மதுரை: மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அதிமுக மாநாட்டுக்கான ஏற்பாடுகள், கட்சி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நவீனமாகவும், பிரம்மாண்டமாகவும் உள்ளதாக அதிமுக தொண்டர்கள் பூரிப்புடன் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் நாளை (ஆக.20) அதிமுக மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கடந்த 3 நாட்களாக மதுரையில் குவிந்து வருகின்றனர். இவர்களில் பலர் மாநாட்டு திடலை தினசரி பார்வையிட்டு வருகின்றனர். மாநாட்டுத் திடலில் ஏற்பாடுகளை பார்வையிட்ட தொண்டர்கள் “கட்சி வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் மாநாட்டு ஏற்பாடுகள் உள்ளன” என்று தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கும்பகோணம் 38-வது வார்டு அதிமுக துணைத் தலைவர் ஆர்.பாலு (69) கூறுகையில், “கும்பகோணத்திலிருந்து தனியாக ரயிலில் மாநாட்டுக்காக வந்தேன். கோயில் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்றுவிட்டு மாநாட்டுத் திடலை பார்வையிட்டேன். இதுவரை கட்சி சார்பில் நடந்த மாநாடு, பெரிய கூட்டங்களுக்கு தவறாமல் சென்றுவிடுவேன். இதுவரை இவ்வளவு பெரிய பந்தல், சாப்பாடு கூடத்தை பார்த்ததில்லை. அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளனர்” என்றார்.
நாமக்கல் மாவட்டம் புதுக்கோட்டை கிராம அதிமுக கிளை செயலாளர் சைக்கிள் கோவிந்தன் (49) கூறுகையில், “கட்சிக்காக சைக்கிள் பிரச்சாரம் செய்வதால் எனக்கு இந்தப் பெயர். கோவை, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் நடந்த மாநாடுகள் உள்ளிட்ட கட்சியின் பெரிய நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் சென்றுள்ளேன். அந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் இல்லாத வகையில் உணவு, கழிவறை, தண்ணீர் என தொண்டர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளன. திடல், பந்தல் என எல்லாமே பிரம்மாண்டமாக உள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் மாநாட்டில் பங்கேற்க வருமாறு கிளை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளதே பெருமையாக இருக்கிறது” என்றார்.
» கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்றும் திட்டத்தை கைவிடுக: விஜயகாந்த்
» “ஜனநாயகத்துக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார்” - ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன்
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் காங்கீர் (67) கூறும்போது, “1972-ம் ஆண்டிலிருந்து அதிமுகவில் இருக்கிறேன். எம்ஜிஆர் நடத்திய சேலம் மாநாடு, ஜெயலலிதா நடத்திய நெல்லை மாநாடு, கோவை, சேலம், நெய்வேலியில் நடந்த பிரம்மாண்ட ஆர்ப்பாட்டங்கள், மதுரையில் ஜெயலலிதா பங்கேற்ற பொதுக்கூட்டம், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, ஆர்பி.உதயகுமார் நடத்திய திருமண விழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன்.
52 ஆண்டு அரசியல் அனுபவத்தில் இதுபோன்ற எழுச்சியான மாநாட்டு ஏற்பாடுகளை பார்த்ததில்லை. இது கட்சியினருக்கு ஊக்கத்தை அளிப்பது நிச்சயம். உணவு ஏற்பாடு இதுபோல் எந்த மாநாட்டிலும் செய்ததில்லை. வாகனங்களில் வரும்போது ஒரு பொட்டலத்தை வழங்குவது வழக்கம். ஆனால், தற்போது மாநாடு பந்தலிலேயே பல லட்சம் பேருக்கு 3 நேரமும் உணவு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தொண்டர்களுக்கு முக்கியத்துவம் அளித்து மாநாட்டு பணிகள் நடக்கிறது பாராட்டத்தக்கது” என்றார்.
பொள்ளாச்சி ஊத்துக்குளி அதிமுக தொண்டர் ராஜேந்திரன் (62), “52 ஆண்டுகளாக அதிமுகவில் உள்ளேன். சென்னை, சேலம் உள்ளிட்ட பல மாநாடுகளை பார்த்துள்ளேன். இந்த மாநாடு நவீன காலத்திற்கு ஏற்ப மிக நவீன வசதிகளுடன் ஏற்பாடு செய்துள்ளனர். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் கூட இல்லாத அளவுக்கு மாநாட்டு ஏற்பாடு மிகச் சிறப்பாக உள்ளது. தமிழக அரசியல் கட்சி வரலாற்றிலேயே மாநாட்டுக்காக திடல், உணவு, சுகாதார, குடிநீர், பந்தல், வாகனம் என அனைத்து வசதிகளும் கட்சி மூலம் செய்யப்பட்டுள்ளது. தொண்டர்களின் மனம் அறிந்து கே.பழனிசாமி இவ்வாறு செய்துள்ளது மிகுந்த பாராட்டுக்குரியது” என்றார்.
எற்பாடுகள் எப்படி? - மதுரை அருகேயுள்ள வலையங்குளத்தில் நடைபெறும் மாநாட்டுக்கான மேடை, பந்தல், தொண்டர்களுக்கு உணவு வழங்கும் இடம், கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் முடிந்துவிட்டன. மாநாட்டுப் பந்தல் வளாகத்தில் 3 லட்சம் தொண்டர்கள் நாற்காலிகளில் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாநாட்டு நிகழ்ச்சிகள் எல்இடி திரைகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. பந்தலைச் சுற்றி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. காலை 7.45 மணிக்கு 51 அடி உயர கொடிக் கம்பத்தில் பொதுச் செயலாளர் பழனிசாமி கட்சிக் கொடியேற்றி, மாநாட்டை தொடங்கி வைக்கிறார். ஜெயலலிதா பேரவை மற்றும் பிற அணிகளின் தொண்டர்கள் 3,000 பேர் அணிவகுப்பு மரியாதை அளிக்கின்றனர்.
பின்னர் மாநாட்டுப் பந்தலைத் திறந்துவைக்கும் பழனிசாமி, நுழைவுவாயில் அருகே அமைக்கப்பட்டுள்ள அதிமுக அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிடுகிறார். தொடர்ந்து, கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மாநாட்டின் பிரதான நிகழ்ச்சிகள் மாலை தொடங்குகின்றன. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 5 பேர், மதுரை மாவட்டச் செயலாளர்கள் செல்லூர் கே.ராஜு, வி.வி.ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார் பேசுகின்றனர். பின்னர், பொதுச்செயலாளர் பழனிசாமி சிறப்புஉரையாற்றுகிறார்.
தமிழகம் முழுவதுமிருந்து தொண்டர்களை அழைத்து வரும்பொறுப்பு, மாவட்டச் செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 10 தென் மாவட்டங்களில் இருந்து மட்டும் 4 லட்சம் பேர் பங்கேற்க ஏறபாடு செய்துள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 1,500 வாகனங்களில் தொண்டர்களை அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கானோர் வாகனங்களில் திரள வாய்ப்புள்ளதால், மாநாட்டை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் குறித்து மதுரை மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன் விவரம்: அதிமுக மாநாடு | மதுரையில் போக்குவரத்து மாற்றம் - நகருக்குள் கட்சி வாகனங்கள் நுழைய தடை
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago