60 ஆண்டுகளாக தூர்வாரப்படாத கிருஷ்ணகிரி அணை: மதகு உடைந்ததால் 1.20 டிஎம்சி தண்ணீர் வீண் - 2-ம் போக சாகுபடி பாதிக்கும் என விவசாயிகள் கவலை

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி அணையின் மதகு உடைந்ததால் 1.20 டிஎம்சி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டு வீணாகியுள்ளது. இதனால் 2-ம் போக நெல் சாகுபடி பாதிக்கும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தென்பெண்ணை ஆறு கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் உற்பத்தியாகி கர்நாடக மாநிலத்தில் 112 கி.மீ., கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் 180 கி.மீ. தூரம் பாய்கிறது. மேலும், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் 34 கி.மீ., கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 106 கி.மீ. தூரம் பாய்ந்து தென்பெண்ணை ஆற்று நீர் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

கிருஷ்ணகிரி விவசாயிகளின் பாசன வசதிக்காக கிருஷ்ணகிரி அருகே பெரியமுத்தூர் ஊராட்சியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கிருஷ்ணகிரி அணை அமைந்துள்ளது. ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் கிருஷ்ணகிரி இருந்தபோது 1952-ல் அணை கட்ட முடிவு செய்யப்பட்டது. அணையின் மொத்த உயரம் 52 அடி. இதில், 1.66 டிஎம்சி நீர் தேக்க முடியும்.

கிருஷ்ணகிரி அணையில் 8 பிரதான மதகுகளும், 3 சிறிய மதகுகளும், வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்களும் உள்ளன. 1957-ம் ஆண்டு பணிகள் முடிந்து அணை திறக்கப்பட்டபிறகு, கிருஷ்ணகிரி அணை நீர் மூலம் பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சௌட்டஅள்ளி, தளிஅள்ளி, பையூர் உள்ளிட்ட 16 ஊராட்சிகளில் உள்ள 9012 ஏக்கர் நிலம் நேரடி பாசன வசதி பெற்றன. அணை பாசனத் திட்டத்தின்கீழ் 2 பிரதான வாய்க்கால்கள் மற்றும் 26 சிறு பாசன ஏரிகள் மூலமும் பாசனம் மேற்கொள்ளப்படுகிறது. 60 ஆண்டுகளில் பாசனப் பரப்பு அதிகரித்து, தற்போது 25 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விளைநிலங்கள் பயன் அடைந்து வருகின்றன.

கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ம் தேதி கிருஷ்ணகிரி அணையின் 7-வது மதகு கதவில் சிறிய அளவில் பழுது ஏற்பட்டது. நவீன தொழில்நுட்ப உதவியுடன் பழுது சரிசெய்யப்பட்டது. இதையடுத்து 2016-ம் ஆண்டில் அணையில் ரூ.1.10 கோடி மதிப்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 8 மதகுகளிலும் சிறிய அளவிலான பணிகள் மேற்கொண்டனர். அப்போது 8 மதகுகளின் உறுதித்தன்மை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

இந்நிலையில், கடந்த மாதம் 29-ம் தேதி பிரதான முதல் மதகின் கதவில் உடைப்பு ஏற்பட்டது. கடந்த 100 நாட்களுக்கும் மேலாக அணையில் 51 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்ட நிலையில், உடைந்த மதகு கதவின் வழியே அதிகளவு தண்ணீர் வீணாக வெளியேற தொடங்கியது. இதையடுத்து உடைந்த மதகு கதவு பகுதியில் நீர் அழுத்தத்தை குறைக்க மேலும் 6 மதகுகள் வழியாக அதிகபட்சமாக விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி உடைந்த மதகு மற்றும் 2 மதகுகள் வழியே விநாடிக்கு 4,870 கனஅடி தண்ணீர் ஆற்றிலும், பாசனக் கால்வாயிலும் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையிலிருந்த 1.55 டிஎம்சி தண்ணீரில், 1.20 டிஎம்சி வரை வெளியேற்றப்பட்டு வீணாக கடலுக்குச் சென்றுள்ளது. தற்போது 405.90 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே அணையில் உள்ளது. அணையின் தண்ணீர் இருப்பு 36.20 அடியாக உள்ளது. மேலும் 4 அடி நீர்மட்டத்தை குறைத்து, மதகின் கீழ் தண்ணீர் சென்றால்தான் உடைந்த மதகு கதவை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்கின்றனர் பொதுப்பணித்துறை அதிகாரிகள். இதன் காரணமாக 2-ம் போக நெல் சாகுபடி பாதிக்கப்படும் என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கதிரவன் கூறியதாவது: அணையில் 36 அடிக்கு தண்ணீர் உள்ளது. மேலும் 4 அடி குறைக்கப்படும்போது 32 அடியில் கான்கிரிட்டின் கீழ் தண்ணீர் இருக்கும். அதனைத் தொடர்ந்து உடைந்த மதகு கதவு முற்றிலும் அகற்றப்பட்டுவிடும். மத்திய நீர் ஆணையத்தில் இருந்து வல்லுநர்கள் ஆய்வு செய்துவிட்டு, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

உடைந்த மதகை அகற்றும் பணிகள் நாளை (டிச. 3-ம் தேதி) தொடங்கப்படலாம் எனத் தெரிகிறது.இந்த பணிகளின்போதே மற்ற மதகுகளின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம். தற்போது 4 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர்வரத்து உள்ளதால், பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது.

பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேறுவதை தடுத்துவிட்டுதான் பணிகளைத் தொடங்க முடியும். அனைத்து பணிகளையும் ஒரு வாரத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். ஏற்கெனவே பாசனக் கால்வாயில் தண்ணீர் விடப்பட்டு அனைத்து நீர் ஆதாரங்களும் நிரப்பப்பட்டுள்ளன. தொடர் மழையால் கிணறுகளும் நிறைந்து,

ஆழ்குழாய்க் கிணற்றிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் 99 சதவீதம் 2-ம் போக நெல்சாகுபடிக்கு பாதிப்பு ஏற்படாது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

15 அடிக்கு வண்டல் மண்

தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராமகவுண்டர் கூறும்போது, ‘‘கிருஷ்ணகிரி அணை கட்டப்பட்டு 60 ஆண்டுகள் கடந்தும் இதுவரை தூர்வாரப்படவில்லை. மதகுகளும் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. அணையில் 15 அடிக்கு மேல் வண்டல் மண் நிறைந்துள்ளது. தற்போது 32 அடிக்கு கீழ் தண்ணீர் வந்தால், 10 அடி தண்ணீர்கூட அணையில் இருக்காது. அணையை தூர்வர வேண்டும். மதகுகளை முறையாக பராமரிக்க வேண்டும்’’ என்றார்.

கால்வாய் சீரமைப்பில்லை

தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சென்னையநாயுடு கூறும்போது, ‘‘நிகழாண்டில் பெய்த மழையால் பெரும்பாலான ஏரிகள் நிறைந்துள்ளன. பாளே குளி ஏரியில் சந்தூர் ஏரி வரை 28 ஏரிகளுக்கு கடந்த 30 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. 3 மீட்டர் அகலம் இருக்க வேண்டிய கால்வாய், 1 மீட்டர் அளவுக்கு உள்ளதால் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்குச் சென்றடைவதில் சிக்கல் உள்ளது. அணை மதகு உடைந்து தண்ணீர் வீணாக ஆற்றில் சென்று கடலில் கலக்கும் நிலையில், பாசனக் கால்வாய்களைச் சீரமைத்திருந்தால், சிறு குட்டைகளில்கூட தண்ணீரை சேமித்திருக்கலாம்’’ என்றார்.

மதகு சேதமடைய காரணம் என்ன?

தலைமை பொறியாளர் முருகு பாலசுப்பிரமணியன் ஆய்வின்போது கூறியதாவது: 60 ஆண்டுகளாக மதகின் கதவுகளில் பெரிய அளவிலான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த 3 மாதங்களாக 51 அடிக்கு மேல் நீர் தேக்கி வைக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டது. தற்போது முதல் மதகில் 20 அடிக்கு கீழ் அதிக நீர் உந்துதல் காரணமாகவோ, அல்லது ஏதேனும் கதவில் மோதியதன் காரணமாகவோ உடைந்து இருக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

ஒரு போக சாகுபடி தண்ணீர் வீண்

கிருஷ்ணகிரி அணையில் மூலம் 2 போகம் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அணையில் இருந்து ஜூன், ஜூலை மாதங்களில் முதல்போக சாகுபடிக்காக வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்களில் 155 கனஅடி தண்ணீர், 120 நாட்களுக்கு விடப்படுகிறது. இதே போல் 2-ம் போக சாகுபடிக்கு 110 நாட்களுக்கு 155 கனஅடி தண்ணீர் விடப்படுவது வழக்கம். ஒவ்வொரு சாகுபடிக்கு அணையில் இருந்து குறைந்தது 1.50 டிஎம்சி தண்ணீர் பாசனத்துக்கு விடப்படுவதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணை மதகு பழுதால் 1.20 டிஎம்சி தண்ணீர் வீணாகி, ஒரு போக சாகுபடி தண்ணீர் கடலுக்கு சென்றுள்ளது.

57 அடிக்கு எதிர்ப்பு

கடந்த 1955-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதி கிருஷ்ணகிரி அணையின் கட்டுமானப் பணி தொடங்கியது. அப்போது, அணையின் உயரம் 57 அடியாக இருக்கக் கூடாது என மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அணையின் மேற்புறம் உள்ள கங்கலேரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தங்க தகட்டில் ரத்தக் கையெழுத்திட்டு, அணையின் உயரத்தை 52 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது என கோரிக்கை விடுத்து அதை அப்போதைய முதல்வர் காமராஜரிடம் வழங்கினர். இதையடுத்து இந்த அணையில் 52 அடி உயரத்துக்கு மட்டும் தண்ணீர் தேக்கி வைக்க காமராஜர் உத்தரவிட்டார்.

நிரம்பிய 102 ஏரிகள்

கிருஷ்ணகிரி அணை பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் சாம்ராஜ் கூறும்போது, ‘‘2 மாதங்களாக அணையில் வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்கள் மூலம் சென்ற தண்ணீர் மூலம் 102 ஏரிகள் நிரம்பி உள்ளன. மேலும், 17 ஏரிகளுக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. மாரச்சந்திரம் தடுப்பணையில் இருந்து சென்ற தண்ணீர் மூலம் 20 ஏரிகளும், படேதலாவ் ஏரியில் இருந்து சென்ற தண்ணீர் மூலம் 3 ஏரிகளும் நிரம்பி உள்ளன. ஏரிகளுக்கு தொடர்ந்து வலது மற்றும் இடதுபுறக்கால்வாய்கள் மூலம் 166 கனஅடி தண்ணீர் சென்றுகொண்டிருப்பதால் ஏரிகள் நிரம்பிவருகின்றன’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்