தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியில் இருந்து விலகி, வேறு பணிக்கு செல்லும் மனநிலையில் பிரவீண்குமார் இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அரசியல்வாதிகளின் விமர்சனங்கள், வழக்கு மிரட்டல் போன்ற காரணங்களால்தான் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியில் இருப்பவர்கள், கடும் விமர்சனத்துக்குள்ளாகும் நிலை அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகிறது. இதனால், யாரும் வர விரும்பாத ஒரு பதவியாக இது மாறி வருகிறது. முன்னாள் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிகள் ஓஜா, நரேஷ்குப்தா போன்றோர் 8 ஆண்டுகளுக்கு மேலாக அந்தப் பதவியில் நீடித்தனர். ஆனால், இப்போது அப்படிப்பட்ட மனநிலையில் தேர்தல் அதிகாரிகள் இல்லை என தெரிகிறது.
தேர்தல் துறையினரை விமர்சிக் கும் போக்கு, நாடு முழுவதிலும் குறிப்பாக தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால் பணிச் சுமையுடன், மனச்சுமையும் அதிகம் உள்ள பதவியாக தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியை கருதுகின்றனர்.
கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி முதல் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்து வரும் பிரவீண்குமார், தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிக்கும் மனநிலையில் இல்லை என தகவல்கள் வெளியாகி யுள்ளன. 2012-ம் ஆண்டு இறுதியி லேயே தன்னை பதவியில் இருந்து விடுவிக்கும்படி தலைமைத் தேர்தல் ஆணையத்தை பிரவீண்குமார் கேட்டுக் கொண்டார். எனினும், சிறப்பாக பணிபுரிந்து வந்த அவரை விடுவிக்க தேர்தல் ஆணையம் விரும்பவில்லை.
ஆனால், தற்போதும் அதே மனநிலையில் பிரவீண்குமார் இருப்பதாக தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 2016 சட்டப்பேரவை தேர்தலுக்குள் மாறுதல் பெற்றுச் சென்றுவிட வேண்டும் என அவர் நினைப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரவீண்குமாரை தொடர்புகொண்டு கேட்டபோது, “இப்பதவிக்கு நியமிக்கும் முன்பு என்னிடம் விருப்பம் எதுவும் கேட்கவில்லை. 2012-ம் ஆண்டு இறுதியில் இப்பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று நான் விருப்பம் தெரிவித்திருந்தது உண்மைதான். ஆனால், அது தொடர்பாக கடிதம் எதுவும் எழுதவில்லை. அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது தற்போதைய மனநிலை பற்றி எதுவும் கூறமுடியாது” என்றார்.
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பும் பின்பும் அவரை எதிர்க்கட்சிகள் அதிக அளவில் விமர்சித்தன. மேலும் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு குடியரசுத் தலைவருக்கு முக்கிய அரசியல் கட்சி கடிதம் எழுதியுள்ளது. இதுபோன்ற செயல்கள் பிரவீண்கு மாருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தி யிருக்கலாம் என்று தேர்தல் துறையினர் சிலர் தெரிவித்தனர்.
நரேஷ்குப்தா கருத்து
இதுகுறித்து முன்னாள் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியான, தற்போதைய மத்திய நிர்வாகத் தீர்ப்பாய உறுப்பினர் (சென்னை கிளை) நரேஷ்குப்தாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
தேர்தல் துறையும், தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியும் விமர்சனத்துக்குள்ளாவது புதிதல்ல. இந்தப் போக்கு இப்போது அதிகரித்து வருகிறது. நான் பதவி வகித்தபோது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால் அதில் முறைகேடு நடந்துவிட்டதாக சில அரசியல் கட்சியினர் விமர்சித்தனர். ஆளும்தரப்பில் இருந்தும், எதிர்க்கட்சித் தரப்பில் இருந்தும் பலவித அழுத்தங்கள் தொடர்ந்து வரும். அதையெல்லாம் தலைமைத் தேர்தல் பதவியில் இருப்பவர்கள் சமாளித்தாக வேண்டும்.
எனக்கு கொலை மிரட்டல் கடிதங்கள்கூட வந்திருக்கின்றன. பணிச்சுமைக்கு அப்பாற்பட்ட அச்சுறுத்தல்களையும் சமாளிக்க வேண்டியுள்ளது. வாக்காளர் பட்டியல் பணியை தாமதப்படுத்தக்கூட சில இடங்களில் இருந்து நெருக்குதல்கள் வந்தன. அதனால்தான் தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியென்பது, மற்ற அதிகாரிகள் வரத் தயங்கும் பணியாக மாறிவருகிறது. நீதிமன்ற வழக்குகளைச் சந்திக்கவும் வேண்டி யுள்ளது. தற்போதைய தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். இவ்வாறு நரேஷ்குப்தா கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
37 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago