தமிழகத்தில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் அதிகரிப்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

By செய்திப்பிரிவு

கோவை: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழக அரசு சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் ‘ஸ்டார்ட்-அப் திருவிழா’ கோவை கொடிசியா தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் நேற்று தொடங்கியது.

தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் விழாவைத் தொடங்கிவைத்துப் பேசியதாவது: கோவையைத் தொடர்ந்து, அனைத்து மண்டலங்களிலும் ஸ்டார்ட்-அப் திருவிழாக்கள் நடத்தப்படும். புதிய கண்டுபிடிப்புகள்தான் உலகை ஆள்கின்றன. இத்தகைய படைப்புகளை உருவாக்குவதில் தமிழகம் முன்னேறி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 8 லட்சத்து 98 ஆயிரம் பேருக்கு தொழில் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே முதல்முறையாக 28 குறுந்தொழில் கிளஸ்டர்களுக்கு தமிழகத்தில் உரிய வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. தொழில் உரிமை பெறுவதற்கான நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

தமிழக தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா பேசியதாவது: இந்தியாவே வியந்து பார்க்கும் வளர்ச்சியை தமிழகம் பெற்றுள்ளது. ஜவுளி, ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதில், கோவை முக்கியப் பங்கு வகிக்கிறது.

ட்ரோன் டெஸ்டிங் வசதிகள் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் உள்ளன. ஜவுளி வர்த்தகம் 2027-ம் ஆண்டுக்குள் 350 மில்லியன் டாலர் வரை உயரும். எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தொழில் வளர்ச்சிக்காக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு தொடர்பாக ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், இரு மாதங்களுக்குள் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

கோவையில் தொழில்நுட்ப ஜவுளித் துறை பெரும் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கிறது. தமிழக முதல்வரின் இலக்கான ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி தமிழக அரசு வேகமாக முன்னேறி வருகிறது.

அடுத்த ஆண்டு ஜனவரி 7, 8-ம் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு பிரம்மாண்டமான முறையில் நடத்தப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

விழாவில், சென்னையில் இருந்து காணொலி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் 2,300-ஆக இருந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை, கடந்த 2 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்து தற்போது 6,800-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 109 நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ஆதார நிதி வழங்கப்பட்டுள்ளது.

எங்களுக்கு மக்கள் அளித்த அதிகாரத்தை, வானளாவியதாக கருதுவதில்லை. திருக்குறள்போல நெறிப்படுத்தி, அதிகாரத்தை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறோம். தமிழகத்தை புத்தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற மாநிலமாக மாற்றுவோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.

விழாவில், `ஸ்டார்ட்-அப் தமிழ்நாடு' தகவல் சேவை மையத்தை அமைச்சர் டிஆர்பி.ராஜா தொடங்கிவைத்தார். மேலும், தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதித் திட்டம் மூலம் 20 பயனாளிகளுக்கு ஒப்புதல் ஆணைகளை வழங்கினார். அதேபோல, பெண்களுக்கான சிறப்புத் தொழில் விரிவாக்கப் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனங்களில் தொழில்முனைவோர் குழுக்களை தொடங்கிவைத்தார்.

விழாவையொட்டி அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்துவைத்தார். தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறைச் செயலர் அருண் ராய், தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் மற்றும் இன்னவேஷன் திட்ட இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன், சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன், கொடிசியா தலைவர் திருஞானம், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா, ஆணையர் பிரதாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE