மதுரை அதிமுக மாநாடு | செங்கோல், வாள் உடன் இபிஎஸ்... லட்சக்கணக்கில் திரண்ட தொண்டர்கள்!

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ‘வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு’ எனப் பெயரிடப்பட்டுள்ள அதிமுக மாநில மாநாட்டை மதுரையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று காலை 51 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடியேற்றி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பங்கேற்க லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் மதுரை சற்றே ஸ்தம்பித்தது.

அதிமுக பொதுச் செயலாளராக கே.பழனிசாமி பொறுப்பேற்றபோது, அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கி 50 ஆண்டு நிறைவு பெறுவதை தொடர்ந்து அக்கட்சியின் பொன்விழா மாநாட்டை மதுரையில் நடத்துவதாக அறிவித்து இருந்தார். அவர் அறிவித்தப்படி, இன்று (ஆக.20) அதிமுக மாநில மாநாடு, மதுரை அருகே வலையங்குளத்தில் கோலாகலமாக தொடங்கியது.

இரவு முதல்... - சனிக்கிழமை காலை முதலே தமிழகம் முழுவதும் இருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், விமானம், ரயில்கள், பஸ்கள், வேன்கள், கார்களில் மதுரையில் திரண்டனர். பொதுச் செயலாளர் கே.பழனிசாமி, மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று இரவு சேலத்தில் இருந்து கார் மூலம் மதுரையில் வந்தார். கப்பலூரில் நிர்வாகிகள், தொண்டர்கள் வழங்கிய வரவேற்பை ஏற்றுக் கொண்ட அவர், மாநாடு நடந்த ‘ரிங்’ ரோட்டில் இருந்து தனியார் ஹோட்டலில் இரவு தங்கினார்.

மாநாட்டுத் திடலில் உற்சாக வரவேற்பு: இன்று காலை சரியாக 8.45 மணியளவில் மாநாட்டு திடலில் திறந்த வெளி வேனில் பொதுச்செயலாளர் கே.பழனிசாமி வந்தார். வேன் மாநாட்டு நடந்த இடத்தை வந்தடைந்ததும், அவர் திறந்த வெளி வேனியில் ஏறி, தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். கே.பழனிசாமிக்கு கேரளாவின் சென்டை மேளம், பேண்டு வாத்தியம், தாரை தப்பட்டை முழங்க கிராமிய கலை நிழ்ச்சிகள், பொய் கால் குதிரை ஆட்டம், கரகாட்டம் கலை நிகழ்ச்சிகளுடன் சீருடை அணிந்த அதிமுக மகளரணியினரின் பூரண கும்ப மரியாதையுடன் அவருக்கு அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு வழங்கினர். வாள் சண்டை நிகழ்ச்சி உள்ளிட்ட சாகச நிகழ்ச்சிகளும் நடந்தது.

51 அடி உயர கொடிக்கம்பத்தில்... - அதன்பின், மாநாட்டு திடல் முன் அமைக்கப்பட்டிருந்த 51 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது குவிந்திருந்த தொண்டர்கள் வாழ்த்தி கோஷமிட்டனர். வானில் மூன்று முறை வட்டமிட்ட ஹெலிகாப்டர் மூலம் 1 டன் ரோஜா மலர்கள், அவர் மீதும், தொண்டர்கள் மீது தூவி வரவேற்பு வழங்கப்பட்டது.

கறுப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணங்களில் பலூன்களை நிர்வாகிகள் பறக்கவிட்டனர். கே.பழனிசாமி, மாநாட்டு நினைவாக சமாதான புறாக்களை பறக்கவிட்டார். குதிரைகள் புடைசூழ மாநில ஜெ. பேரவை தொண்டர்கள் 3 ஆயிரம் பேருடன், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் பொதுச் செயலாளர் கே.பழனிசாமிக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கினர்.

செங்கோல் பரிசளிப்பு... - மாநாட்டுக்கு ஏற்பாடுகளை முன்னின்று செய்த மாநில ஜெ. பேரவை செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் போன்றோர் வெள்ளி செங்கோல், வாள் போன்ற நினைவுப் பரிசுகளை வழங்கி மாநாட்டுக்கு அவரை வரவேற்றனர்.

புகைப்பட கண்காட்சி திறப்பு: அதன்பின் மாநாட்டு பந்தலை, ரிப்பன் வேட்டி திறந்து வைத்ததோடு நுழைவு வாயில் அருகே அமைக்கப்பட்டிருந்த அதிமுகவின் 51 ஆண்டு வரலாற்றை விளக்கும் புகைப்பட கண்காட்சியை குத்தவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் எம்ஜிஆர், ஜெயலலிதா, பொதுச்செயலாளர் கே.பழனிசாமி ஆகியோரின் அரசியல் வரலாறு, அதிமுக ஆட்சியின் சாதனைகள், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் போன்றவை இடம்பெற்றிருந்தன.

டிஜிட்டல் திரையில் நேரடி ஒளிபரப்பு: மாநாட்டு நுழைவு வாயிலின் இரு புறமும் இரு பிரமாண்ட டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டு மாநாட்டு கொடியேற்று நிகழ்சிகள் முதல் மாநாட்டு திடல், கண்காட்சியை கே.பழனிசாமி திறந்த வைத்தது வரையிலான நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. மாநாட்டு திடல் முன் குவிந்திருந்த லட்சக்கணக்கான தொண்டர்கள், அந்த திரைகளில் நிகழ்ச்சியினை கண்டு ரசித்தனர்.

மேடையில் அமைத்திருந்த பிரமாண்ட டிஜிட்டல் திரையிலும் பந்தலில் அமர்ந்திருந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பார்வையிடும் வண்ணம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. கே.பழனிசாமி கொடியேற்றி, கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டப் பிறகு புறப்பட்டு சென்றார். மாநாட்டு பந்தல் அருகே பரம்புபட்டி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் அவர் ஒய்வு எடுத்தார். மாலை நடந்த மாநாட்டிற்காக மாலை 4.30 மணியளவில் மேடைக்கு கே.பழனிசாமி மீண்டும் வருகை தரவுள்ளார்.

போக்குவரத்து ஸ்தம்பித்தது... - காலை முதல் இரவு வரை மாநாடு முடியும் வரை தொண்டர்கள், நிர்வாகிகள் மாநாட்டு திடலுக்கு வருவதும் செல்வதுமாக இருந்தனர். மாநாட்டு திடலில் ஒரே நேரத்தில் குவிந்தால் பந்தல் தாங்காது என்பதால் தமிழகம் முழுவதும் இருந்து ஒரே நேரத்தில் தொண்டர்கள் குவிவதை தடுக்க, சென்னை மற்றும் வடக்கு, மேற்கு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாிகிகள், தொண்டர்கள் காலை 12 மணி வரை மாநாட்டுக்கு வருவதற்கும், அதற்கு மேல் மதுரை மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் வரும் வகையிலும் அதிமுக நிர்வாகிகள் திட்டமிட்டிருந்தனர்.

ஆனாலும், மதுரையில் மாநாடு நடந்த ‘ரிங்’ சாலையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் வாகனங்களுடன் குவிந்ததால் மதுரை போக்குவரத்தே முழுவதும் ஸ்தம்பித்து. பொதுப்போக்குவரத்து பயணிகளும், சரக்கு வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.

கலைநிகழ்ச்சிகள்: மாநாட்டில் காலை முதல் மாலை வரை தொண்டர்களை மகிழ்விக்க கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை கொடியேற்று விழா நடந்தபிறகு, மாலை கே.பழனிசாமி மேடைக்கு வரும் வரை, பந்தலில் அமர்ந்திருந்த நிர்வாகிகள், தொண்டர்களை மகிழ்விக்க இசையமைப்பாளர் தேவாவின் இன்னிசை கச்சேரி, மதுரை முத்து, ரோபா சங்கர், ராஜலெட்சுமி - செந்தில், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் நடுவராக சிறப்பு பட்டிமன்றம் போன்றவை நடந்தது. இதில், நடிகை விந்தியா, புதுக்கோட்டை செந்தில்குமார், முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், செய்தி தொடர்பாளர் கல்யாண சுந்தரம் போன்றோர் பேசினர்.அதிமுக கட்சி வரலாற்றிலே இதுபோன்ற பிரமாண்ட மாநாடு நடந்தில்லை என இன்று மாநாட்டில் கலந்து கொள்ள வந்த தொண்டர்கள் தெரிவித்தனர். | சிறப்பு ஆல்பம் > களைகட்ட தொடங்கிய மதுரை அதிமுக மாநாடு - போட்டோ ஸ்டோரி

முன்னதாக, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியை யார் கைப்பற்றுவது என்ற அதிகாரப் போட்டியில் கே.பழனிசாமி, சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் தனித்தனியாக அக்கட்சி பிளவுப்பட்டது. தொண்டர்கள், நிர்வாகிகள் யார் தலைமையை ஏற்பது என தடுமாறி நிற்கவே, முதல்வராக இருந்த கே.பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், பெரும்பான்மை நிர்வாகிகள், தொண்டர்கள் ஒருங்கிணைந்து கட்சியை கைப்பற்றினர். உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் கே.பழனிசாமி தலைமையிலான அணியை அதிமுகவாக அங்கீகரித்து அக்கட்சி சின்னமான இரட்டை இலையை அவர்களுக்கு வழங்கியது. அதன்பின் நடந்த உள்கட்சித் தேர்தலில் பொதுச்செயலாளராக கே.பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது எதிர்கட்சித் தலைவராகவும் கே.பழனிசாமி இருக்கிறார் என்பது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE