதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கு தடைவிதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவண்ணாமலை மாவட்டம் எடப்பாளத்தை சேர்ந்த சங்கர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில் தேர் வலம் வரும் பெரிய வீதியில் தார் சாலைக்கு பதில் கான்கிரீட் சாலை அமைக்கப்படுகிறது. கான்கிரீட் சாலையாக மாற்றினால், தேர் வலம் வரும்போது சிக்கல் ஏற்படும். எனவே, கோயிலின் தேர் வலம் வருகின்ற பெரிய வீதியில் கான்கிரீட் சாலை அமைக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், கோயிலின் தேர் வலம் செல்லும் பாதையில், 70 சதவீத பணிகள் முடிந்து விட்டது. அடுத்த மாதம் இந்தப் பணிகள் முழுமையாக முடிந்து விடும். பல கோயில்களில் கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. மேலும் தேர்களில் ஹைட்ராலிக் பிரேக் அமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.

அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கான்கிரீட் சாலையில் தேர் வலம் வருவதில் என்ன சிக்கல் உள்ளது என்பதை நிரூபிக்க மனுதாரர் எந்த ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE