நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுகவினர் இன்று உண்ணாவிரதம் - சென்னையில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக இளைஞர், மாணவர், மருத்துவ அணிகள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெறும் போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.

திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் வெளியிட்டப்பட்ட அறிக்கை: தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ள நீட் தேர்வைத் திணிக்கும் மத்திய பாஜக அரசு, ஆளுநரை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் ஆக.20-ம் தேதி (இன்று) உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும்.

ஆக.20-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைநடைபெற உள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர், கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

நீட் தேர்வுக்கு எதிரான ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் தன்னார்வலர்களும் பொதுமக்களும் தங்களின் கருத்துகளை எடுத்துரைக்கவுள்ளனர். இந்த போராட்டத்தின் பணிகளை இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணிகளின்மாவட்ட அமைப்பாளர், துணைஅமைப்பாளர்கள் ஒருங்கிணைக்கின்றனர்.

சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும்உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் உண்ணாவிரதத்தைதொடங்கி வைக்கவுள்ளார்.

அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், எம்.சண்முகம்,கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், ஆர்.கிரிராஜன், என்.ஆர்.இளங்கோ, பி.வில்சன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதேபோல், மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் அறப்போராட்டத்தில் அமைச்சர்கள், துணைப் பொதுச்செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அணிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

மதுரையில் தள்ளிவைப்பு: மதுரையில் 3 மாவட்ட திமுகவினரும் இணைந்து பழங்காநத்தத்தில் உண்ணாவிரதம் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மதுரையில் இன்று அதிமுக மாநாடு நடப்பதால், திமுக உண்ணாவிரதம் ஆக.23-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுகவினர் கூறும்போது, ‘‘திமுக, அதிமுக வாகனங்கள் ஒரே சாலையில் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்க கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் உண்ணாவிரத தேதி மாற்றப்பட்டுள்ளது’’ என தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE