நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் போராட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

நீட் விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தை தொடங்கி வைத்து திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பேசும்போது, “இந்தி திணிப்பை எதிர்ப்பதில் தமிழகம் முன்னணியில் இருந்ததோ, அதேபோல நீட் தேர்வுக்கு எதிரானப் போராட்டத்திலும் முன்னணியில் இருப்போம். உதயநிதி ஸ்டாலின், தனது தாத்தாவைப்போல வேகமாகச் செயல்படக் கூடியவர். அவரது வேகம் திமுக இளைஞர்களுக்கு அவசியம். நீட்டுக்கு எதிரான தொடர் போராட்டங்களை உதயநிதி அறிவிப்பார்” என்றார்.

இதில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், கிரிராஜன், என்.ஆர்.இளங்கோ, வில்சன், திமுக மாணவரணிச் செயலாளர் எழிலரசன், தலைவர் ராஜீவ்காந்தி, மருத்துவரணிச் செயலாளர் நா.எழிலன், தலைவர் கனிமொழி சோமு, மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் எம்.பி. விஷ்ணுபிரசாத் ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.

போராட்டத்தின்போது, அரியலூர் மாணவி அனிதா தொடர்பான காணொலி திரையிடப்பட்டது. அப்போது, அமைச்சர் உதயநிதி கண்கலங்கினார்.

திமுக விவசாய அணி துணைச் செயலாளர் அரியப்பன் மகன் அன்பானந்தம்-ஸ்வர்ணப்பிரியா ஆகியோரது திருமணம், முதல்வரின் முகாம் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் மணமக்கள் இருவரும் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தின் நிறைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

நீட் விவகாரத்தில் அரியலூர் அனிதா முதல் குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன் வரை 21 உயிர்களைப் பலிகொடுத்துள்ளோம். இவையெல்லாம் தற்கொலையல்ல, கொலை. இதற்குக் காரணம் மத்திய பாஜக அரசு, துணை நின்றது அதிமுக.

நீட் குறித்து கடந்த 5 ஆண்டுகளாகப் பேசி வருகிறேன். இந்தப் போராட்டத்தில் இறந்தவர்களின் அண்ணனாகப் பங்கேற்கிறேன். போராட்டத்தில் பங்கேற்றால் அமைச்சர் பொறுப்பு பறிக்கப்படும் என்றனர். உறுதிமொழியை மீறிவிட்டதாக அதிமுக வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். இதில் அமைச்சர் பதவி பறிபோனால் போகட்டும்.

ஆளுநர் நீட்டுக்கு பயிற்சி வகுப்பு நடத்தினார். அதில் பேசிய ஒரு மாணவியின் தந்தை அம்மாசியப்பன், “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்றார். ஆனால் ஆளுநர் திமிராக “முடியாது” என்றார். ஆளுநர் என்பவர் தபால்காரர்தான். ஆளுநருக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறதா?

தற்போது ஆளுநரிடம் பேசியவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாஜக சார்பில் புகார் கொடுத்துள்ளனர். அம்மாசியப்பன் வேலைக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், நாங்கள் சும்மா விடமாட்டோம்.

நீட் விலக்கு தொடர்பாக அனைத்து முயற்சிகளையும் முதல்வர் மேற்கொண்டு வருகிறார். நீட்டுக்கு எதிரான போராட்டம் இத்துடன் முடிந்துவிடாது. கல்லூரி மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். மாடு பிடிக்க சண்டை போட்ட நாம், மாணவர்கள் உயிருக்காக சண்டை போட மாட்டோமா? ஆனாலும், மாணவர்கள் பொறுமைகாக்க வேண்டும்.

தமிழகத்தில் நிச்சயம் நீட் தேர்வு ரத்தாகும். ராகுல் காந்தி இதற்கான உறுதி அளித்துள்ளார். இந்த போராட்டம் இத்துடன் நிற்காது. அடுத்த போராட்டம், கட்சி தலைவர் அனுமதி பெற்று டெல்லியில் நடத்தப்படும். இவ்வாறு உதயநிதி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE