அதிமுக மாநாடு | மதுரையில் பல கோடி ரூபாய் வர்த்தகம் - தொழிலாளர்கள் முதல் வியாபாரிகள் வரை பலன்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரையில் பல லட்சம் பேர் திரண்ட அதிமுக மாநில மாநாட்டால், சாலையோர சிறு கடைகள் முதல் பெரும் வணிக நிறுவனங்கள் வரை நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைப்பெற்று சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை பலரும் பலனைடைந்துள்ளனர்.

மதுரை அதிமுக மாநில மாநாடு இன்று காலை முதல் இரவு வரை திருவிழா போல் நடந்துகொண்டிருக்கிறது. இந்த மாநாட்டுக்காக வளையங்குளத்தில் நிலம் சீரைமைப்பு பணிகள், பந்தல், மேடை ஏற்பாடு பணிகள் கடந்த 45 நாட்களுக்கு முன்பிருந்தே தொடங்கி நடந்தது. மாநாட்டின் நுழைவு வாயில், அரண்மனை போன்ற தோற்றத்தின் பின்னணியில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பிரமாண்ட புகைப்படங்கள், அதன் நடுவில் அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமியின் புகைப்படமும் அமைக்கப்பட்டிருந்தது. மாநாட்டு புகைப்பட கண்காட்சி, இரட்டை இலை சின்னம், அண்ணாதுரை, எம்ஜிஆர், ஜெயலலிதா, கே.பழனிசாமி ஆகியோரின் பிரமாண்ட 50 அடி கட் அவுட்கள் போன்றவை மாநாட்டு பந்தல் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தன.

500 ஏக்கரில் மாநாட்டு பந்தல் அமைப்பதற்காக, பல நூறு ஜேசிபி இயந்திரங்களை கொண்டு வலையங்குளத்தில் மாநாடு நடந்த இடத்தை சீரமைக்கும் பணியில் 1000-க்கும் மேற்பட்ட தொழிலார்கள் ஈடுபட்டனர். பந்தல், மேடை அலங்கார பணிகளுக்காக பெங்களூரு, சென்னை போன்ற பெரும் நகரங்களில் இருந்து வந்த டெக்கரேஷன் நிறுவனங்களின் தொழிலாளர்கள் மாநாடு நடந்த இடத்தில் முகாமிட்டு அப்பணிகளை மேற்கொண்டனர்.

மேலும், மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களுக்காக 10 லட்சம் பேர் சாப்பிடும் வகையில் மூன்று வேளையும் சாப்பாடு தயாரிக்கும் பணிக்காக 10 ஆயிரம் சமையல் கலைஞர்கள் மதுரையில் கடந்த 4 நாட்களாக வந்து, உணவு தயாரிக்கும் முன்னேற்பாடு பணியில் ஈடுபட்டனர். உணவுடன் தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்பட்டன.

மாநாடுப் பணிகள் நடக்க தொடங்கிய நாள் முதல் இன்று மாநாடு நடப்பது வரை, கோடிக்கணக்கான ரூபாயை அதிமுக செலவு செய்து இந்த மாநாட்டு பணிகளை இதுவரை அதிமுக வரலாற்றிலே நடக்காத வகையில் மிக பிரமாண்டமாக நடத்திக் காட்டியுள்ளனர். அதனால், அதிமுக மாநாட்டை முன்னிட்டு, நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றனர்.

சிறு வியாபாரிகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை இந்த மாநாட்டால் பலனடைந்துள்ளனர். மாநாடு நடந்த 'ரிங்' ரோடு வலையங்குளம் முதல் அருப்புகோட்டை ரோடு, திருமங்கலம் ரோடு, மதுரை விரகனூர் ரோடு போன்ற நான்கு வழிச்சாலைகளில் வழிநெடுக 10 கி.மீ., தொலைவிற்கு சாலையோர கடைகள், பெட்டிக்கடைகள், இரவு நேர ஹோட்டல்கள், டீ கடைகள், குளிர்பான கடைகள் போன்றவை செயல்பட்டன.

இரவை பகலாக்கும் மின்விளக்குகள் அமைத்து 'ரிங்' ரோட்டையையே மின்னொளியில் ஜொலிக்க வைத்தனர். மாநாட்டிற்கு வந்திருந்த தொண்டர்கள், நிர்வாகிகள் மதுரை நகர் மட்டுமில்லாது புறநகரில் உள்ள அனைத்து லாட்ஜூகள், ஹோட்டல்கள் அறைகளை முன்பதிவு செய்து ஆக்கிரமித்தனர். லாட்ஜ் அறைகள், ஹோட்டல் அறைகள் நிரம்பியதால் திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுத்து அதிமுகவினர் தங்க வைக்கப்பட்டனர்.

மாநாட்டில் இன்னிசை கச்சேரி, கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம், நகைச்சுவை நிகழ்ச்சிகள், கரகாட்டம், பேண்டு வாத்தியம், சாகச நிகழ்ச்சிகள், ஹெலிகாப்டர் மலர் தூவம் நிகழ்ச்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்களுக்கு புது வேஷ்டி சட்டைகள், பேட்ஜ் வழங்கி வாகனங்களில் மாநாட்டிற்கு மாவட்டச் செயலாளர்கள் அழைத்து வந்தனர். இதற்காக ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள், கார்கள், வேன்கள், பஸ்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டன.

சிறு தொழிலாளர்கள், மாநாட்டு பந்தலில் பொறி, வடை, டீ, ஐஸ் போன்ற பல்வேறு வகை வியாபாரங்களுக்காக தலைசுமை வியாபாரிகள் தமிழகம் முழுவதும் இருந்து மாநாட்டிற்கு வந்திருந்தனர். மாநாட்டு நடக்கும் கிராமங்களில் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள் தற்காலிக தங்கும் இடங்கள் உருவாக்கப்பட்டு கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டன.

சாலையோர தெரு உணவகங்கள், ஹோட்டல்களில் தொண்டர்கள் ஏராளமானோர் சாப்பிட குவிந்ததால் வழக்கமான வாடிக்கையாளர்கள் சாப்பிட முடியவில்லை. இப்படி நேரடியாகவும், மறைமுகமாகவும் மதுரையில் அதிமுக மாநாட்டில் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்று இருக்க வாய்ப்புள்ளதாக வணிகர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE