மதுரை மாநாடு வரலாறு படைத்தது - அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பழனிசாமி நன்றி

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக சார்பில் மதுரையில் நேற்று முன்தினம் நடைபெற்ற வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு வரலாறு படைப்பதற்குக் காரணமாக இருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுகவின் மதுரை மாநாடு,இந்தியாவே திரும்பிப் பார்க்கும்வகையில் வெற்றி அடைந்திருக்கிறது.

கடல் அலைபோல ஆர்ப்பரித்துவந்த கட்சித் தொண்டர்கள், எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும், நமது ராணுவக் கட்டுக்கோப்பையும், விசுவாசத்தையும் நிரூபித்துள்ளனர். அதிமுக மீண்டும் ஆட்சியில் அமரும், தமிழ்நாட்டு மக்களின் துயர்விரைவில் தீரும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் இந்த மாநாடு விதைத்திருக்கிறது.

அண்ணாவின் உருவத்துடன் கூடிய கட்சிக் கொடி, மதுரை மண்ணில் லட்சக்கணக்கான தொண்டர்களின் மத்தியில் அசைந்தாடிய காட்சிகள், ஒவ்வொரு தொண்டரையும் உணர்ச்சி வெள்ளத்தில் மூழ் கடித்தது.

கட்சியின் 3-ம் தலைமுறை எழுச்சியைக் கண்டு நடுங்கிப் போன கூட்டம், காவல் துறையைக் கொண்டு, மாநாட்டில் தொண்டர்கள் கலந்துகொள்வதைத் தடுக்க பல்வேறு வகைகளில் முயற்சித்தது. பல இடங்களில் தொண்டர்கள் வந்த வாகனங்களை 30 கி.மீ.க்கு முன்பே நிறுத்தி, திசை திருப்பிவிட்டனர். அங்கிருந்து மகளிர் மற்றும் குழந்தைகளுடன், குடும்பம் குடும்பமாக நடந்தே வந்து மாநாட்டில் கலந்துகொண்டதைக் கண்டு, எதிரிகள் நடுங்கிப்போய் இருக்கின்றனர்.

திமுக அரசின் காவல் துறைபோதுமான பாதுகாப்பு வழங்கவில்லை. பல்வேறு இடையூறுகளைச் செய்தனர். அதேபோல, துரோகிகளும் சதி வேலைகளில் ஈடுபட்டனர். இவை அனைத்தையும் தாண்டி, ஏராளமான தொண்டர்கள் குடும்பம் குடும்பமாக மாநாட்டில் கலந்துகொண்டது நமக்கு கிடைத்தமாபெரும் வெற்றி. இந்த வரலாற்றுவெற்றி, 2024-ல் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தல் மற்றும்2026-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

ஏறத்தாழ 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், சிறு அசம்பாவிதமும் நடைபெறவில்லை. இந்திய அரசியல் வரலாற்றில் இன்னொரு கட்சிஇப்படியொரு மாநாட்டை நடத்தியது உண்டா? என்று நினைத்துப் பெருமிதம் அடைகிறேன்.

மாநாடு சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி. எம்எல்ஏ-க்கள், முன்னாள் அமைச்சர்கள், உள்ளாட்சிப்பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது நன்றியைத் தெரி வித்துக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த அதிமுக நிர்வாகிகள் 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிவாரணம்

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் ‘‘அதிமுகவின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு முடிந்துவீடு திரும்பும்போதும் எதிர்பாராத விதமாக, விழுப்புரம் மாவட்டம்- பொன்னுசாமி, திருப்பத்தூர் மாவட்டம் - சென்னையன், கோவைமாநகர் மாவட்டம் - கதிரேசன், கோவை புறநகர் தெற்கு மாவட்டம் -பழனிச்சாமி, கோவை புறநகர் வடக்கு மாவட்டம் - மாரிமுத்து,

மற்றும் தென்காசி வடக்கு மாவட்டம் - சு.வாசுதேவன், விருதுநகர்கிழக்கு மாவட்டம் - கடற்கரை, புதுக்கோட்டை வடக்கு மாவட்டம்- பி.சாம்பசிவம் ஆகியோர் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். மேற்கூறிய 8 பேரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்துக்கு அதிமுக சார்பில் தலா ரூ.6 லட்சம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.அதேபோல், வாகன விபத்துகளில் படுகாயமடைந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, மருத்துவ சிகிச்சைக்காக கட்சி சார்பில் தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE