200 அடி நீள டிஜிட்டல் மேடை, ஹெலிகாப்டரில் மலர் தூவல் - மதுரையில் மின்னொளியில் ஜொலிக்கும் அதிமுக மாநாடு

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: அதிமுக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு 500 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள மதுரை மாநாட்டு பந்தல், மேடை மற்றும் முகப்பு அலங்காரம் போன்றவை மின்னொளியில் ஜொலித்தது, மாநாட்டிற்கு வந்த தொண்டர்களை கவர்ந்தது.

அதிமுக பொதுச்செயலாளராக கே.பழனிசாமி பொறுப்பேற்றபோது மதுரையில் கட்சியின் மாநில மாநாடு ஆகஸ்ட் 20ம் தேதி நடத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, இன்று காலை அதிமுக மாநில மாநாடு பொன்விழா எழுச்சி மாநாடாக மதுரையில் நடக்கிறது. மாநாட்டின் நுழைவு வாயிலில் அண்ணாத்துரை, எம்ஜிஆர், ஜெயலலிதா, கே.பழனிசாமியின் ஆள் உயர பிரமாண்ட உருவ கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. மாநாட்டில் திரளும் தொண்டர்கள் அனைவரும் இந்த பிரமாண்ட கட் அவுட்களை பார்க்கும் வகையில் 50 அடி உயர ‘கட் அவுட்’ களாக அமைக்கப்பட்டிருந்தன.

மாநாட்டின் முழு அமைப்பையும் சுற்றிலும் இரவை பகலாக்கும் வகையில் வண்ண வண்ண மின்னொளிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நேற்று இரவு அலங்காரம் செய்யப்பட்டிருந்த அனைத்து மின்விளக்குகளும் எரிய விடப்பட்டிருந்தன. இந்த அலங்காரம், மாநாட்டு ஏற்பாடுகளை நேற்று மாலை துணைப்பொதுச்செயலாளர் கே.பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, அமைப்பு செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா மற்றும் கட்சி நிர்வாகிகள் பார்வையிட்டனர். மின்னொளியில் ஜொலித்த அதிமுக மாநாட்டு பந்தல் பாப்போரை கவர்ந்தது. மதுரையில் நேற்று குவிந்த வெளிமாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், சுற்றுலாத்தலங்களுக்கு வந்தபோது, மாநாட்டின் பந்தல், மேடை, உணவு தயாரிக்கும் கூடங்கள் அனைத்தையும் சுற்றிப்பார்த்து பெருமிதம் கொண்டனர்.

* மாநாட்டு உணவு தயாரிக்கும் கூடங்களில் எந்த ஒரு சிக்கலும் பற்றாக்குறையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு கூடமும் ஒரு முன்னாள் அமைச்சர், ஒரு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் விடப்பட்டது. ஒட்டுமொத்தமாக மாநாட்டு உணவு தயாரிக்கும் பொறுப்பை, முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மேற்பார்வையிட்டார். மொத்தம் இன்று ஒரு நாளில் மட்டும் 10 லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கப்படுகிறது.

* மாநாட்டின் நுழைவு வாயில் அரண்மனை போன்று பின்னணியில் மலைகுன்றுகள் இருப்பது அமைத்து அதில் எம்ஜிஆர், ஜெயலலிதா, கே.பழனிசாமி புகைப்படங்கள் பிரமாண்டமாக பொறிக்கப்பட்டுள்ளன.

* அதிமுகவின் 51 ஆண்டு கால வரலாற்றில் இந்த மாநாடு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. அந்தளவுக்கு தொண்டர்களுக்கு 35 ஏக்கரில் தயாராகும் அறுசுவை விருந்து கூடம், 350 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள வாகனங்கள் நிறுத்துமிடம், 500 ஏக்கர் மாநாட்டு அமைவிடம் இதுவரை தமிழக அரசியல் வரலாற்றிலே இல்லாத அளவிற்கு பிரமாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

* முதல் முறையாக அரசியல் வரலாற்று பொதுக்கூட்டங்கள், மாநாடுகளில் மிக அதி நவீன தொழில்நுட்பத்தில் மதுரை அதிமுக மாநில மாநாடு நடக்கிறது. 5 லட்சம் சதுர அடியில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர்கள், தலைகழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்பட 200 பேர் அமரும் வகையில் மேடை 200 அடி நீளமும், 100 அடி அகலமும் கொண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடை முழுக்க முழுக்க டிஜிட்டல் மேடையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேடையில் தலைவர்கள் பேசும்போது அவர்கள் பேசும் காட்சி மேடையின் பின்புறம் உள்ள திரையில் தொண்டர்கள் பார்க்கும்வகையில் பிரமாண்ட டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டுள்ளது.

* 15 லட்சம் தொண்டர்களுக்கு உணவு தயாரிக்கும் பணி நேற்று இரவு முதல் தொடங்கியது. 90 ஆயிரம் கிலோ அரிசி, 30 ஆயிரம் கிலோ பருப்பு மற்றும் காய்கறிகள், பலசரக்குப்பொருட்கள் பல்வேறு மாவட்ங்களில் இருந்து மாநாட்டு திடலில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பிருந்து இறக்கப்பட்டன. தொண்டர்களுக்கு உணவுடன் ஒரு தண்ணீர் பாட்டிலும் வழங்கப்படுகிறது.

* மாநாட்டின் முன்னேற்பாடு பணிகள் கடந்த 45 நாட்களாக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், அமைப்பு செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா மேற்பார்வையில் நடந்து வந்தது.

* மாநாட்டை தொடங்கி வைக்க நாளை காலை வரும் அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி 51 அடி உயரகம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றும்போது அவருக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் வரவேற்பு வழங்கும் வகையில் ஹெலிகாப்டர் மூலம் வானத்தில் இருந்து மலர்கள் தூவி வரவேற்க சென்னை பகுதியை சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மாலை மீண்டும் மாநாட்டு மேடைக்கு வரும்போதும், இதேபோல் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்க திட்டமிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE