குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு

By இரா.கார்த்திகேயன்

‘ஊ

ருக்கு ஊரு மரங்களை வெட்டிச் சாய்க்கிறாங்க. ஆனா, நம்ம ஊரு காலேஜ்ல பசங்களே குளம் வெட்டி, மரங்களை வளக்குறாங்கப்பா..’ திருப்பூரிலுள்ள சிக்கண்ணா அரசு கலை கல்லூரியைப் பற்றித்தான் நண்பர் ஒருவர் நமக்கு இப்படியொரு தகவலை தட்டிவிட்டிருந்தார்.

ஒரே மாதத்தில் வெட்டிய குளம்

திருப்பூருக்கும் அதைச் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்களுக்கும் கல்விக்கு கலங்கரை விளக்கமாக இருப்பது சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி. 35 ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கும் இந்தக் கல்லூரியில் சுமார் 2,700 மாணவ - மாணவியர் கல்வி பயில்கிறார்கள். திருப்பூரை பொறுத்தவரை நிலத்தடி நீருக்கு எப்போதுமே பஞ்சம் தான். ஒரு வருடத்துக்கு முன்பு வரை சிக்கண்ணா கல்லூரியிலும் இதுதான் நிலமை. ஆனால், இப்போது இங்கு தண்ணீர் பிரச்சினை வெகுவாகத் தீர்ந்தது என்கிறார்கள். காரணம், இங்கு என்.சி.சி. மாணவர்கள் சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் வெட்டியிருக்கும் குளம்.

கல்லூரி வளாகத்துக்குள் குளம் வெட்டி மழை நீரைத் தேக்க வேண்டும் என்பது, இந்தக் கல்லூரியின் என்.சி.சி. யூனிட் 2-ல் உள்ள மாணவர்கள் ஒன்றரை வருடத்துக்கு முன்பு எடுத்த தீர்மானம். கல்லூரி மைதானத்தில் நடைப்பயிற்சி செய்வோர் சங்கம் மாணவர்களின் இந்த முயற்சியைப் பாராட்டி, ஒன்றரை லட்ச ரூபாய் நிதியைத் திரட்டிக் கொடுத்தது. அதைவைத்துக் கொண்டு மளமளவென காரியத்தில் இறங்கினார்கள் மாணவர்கள். வகுப்பறை நேரங்களில் இல்லாமல் தினமும் மாலை நேரத்தில் மட்டும் குளம் வெட்டும் பணியைத் தொடர்ந்தார்கள். அப்படி, 78 மாணவர்கள் சேர்ந்து ஒரே மாதத்தில் இந்தக் குளத்தை வெட்டி முடித்தார்கள்.

உயர்ந்தது நிலத்தடி நீர்

இந்தத் தகவல்களை நம்மிடம் மகிழ்வோடு பகிர்ந்து கொண்ட என்.சி.சி. யூனிட் 2-ன் ஒருங்கிணைப்பாளர் ஆ.மோகன்குமார், “மழைக் காலங்களில் கல்லூரி வளாகத்தில் சேகரமாகும் மழை நீரானது வீணாய் சாக்கடையில் போய்ச் சேர்ந்து கொண்டிருந்தது. அதில் ஒருபங்கு நீரை தேக்கி வைத்து நிலத்தடி நீரை பாதுகாப்பதற்காகவே இந்தக் குளத்தை வெட்டினோம். இப்போது இந்தக் குளத்தில் ஐந்து அடிக்கு தண்ணீர் தேங்கியிருக்கிறது. அதில் இந்தப் பகுதியிலுள்ள சிறுவர்கள் ஆனந்தக் குளியல் போடுவதைப் பார்க்கையில் நமக்கும் உற்சாகம் பிறக்கிறது.

இந்தக் குளத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதால் கல்லூரிக்குள் உள்ள ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்திருக்கிறது. முன்பெல்லாம் நூறடிக்கு தோண்டினாலும் தண்ணீர் வராது. ஆனால், இப்போது நாற்பது அடியிலேயே தண்ணீர் கிடைக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் இந்தக் குளம் 8 முறை மழை நீரால் முழுவதுமாக நிரம்பியது” என்று சொன்னார்.

 

கலாம் கனவுப் பூங்கா

அப்துல் கலாமுக்கு புகழஞ்சலி செலுத்தும் முகமாக ‘கலாம் கனவுப் பூங்கா’ ஒன்றையும் என்.சி.சி. மாணவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். சுமார் இரண்டரை ஏக்கரில் உருவாக்கப்பட்ட இந்தப் பூங்காவில் புங்கை, வேம்பு, மூங்கில், கொன்றை உள்ளிட்ட மர வகைகள் நடப்பட்டுள்ளன. இங்கு, ஒரு மாணவனுக்கு ஒரு மரக்கன்று என்ற அடிப்படையில் மரங்களை நட்டு வளர்த்து வருகிறார்கள். மரங்களை சிறப்பாக வளர்த்து பராமரிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக கல்லூரி நிர்வாகத்திலிருந்து பாராட்டுப் பட்டயமும் பரிசும் வழங்குகிறார்கள். மழையில்லாத நாட்களில், மாணவர்கள் வெட்டிய குளத்திலிருந்து சொட்டு நீர்ப்பாசன முறையில் பூங்காவுக்கு தண்ணீர் விடப்படுகிறது.

“கலாம் கனவுப் பூங்கா இவ்வளவு செம்மையாக வடிவம் பெறுவதற்கு எங்கள் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சண்முகசுந்தரம், முன்னாள் மாநகர காவல் துணை ஆணையர் திருநாவுக்கரசு, கலாம் அமைப்பின் தலைவர் திருச்செந்தூரான், கலாமின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ், திருப்பூர் ‘டெக்பா’ தலைவர் ஸ்ரீகாந்த், ஆடிட்டர் சின்னச்சாமி உள்ளிட்ட பலர் எங்களை பின்னாலிருந்து இயக்கியிருக்கிறார்கள்” என்கிறார்கள் என்.சி.சி. மாணவர்கள்.

தேடி வரும் பறவைகள்

கூடவே இன்னொரு தகவலையும் பதிவு செய்த அவர்கள், “கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் வளர்ந்து பசுமை படர ஆரம்பித்த பிறகு, அரிய வகை பறவைகளும் வலம் வரத் தொடங்கியிருக்கின்றன. அப்படி வரும் பறவைகளுக்காக இணையத்தில் தனியாக ஒரு பக்கம் தொடங்கி, அதில், பறவைகள் குறித்த விவரங்களை பதிவேற்றம் செய்கிறோம்” என்றார்கள்.

கலாம் பூங்காவைப் போலவே கடந்த ஜூலை முதல் தேதி, இன்னொரு பூங்காவுக்கும் அடித்தளம் போட்டி ருக்கிறார்கள் இந்த மாணவர்கள் ‘சுவாமி விவேகானந்தா பசுமைப் பூங்கா’ என்று பெயர் சூட்டியுள்ள இந்தப் பூங்காவில், முதல்கட்டமாக 255 மரக்கன்றுகளை நட்டிருக்கிறார்கள். இதற்கான நீராதாரத்தை உருவாக்க இங்கும் ஒரு குளத்தை வெட்டப் போகிறார்களாம்.

“சுற்றுச் சூழல் மீது கொஞ்சமும் அக்கறை இல்லாமல் மரங்களை வெட்டிச் சாய்க்கும் இந்தக் காலத்தில், குளத்தை வெட்டி நிலத்தடி நீரைச் சேகரிப்பதுடன் மரக்கன்றுகளையும் நட்டு வளர்க்கும் இந்த மாணவர்களுக்கு தலைவணங்க வேண்டும்” என்கிறார் கல்லூரி வளாகத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வோர் சங்கத்தின் தலைவரும், கல்லூரியின் முன்னாள் மாணவருமான கண்ணன்.

தலை வணங்குவோம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்