புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு நீட், மாநில அந்தஸ்து பற்றி கவலை இல்லை: சிவா விமர்சனம்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமிக்கு நீட் தேர்வு பற்றியும், மாநில அந்தஸ்து பற்றி எந்த பார்வையும் இல்லை. 5 ஆண்டு முதல்வராக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்” என்று அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சிவா சாடியுள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய பாஜக அரசு, தமிழக ஆளுநர்களைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. அதேபோல் கல்வியில் தமிழகத்தைப் பின்பற்றும் புதுவை மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும். புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மருத்துவக் கல்வியில் வழங்க வேண்டும். நீட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி தனது நிலைப்பாடை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும், நீட் தேர்வுக்கு ஆதரவாக செயல்படும் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசையைக் கண்டித்தும், புதுவை மாநில திமுக சார்பில் சுதேசி மில் அருகே உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

புதுவை மாநில திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி இணைந்து நடத்திய போராட்டத்துக்கு திமுக மாநில அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான சிவா தலைமை வகித்தார். உண்ணாவிரதப் போராட்டத்தில் அவைத் தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற திமுக மாநில அமைப்பாளர் சிவா பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: ''நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை - எளிய மக்களுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு தொடர்ந்து கிடைக்க வேண்டும். இதனை மத்திய அரசு மறுத்து வருகிறது. நாங்கள் குழப்புவது போல ஆளும் கட்சியினர் பொய் பிரசாரம் செய்கிறார்கள். 2024-ல் மத்தியில் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும். கல்வியை மத்திய பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றப்படும். அப்போது நீட் தானாகவே ஒழிந்துவிடும். புதுச்சேரி, தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக இயற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர்கள் தடுக்கின்றனர்.

நீட் எதிர்ப்பு என்ற போராட்டத்தை தொடர்ந்து நாங்கள் முன்னெடுப்போம். மருத்துவ படிப்பில் 10 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கடந்த ஆட்சியில் இயற்றப்பட்ட, தீர்மானத்தை ஒப்புதல் வாங்கியிருக்கலாம், ஆனால் புதிதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அனுப்பி ஒப்புதல் பெறுகிறேன் என மக்களை ஏமாற்றி வருகின்றனர். புதுச்சேரி மாநில முதல்வருக்கு நீட் தேர்வு பற்றியும், மாநில அந்தஸ்து பற்றி எந்த பார்வையும் இல்லை. அவருக்கு இதைப் பற்றியெல்லாம் கவலையும் இல்லை, ரங்கசாமிக்கு 5 ஆண்டு முதல்வராக இருக்க வேண்டும் அதுதான் முக்கியம்.

நீட் தேர்வில் திமுக அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏழை மாணவர்களுக்கான உரிமைக்காக போராடி வருகிறோம். இது அரசியலுக்கானது அல்ல, மாணவர்களுக்கான அத்தியாவசியமான போரட்டம். நீட் தேரேவு களையப்படும் வரை போராட்டம் தொடரும்” என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE