நிதி நிறுவன மோசடி வழக்குகள் | ஆணையங்களின் விசாரணையை தாமதப்படுத்தும் நிறுவனங்கள் - காலக்கெடு நிர்ணயிக்கப்படுமா?

By கி.மகாராஜன் 


மதுரை: நிதி நிறுவன மோசடி வழக்குகளில் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்குவதற்காக நீதிமன்றங்கள் அமைக்கும் ஆணையங்களுக்கு, மோசடி நிறுவனங்கள் பல்வேறு இடையூறுகளை அளித்து, விசாரணையை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போலி நிதி நிறுவனங்கள் பெயரில் முதலீட்டாளர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் வசூலித்து முறைகேடு செய்வது அதிகரித்து வருகிறது.

இந்த மோசடியில் ஈடுபடுவோர் மீது, தமிழ்நாடு முதலீட்டாளர் பாதுகாப்புச் சட்டம் மற்றும் முறையற்ற முதலீடு வசூல் தடைச் சட்டங்களின் கீழ் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிறுவனம் 125 நிறுவனங்கள் பெயரில் தமிழகம் முழுவதும் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு வசூலித்து மோசடிசெய்த வழக்கை, மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் நிறுவன நிர்வாகிகள் சிலர் முன்ஜாமீன் கோரி தாக்கல்செய்த மனுக்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நியோமேக்ஸ் நிறுவனம் சார்பில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கக் கோரி, தனி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற பல்வேறு நிதி நிறுவன மோசடி வழக்குகளில், மோசடி நிறுவனங்களின் சொத்துகளைக் கையகப்படுத்தி, அவற்றை விற்பனை செய்து, அந்தப் பணத்தை முதலீட்டாளர்களுக்கு திரும்ப வழங்கும் நோக்கில் உயர்நீதிமன்றத்தால் ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆணையங்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும், மோசடி வழக்குகள் இன்னும் முடிவுக்கு வராமல் உள்ளன. அதேநேரத்தில், ஏற்கெனவே மோசடியில் ஈடுபட்டவர்கள் புதிது புதிதாக போலி நிறுவனங்களைத் தொடங்கி மோசடியைத் தொடர்வதும், அந்த நிறுவனங்களிலும் பலர் முதலீடு செய்து மீண்டும் ஏமாறுவதும் தொடர்கிறது.

இதுகுறித்து வழக்கறிஞர்கள் சிலர் கூறியதாவது: மோசடி நிறுவனங்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி பலரும் பணத்தை முதலீடு செய்கின்றனர். ஆனால், அவர்கள் ஏமாற்றப்படும்போது, பணத்தை திரும்பப் பெற்றுத் தரும் நோக்கில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் ஆணையம் அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

ஆனால், மோசடி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஆணையத்தின் விசாரணைக்கு பல்வேறுஇடையூறுகளை அளிக்கின்றனர். தேவையான ஆவணங்களை வழங்காமல் இழுத்தடிப்பது, ஆணையத்தின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதிராக நீதிமன்றத்தில் அடுத்தடுத்து வழக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டைப் போடுவது, ஆணையத்தின் தலைவர் மீதே குற்றச்சாட்டுகளை முன்வைத்து புகார்தாரர்கள் மத்தியில் ஆணைத்தின் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

பொதுவாக, நிதி நிறுவன மோசடி வழக்குகளில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னரே, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்படும்.

ஆனால், நியோமேக்ஸ் நிறுவன மோசடி வழக்கில், விசாரணைதொடக்க நிலையில் இருக்கும்போதே ஆணையம் அமைக்கக் கோருவது, கைது நடவடிக்கையில் இருந்து தப்பும் முயற்சிதான். நிதி நிறுவன மோசடி வழக்குகளில் உரிய தீர்வு கிடைக்க, உயர் நீதிமன்றம் அமைக்கும் நீதிபதிதலைமையிலான ஆணையத்துக்கு, விசாரணையை முடிக்க காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்பக் கிடைக்கும். இவ்வாறு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

விசாரணையின் தொடக்கத்திலேயே ஆணையம் அமைக்க கோருவது, கைது நடவடிக்கையில் இருந்து தப்பும் முயற்சிதான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE