ஊகங்களின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டது ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் - உயர் நீதிமன்றத்தில் விளையாட்டு நிறுவனங்கள் வாதம்

By செய்திப்பிரிவு

சென்னை: வெறும் ஊகங்களின் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தடை விதிக்க முடியாது: அப்போது, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம், திறமையை நம்பி பந்தயம் வைத்து விளையாடும் விளையாட்டு, சூதாட்டமாகாது. எனவே இதுதொடர்பான தமிழக அரசின் வாதம் ஏற்புடையதல்ல. ஆன்லைன் விளையாட்டுகளைப் பொறுத்தமட்டில், ஒழுங்குமுறை அமைப்பு உருவாக்கப்படும் என சட்டத்தில்கூறப்பட்டுள்ளது.

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த விளையாட்டுகளை முறைப்படுத்தலாமேயன்றி தடை விதிக்க முடியாது. வெறும் ஊகங்களின் அடிப்படையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆன்லைனில் விளையாட கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அதற்கும் ஜிஎஸ்டி செலுத்தப்படுகிறது’’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை வரும் ஆக.24-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை செயல்படுத்த ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவு

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் அமைத்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து, விளையாட்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை செயல் படுத்தும் வகையில் தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் அமைத்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி நசிமுதீன் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சாரங்கன், ஓய்வுபெற்ற பேராசிரியர் செல்லப்பன், உளவியலாளர் ரவீந்திரன், தனியார் நிறுவன அதிகாரி விஜய் கருணாகரன் ஆகிய நான்கு பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE