கைவிரல் துண்டான இளைஞருக்கு கால் விரலை பொருத்தி சாதனை - செங்கல்பட்டு அரசு மருத்துவர்கள் 8 மணி நேர சிகிச்சை

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு: விபத்தில் கையின் 2 விரல்களை இழந்தவருக்கு, அவரது கால் விரல் ஒன்றை கையின் கட்டை விரலாக மாற்றி பொருத்தி அரசு மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

ஜெயங்கொண்டத்தை சேர்ந்த தொழிலாளி, சுரேஷ்(35), துபாயில் பணிபுரிந்தபோது, 3 ஆண்டுக ளுக்கு முன்பு மின்சார தீக்காயத்தில் அவரது இடது கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்கள் கருகி போயின. விபத்து நடந்த, 5 நாட்களுக்குப் பிறகு துபாயில் அவரது இடது கை கட்டை விரல் மற்றும், ஆள்காட்டி விரல் துண்டிக்கப்பட்டது. இடது கட்டை விரல் புனரமைப்புக்காக தமிழகம் திரும்பிய அவர், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

துறைத்தலைவர் செல்வன், உதவிப் பேராசிரியர்கள் ஸ்ரீ சரண், கோவிந்தராஜ், மயக்க மருத்துவத்துறை தலைவர்கள் பத்மநாபன், ஸ்ரீதர் ஆகியோர் கொண்ட பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக் குழு, அவரது வலது காலின், 2-வது விரலைபயன்படுத்தி, இடது கைக்கு கட்டை விரலாக புனரமைக்க முடிவு செய்தனர். பின்னர் இந்த அறுவை சிகிச்சை மருத்துவர் செல்வன் தலைமையில் அண்மையில் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.

இதுகுறித்து மருத்துவர் செல்வன் கூறியது: கால் விரல் பகுதியின் ரத்த நாளங்கள் மிகவும் நுண்ணியவை. கிட்டத்தட்ட ஒரு தலைமுடி அளவு விட்டம் கொண்டவை. அவற்றை துல்லியமாக கண்டறிந்து, துண்டித்து கையில் மிக துல்லியமாக பொருத்த வேண்டும்.

மிக துல்லியமாக கால் விரலை துண்டித்து, மருத்துவ நுண்ணோக்கியில் துல்லியமாக பார்த்து, பார்த்து ரத்த நாளங்களை இணைத்தோம். 8 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.

விபத்து நேரிடும்போது உறுப்புகளை துண்டிக்க நேர்ந்தால் அதை சுத்தமான பிளாஸ்டிக் உரையில் வைத்து கட்டி, ஐஸ்கட்டிகள் நிரப்பிய பாத்திரத்தில் வைத்து மருத்துவமனைக்கு எடுத்து வர வேண்டும். துண்டிக்கப்பட்ட பாகங்களில் ஐஸ்கட்டியோ, தண்ணீரோ நேரடியாக படக்கூடாது. இந்த மாதிரியான உறுப்புகளை மாற்றுவது சாத்தியமே. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE