அடிப்படை வசதிகள் இல்லாத விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் - கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. குறைந்தபட்சம் குடிநீர் வசதி கூட இல்லை. இது பற்றி இங்கு வந்து செல்லும் பயணிகள் நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டாலும், அதை அவர்கள் கண்டு கொள்வதே இல்லை.

விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2000-ம்ஆண்டு ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு, அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. அங்கு தொலைதூர ஊர்களுக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன.

புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்கெனவே இருந்து வந்த இந்தப் பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையமாக மாறிப் போனது. சுற்று வட்டார ஊர்கள், கிராமப் பகுதிகளுக்கான நகரப் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்து நிலையத்தில் எந்நேரமும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

பழைய பேருந்து நிலையத்தை பராமரித்து வரும் விழுப்புரம் நகராட்சி, பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டுள்ளது. நிறைவான வருவாய் வரவே செய்கிறது. ஆனாலும் அதில் இருந்து வரும் தொகையில், இங்கு வரும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் எதையும் செய்வதில்லை.

பழைய கட்டிடங்களை இடித்து அப்புறப் படுத்திவிட்டு, வணிக வளாகங்களுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனாலும், பயணிகளுக்கான எந்தவொரு அடிப்படை வசதியும் செய்யவில்லை. பேருந்துக்காக வெகுநேரம் காத்திருக்கும் கிராமப்புற பயணிகள் குடிக்க குடிநீர் கூட வைக்கவில்லை. கட்டண கழிப்பறை இருந்த போதிலும் போதிலும் போதிய பராமரிப்பில்லை.

பல ஊர்களில் பழைய பேருந்து நிலையங்களில் இலவச சிறுநீர் கழிப்பிட வசதி செய்து தரப்பட்டுள்ளது. ஆனால், இங்கு அந்த வசதி இல்லை. இதனால் கண்ட இடங்களில் சிறுநீர் கழிக்கின்றனர். இந்த பழைய பேருந்து நிலையத்தில் இருந்த, பழுதடைந்த கட்டிடங்களை இடித்து அகற்றிய நகராட்சி நிர்வாகத்தினர், கூடவே பயணியர் காத்திருக்கும் கட்டிடத்தையும் இடித்து அகற்றினர்.

அதற்குப் பதிலாக அங்கு சிறிய அளவிலான நிழற்குடை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நிழற்குடையில் போதுமான அளவில் இருக்கை வசதிகள் செய்து தரப்படவில்லை. இந்த நிழற்குடை இங்கு வந்து செல்லும் பயணிகளுக்கு போதுமானதாக இல்லை. பேருந்துகள் வந்து செல்லும் பகுதியை புதிதாக கட்டி, அதன் நிறுத்துமிடத்தை அழகாக வடிவமைத்துள்ளனர்.

ஆனால், பயணிகளுக்கான தேவைகளை யோசிக்கவே இல்லை. இப்படியாக விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் பற்றிய புகார்கள் பயணிகளிடையே அதிகரித்து வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற விழுப்புரம் நகர்மன்ற கூட்டத்தில், ரூ 4 லட்சம் மதிப்பில் பேருந்துகள் வந்து செல்லும் விவரம் அடங்கிய பெயர் பலகை வைக்கப்படும், குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிதி நெருக்கடியை காரணம் காட்டி, இதுவரையிலும் இப்பணிகள் தொடங்கப்படவில்லை.

கோடை தாண்டியும் கொதிக்கும் வெயில் வாட்டுகிறது. சரியான ஒதுங்கும் இடம் இல்லாமல், துர்நாற்றம் வீசும், கசகசப்பான ஒரு பேருந்து நிலையத்தை விழுப்புரம் நகரம் மற்றும் சுற்று வட்டார மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு வந்து நகரப் பேருந்துகளில் பயணிப்போரில் பலர் மிக எளிமையானவர்கள். பெரு நகர பேருந்து நிலையத்துக்கு வந்து செல்வோரைப் போல், தாகம் தணிக்க சட்டென குடிநீர் பாட்டில்கள் வாங்கும் வசதி அவர்களிடம் கிடையாது.

‘குறைந்த பட்சம் குடிநீர் வசதியை செய்து கொடுக்கலாமே!’ என விழுப்புரம் நகராட்சி ஆணையர் ரமேஷிடம் கேட்டபோது, “உடனடியாக சின்டெக்ஸ் டேங்க் அமைத்து, குடிநீர் வசதி செய்து தருகிறோம்” என்கிறார். அது மட்டும் போதாது. மதுரை உள்ளிட்ட பிற நகரங்களில் புதிய பேருந்து நிலையம் உருவாக்கப்பட்ட பின்னரும், பழைய பேருந்து நிலையங்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றன. பயணிகளின் அடிப்படை வசதிகள் அங்கு பேணப்படுகின்றன. விழுப்புரத்திலும் அது நடக்க வேண்டும் என்பதே நம் விருப்பம்.விழுப்புரம் பழைய பேருந்து நிலையம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE