77 ஆண்டு கால சுதந்திர திருநாட்டில் சாலை வசதிக்கு ஏங்கும் ஜவ்வாதுமலை கிராமங்கள்

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: ஜவ்வாதுமலையில் உள்ள கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாததால் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியுள்ளதாக பழங்குடியின மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

கல்வி மற்றும் பொருளாதார உயர்வுக்கு சாலை வசதி முக்கியத்துவம் பெறுகிறது. சமதள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கிடைத்துள்ள சாலை வசதி, மலைவாழ் மக்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. நாடு சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் கடந்த நிலையிலும், மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள், காடு, மேடுகளை கடந்து வர வேண்டிய நிலை தொடர்கிறது.

இதன் தாக்கம் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களை உள்ளடக்கிய ஜவ்வாதுமலையிலும் எதிரொலிக்கிறது. இப்பகுதியில் சுமார் 427 மலை கிராமங்கள் உள்ளன. 3 மாவட்டங்களில் இருந்து ஜவ்வாதுமலைக்கு, நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலைகள் அமைக்கப் பட்டுள்ளன.

ஆனால், ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் பிரதான சாலையை வந்தடைதவற்கும், கல்வி மற்றும் மருத்துவ வசதி பெறுவதற்கும், ஜமுனாமரத்தூர் போன்ற வியாபார தலங்களுக்கு வந்து செல்லவும் சாலை வசதி இல்லை. இதனால், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் என்பது மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கிறது. நகர மக்களின் வளர்ச்சியுடன் மலைவாழ் மக்களின் நாகரீக வளர்ச்சியை ஒப்பிடும்போது, சுமார் 20 முதல் 25 ஆண்டுகள் பின்னோக்கி உள்ளனர். ஒரு சில மலை கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை நிலை ஆதிகாலத்தை நினைவுப்படுத்துகிறது.

இது குறித்து ஜவ்வாதுமலையில் வாழும் பழங்குடியின மக்கள் கூறும்போது, “ஜவ்வாதுமலையில் சுமார் 427 மலை கிராமங்கள் உள்ளன. இதில், சுமார் 350-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு சாலை வசதியே கிடையாது. காடு, மேடுகள், ஓடைகளை கடந்து வரும் நிலையில் வாழ்கிறோம். ஒரு சில மலை கிராமங்களில் ஜல்லி கற்கள் மட்டும் போடப்பட்டிருக்கும். அதுவும் மழை காலத்தில் சேதமடைந்து விடும்.

சாலை வசதி இல்லாததால் வாகன போக்குவரத்து இருக்காது. 2 முதல் 5 கி.மீ., தொலைவு கடந்தால்தான், இணைப்பு சாலை அல்லது பிரதான சாலையை சென்றடைய முடியும். ஒரு சில கிராமங்களில் 10 கி.மீ., தொலைவு கூட இருக்கும். சாலை வசதி இல்லாததால், நடுநிலை மற்றும் உயர் நிலையுடன் மாணவர்களின் கல்வி தடைபட்டு போகிறது. உயர் கல்வி என்பது, மலைவாழ் மாணவர்களுக்கு கானல் நீராக உள்ளது. பழங்குடியின மாணவிகளுக்கு உயர் கல்வி என்பது எட்டாத உயரத்தில் உள்ளது.

உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதில்லை. இதனால், கர்ப்பிணிகளும், முதியோர்களும் அவதிப்படுகின்றனர். பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகள் கடித்து பலர் உயிரிழக்கின்றனர். விவசாய விளைப் பொருட்களை, சந்தைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. இதனால், மலிவான விலைக்கு வியாபாரிகளிடம் விளைப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டிய பரிதாப நிலையில் உள்ளோம். சாலை வசதியை ஏற்படுத்திக்கொடுக்க ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால், வனத்துறை அனுமதி மறுக்கிறது என்ற காரணத்தை கூறி, காலம் கடத்துகின்றனர். சாலை வசதி இல்லாததால், இந்திய திருநாட்டின் இதர பகுதியில் வசிக்கும் மக்களின் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, நாங்கள் பல ஆண்டுகள் பின்னோக்கி இருக்கிறோம். ஜவ்வாதுமலையில் உள்ள மலை கிராமங்களுக்கு சாலை வசதியை ஏற்படுத்திக்கொடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இந்நிலையில், ஜவ்வாதுமலையில் மலைவாழ் மாணவர்களிடம் கடந்த வாரம் உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம், பெலாமரத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் முருகன் அளித்துள்ள மனுவில், “பெலாமரத்தூர் ஊராட்சியில் நல்லாப்பட்டு இணைப்பு சாலை முதல் புளிச்சகுட்டை, சேராமந்தை, வாழக்காடு கிராமங்களுக்கு வனத்துறை அனுமதியுடன் ஜல்லி சாலை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

தாழ்வானப் பகுதி மற்றும் அடர்ந்த வனப்பகுதியில் மலை கிராமங்கள் உள்ளதால் மழைக் காலத்தில் சாலை சேதமடைகிறது. மண் சரிவு ஏற்படுகிறது. இதனால், இரு சக்கர வாகனங்களை கூட பயன்படுத்த முடியாது. பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி பாதிக்கிறது. விளைப் பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை.

கர்ப்பிணிகள், முதியோர்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் பலர் உயிரிழந்துள்ளனர். நல்லாப்பட்டு இணைப்பு சாலை முதல் 4.6 கி.மீ., தொலைவுக்கு உள்ள ஜல்லி சாலையை தார்ச்சாலை அல்லது சிமென்ட் சாலையாக அமைத்து கொடுக்க வேண்டும், தேவையான இடங்களில் சிறு பாலம் கட்டிக்கொடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE