திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே அதிகத்தூரில் கூவம் ஆற்றில் குறுக்கே நடைபெற்று வரும் தடுப்பணை அமைக்கும் பணி, வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் முடிவுக்கு வருகிறது. இதன் மூலம் அதிகத்தூர் சுற்றுவட்டார பகுதிக்கு குடிநீர் பிரச்சினை நீங்கும் என கூறப்படுகிறது.
திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் பாயும் முக்கிய ஆறான கூவம் ராணிப்பேட்டை மாவட்டம், கேசாவரம் பகுதியில், கல்லாறின் கிளை ஆறாக உருவாகி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் வழியாக சென்னையில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. கூவம் ஆற்றின் மொத்த நீளமான 72 கி.மீ.ல் பெரும் பகுதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளன.
ஆறாக ஓடும் கூவம் திருவேற்காட்டில் இருந்து கடலில் கலக்கும் இடம் வரை சாக்கடை ஆறாக ஓடுகிறது. அதே நேரத்தில், கூவம் ஆற்றின் குறுக்கே திருவள்ளூர் மாவட்டத்தில் புதுமாவிலங்கை, புட்லூர், அரண்வாயில், சோரஞ்சேரி, கண்ணப்பாளையம், காடுவெட்டி ஆகிய இடங்களில் தடுப்பணைகளும், கொரட்டூரில் அணைக்கட்டும் உள்ளன. இந்த அணைகளால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், திருவள்ளூர் அருகே அதிகத்தூர் மற்றும் ஏகாட்டூர் ஆகிய இரு கிராம பகுதிகளில் கூவம் ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை அமைக்கும் பணி கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. அப்பணி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது
இதுகுறித்து, நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: வடகிழக்கு பருவமழையின்போது, கூவம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம், வீணாக கடலில் கலக்கிறது. அதை தடுக்கும் வகையிலும் அதிகத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையிலும் அதிகத்தூர்- ஏகாட்டூர் ஆகிய இரு கிராம பகுதிகளில் கூவம் ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை அமைக்க அரசு திட்டமிட்டது.
அத்திட்டத்தின்படி ரூ.17.70 கோடியில் புதிய தடுப்பணை அமைக்கும் பணி, கடந்த பிப். 3-ம் தேதி தொடங்கியது. 2024 பிப்ரவரியில் இந்த பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 200 மீட்டர் நீளம், 1.50 மீட்டர் உயரம் கொண்ட தடுப்பணையில் 4 ஷட்டர்கள், வெள்ள தடுப்பு சுவர்கள் அமைக்கும் பணி உள்ளிட்ட 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
தடுப்பணையின் மேல் பகுதி, கீழ் பகுதிகளில் இருபுறமும் 4 கி.மீ. தூரத்துக்கு சவுடுமண் மூலம் கரைகள் அமைக்கும் பணி,விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த புதிய தடுப்பணை அமைக்கும் பணி வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் முடிவுக்கு வரும். தொடர்ந்து, பயன்பாட்டுக்கு வரும் தடுப்பணையில் 50 மில்லியன் கனஅடி நீரை அதாவது 2 கி.மீ. தூரத்துக்கு ஆற்றில் நீரை தேக்கி வைக்கலாம். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
இதன்மூலம் திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மூலம் 540 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, பொதுமக்களின் குடிநீர் தேவையும் கணிசமாக பூர்த்தியாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
45 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago