நிலவின் தென் துருவத்தில் சந்திரயானின் ‘லேண்டர்’ கலன் நாளை மறுநாள் தரை இறங்குகிறது: இறுதிகட்டப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்

By செய்திப்பிரிவு

சென்னை: நிலவில் தரையிறங்கி ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சுமார் ரூ.615 கோடியில் வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதன்பிறகு, பூமியை சுற்றிவந்த விண்கலம் ஆக.1-ம் தேதி பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து விலக்கப்

பட்டு நிலவை நோக்கி செல்லுமாறு அதன் பயணப் பாதை மாற்றப்பட்டது. 5 நாள் பயணத்துக்கு பிறகு, ஆக.5-ம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான் நுழைந்தது.

நிலவில் பத்திரமாக லேண்டரை தரையிறக்குவதற்கான பணி வரும் 23-ம் தேதி மாலை 5.30 மணி அளவில் மேற்கொள்ளப்பட உள்ளது. எதிர்விசையை பயன்படுத்தி லேண்டரின் வேகம் படிப்படியாக குறைக்கப்படும். அதன் வேகம் பூஜ்ஜிய நிலையை எட்டியதும், அதில் உள்ள சென்சார்கள் மூலம் தரையிறங்குவதற்கான சரியான இடம் தேர்வு செய்யப்பட்டு, நிலவில் மெதுவாக விண்கலம் தரையிறக்கப்படும்.

நிலவில் லேண்டரை தரையிறக்குவதுதான் இத்திட்டத்திலேயே மிகவும் சவாலான பணி. இதற்கு 15 நிமிடம்தான் ஆகும் என்றபோதிலும், 4 ஆண்டுகால உழைப்புக்கான முழு வெற்றியும் இதில்தான் அடங்கியுள்ளது. கடந்த முறை சந்திரயான்-2 திட்டம் இந்த கட்டத்தில்தான் தோல்வியை சந்தித்தது என்பதால், அந்த அனுபவத்தின் அடிப்படையில் சந்திரயான்-3 லேண்டரில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த முறை லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தடம் பதிக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர். லேண்டர் தரையிறங்கிய பிறகு, அதில் உள்ள ரோவர் வாகனம் வெளியே வந்து தனது ஆய்வுப் பணியை மேற்கொள்ளும்.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில், ‘லேண்டர் கலன் சீரான இயக்கத்தில் உள்ளது. தொடர்ந்து லேண்டர் தனது உட்புற சோதனைகளை செய்து கொண்டு, தரையிறங்க நிர்ணயிக்கப்பட்ட பகுதியில் சூரிய உதயத்துக்காக காத்திருக்கும். அனைத்து செயல்பாடுகளையும் முடித்து, நிலவின் தென்துருவத்தில் ஆக.23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு லேண்டர் தரையிறங்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE