அதிமுக மாநாடு சர்ச்சை | மிச்சம் மீதியாக சிதறிக்கிடந்த உணவு மிகைப்படுத்திக் காட்டப்படுகிறது: உதயகுமார் வேதனை

By செய்திப்பிரிவு

மதுரை: "10 லட்சம் பேருக்கு சமைக்கப்பட்ட உணவில் அனைவருக்கும் வழங்கப்பட்ட பிறகு, சமையல் பாத்திரங்களை எடுத்துச் செல்லும்போது மிச்சம் மீதியாக ஆங்காங்கே சிதறியிருக்கிற காட்சிகளை எல்லாம் எடுத்துக்காட்டி, மிகைப்படுத்தி ஊடகங்கள் காட்டுவது வேதனையளிக்கிறது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக மாநாட்டில் உணவு வீணானது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியது: "கரூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து மாநாட்டு வருகைதந்த அதிமுக தொண்டர்களை காவல்துறையினர் வழிமாற்றிவிட்டனர். இதனால், எங்களது கட்சியின் தொண்டர்கள் பல இடங்களில் சாலைகளில் அமர்ந்து போராட்டம் நடத்திதான், மாநாட்டுக்கு வரவே முடிந்தது.

காட்டாற்று வெள்ளம் போல் வந்த வெள்ளத்தை கடலில் சேர்ப்பது போன்ற முயற்சியை நாங்கள் மேற்கொண்டோம். ஆனால், காவல்துறை அதற்கு முட்டுக்கட்டைப் போட்டது. எனது கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காவல்துறை மட்டும் ஆளுங்கட்சியின் உத்தரவை மீறி எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் 50 லட்சம் பேர் மாநாட்டுக்கு வந்திருப்பார்கள். இருப்பினும் காவல்துறையின் தடையை மீறித்தான் 15 லட்சம் மாநாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாயுள்ளம் கொண்டவர். அவரது வீட்டுக்குச் சென்றால்கூட, காபி குடித்துவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்ற மனிதநேயத்துக்கு சொந்தக்காரர். மாநாட்டுக்கான உணவு விசயத்தில் அவர் தனிக்கவனம் செலுத்தினார். ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தார். ஆனால், சில ஊடகங்கள் மாநாட்டு வெற்றியை இந்த உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், மாநாட்டின் சிறப்பைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், மாநாட்டின் எழுச்சி உரையை உலகமே பேசிக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு கரும்புள்ளியாக அதை வைத்து மகிழ்ச்சி அடைகின்றனர்.

10 லட்சம் பேருக்கு சமைக்கப்பட்ட உணவில் அனைவருக்கும் வழங்கப்பட்ட பிறகு, சமையல் பாத்திரங்களை எடுத்துச் செல்லும்போது மிச்சம் மீதியாக ஆங்காங்கே சிதறியிருக்கிற காட்சிகளை எல்லாம் எடுத்துக்காட்டி, மிகைப்படுத்தி ஊடகங்கள் காட்டுவது வேதனையளிக்கிறது.

சாதாரணமாக திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி உறவினர்களுக்கு உணவு அளிப்பதில் இருக்கும் சிரமத்தை அனைவரும் அறிவர். 15 லட்சம் பேர் கூடிய மாநாட்டுக்கு வந்தவர்களுக்கு குடிநீர், உணவு வழங்கி, அவர்களை பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்ட பிறகு ஊடகங்கள் இவற்றைக் காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது. மாநாட்டு வெற்றியை யாராலும் குறை சொல்ல முடியாது. ஆகவே, புளியோதரை தோல்வியை பேசுவதுதான் இன்றைய நிகழ்வாக பார்க்கப்படுகிறது" என்று அவர் கூறினார்.

முன்னதாக, மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த அதிமுக மாநாட்டில் கலந்துகொண்ட தொண்டர்களுக்காக தயார் செய்த உணவுகள் அண்டா, அண்டாவாக மாநாட்டு பந்தலிலே கீழே கொட்டப்பட்டிருப்பது குறித்து பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE