பேரூரில் ரூ.4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

By செய்திப்பிரிவு

சென்னை: பேரூரில் ரூ.4,276.44 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்நிலையம் அமைக்கும் பணி டிசம்பர் 2026-க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக. 21) தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (JICA) நிதியுதவியுடன் செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பேரூரில், 4 ஆயிரத்து 276 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

மீஞ்சூரில் மறைந்த முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம்: வளர்ந்து வரும் சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களை வடிவமைத்து, நிறுவி, இயக்கி மற்றும் திருப்பித் தரும் அடிப்படையில் மீஞ்சூரில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு அன்றைய ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சரான தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் 25.02.2007 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையத்தின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் முடிக்கப்பெற்று, அன்றைய முதல்வர் கருணாநிதியால் 31.07.2010 அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையத்திலிருந்து கிடைக்கக்கூடிய குடிநீர் மூலம், வடசென்னை பகுதிகளான மணலி, மாதவரம், எண்ணூர், கத்திவாக்கம், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி பகுதிகளில் வசிக்கும் சுமார் 10 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகின்றார்கள்.

நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்: இதனைத் தொடர்ந்து, நெம்மேலியில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கான திட்டப் பணிகளை அன்றைய துணை முதல்வரான மு.க.ஸ்டாலினால் 23.02.2010 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

தற்போது சீரான முறையில் இயங்கிவரும் இந்நிலையத்தின் மூலம், தென்சென்னை பகுதிகளாகிய சோழிங்கநல்லூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், பெருங்குடி, கொட்டிவாக்கம், பாலவாக்கம், திருவான்மியூர், வேளச்சேரி, தரமணி, பள்ளிப்பட்டு, அடையாறு, பெசன்ட் நகர், நந்தனம், எம்.ஆர்.சி. நகர், ராஜா அண்ணாமலைபுரம், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 9 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

மேலும், நெம்மேலியில் கூடுதலாக நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இப்பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதன்மூலம், உள்ளகரம்-புழுதிவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், புனித தோமையார் மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசம்பேட்டை மற்றும் பல்லாவரம் ஆகிய பகுதிகளில் உள்ள 9 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.

நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன்: இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் வளர்ச்சியினைத் தொடர்ந்து சென்னைக்கு அருகாமையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாலும், பெருகிவரும் வளர்ச்சிக்கேற்ப எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு போதுமான அளவில் குடிநீர் வழங்கும் பொருட்டும், பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்துக்கு தமிழக முதல்வர் இன்றையதினம் அடிக்கல் நாட்டினார். இந்நிலையம் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலையமாக அமையவுள்ளது. இந்நிலையம் அமைக்கும் பணி டிசம்பர் 2026க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

இந்நிலையத்தில், கடல்நீரை குடிநீராக்க 1150 மீட்டர் நீளத்துக்கு கடலுக்குள் HDPE குழாய்கள் பதிக்கப்படும். மேலும், இந்நிலையத்தில் அமைக்கப்படவுள்ள நீர் கரைந்த காற்று அலகுகள் (Dissolved Air Floatation) மற்றும் இரட்டை ஈர்ப்பு மணல் வடிகட்டி அலகுகள் (Dual Media Filter) மற்ற வழக்கமான நிலையங்களை விட நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அலகுகள் மூலம் கடலில் உள்ள கசடுகள் (மிதப்பவை, துகள்கள்) அகற்றிய பின்னர் கடல்நீரை குடிநீராக்கும் திறனை நிலையாகப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்நிலையத்திலிருந்து போரூர் வரை 59 கி.மீ நீளத்துக்கு குடிநீர் குழாய்கள் பதிக்கப்படும்.

இந்த நிலையத்தின் மூலம், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு அருகாமையில் உள்ள 20 ஊராட்சிப் பகுதிகளில் உள்ள 22.67 லட்சம் மக்கள் பயன் அடைவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE