அதிமுக மாநாடு நடக்கும் மதுரை ‘ரிங்’ ரோட்டில் தென் மாவட்ட வாகனங்களுக்கு என்ன ஏற்பாடு? - மக்கள் கேள்வி

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: அதிமுக மாநில மாநாடு மதுரை ‘ரிங்’ ரோட்டில் நாளை (ஆக. 20) நடக்கும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கானோர் வாகனங்களில் திரள வாய்ப்புள்ளதால், பேருந்துகள், கார்களில் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள வேண்டிய பாதை குறித்து மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் என்ன ஏற்பாடு செய்துள்ளது? என அனைத்து தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதிமுக மாநில மாநாடு மதுரை அருகே வலையங்குளத்தில் உள்ள ‘ரிங்’ ரோடு அருகே வரும் 20-ம் தேதி நடக்கிறது. தமிழகம் முழுவதும் இருந்து அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சுமார் 10 லட்சம் பேர் வர உள்ளதாக கூறப்படுகிறது. அருப்புகோட்டை சாலை, திருநெல்வேலி சாலை, மதுரை சாலை மற்றும் கிராமங்களுக்கு பிரிந்து செல்லும் முக்கிய சாலைகள் மாநாடு நடக்கும் இடத்தில் சந்திக்கிறது.

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் ‘ரிங்’ ரோடு வழியாகத்தான் மதுரை நகருக்குள் வருகின்றன. ‘ரிங்’ ரோட்டில் சிறு விபத்து ஏற்பட்டாலே போலீஸார் வந்து சம்பந்தப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்துவதற்குள் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிக்கும்.

ஆகஸ்ட் 20-ம் தேதி அதிமுக மாநாட்டில் லட்சக்கணக்கானோர் திரளும் நிலையில் அவர்கள் மாநாட்டு பந்தல் அருகே செல்லும் ‘ரிங்’ ரோட்டில் வாகனங்களை வரிசையாக நிறுத்துவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை உள்ளது. ஆனால், தற்போது வரை மாவட்ட காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும், மாநாடு நடக்கும் நாளில் வலையங்குளம் ‘ரிங்’ ரோடு வழியாக வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான திட்டத்தை அறிவிக்கவில்லை.

பேருந்துகளில் பயணிப் பவர்களும், கார்களில் வரக்கூடி யவர்களும் செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து தெரிவிக்கப் படவில்லை. அதிமுக மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்து வரும் மாவட்ட செயலாளர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் காவல் துறை அதிகாரிகளை 2 முறை சந்தித்து மனு அளித்து விட்டனர்.

ஆனாலும், மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் எந்த வழியாக வந்து செல்வது, எங்கு பார்க்கிங் செய்வது போன்றவை தொடர்பாக முறையான வழிகாட்டு தல்களை காவல் துறையினர் தெரி விக்கவில்லை. மாநாடு நடக்கும் நாள் முக்கியமான முகூர்த்த நாள் என்பதால் அன்றைய நாளில் தென் மாவட்டங்களுக்குச் செல்லக் கூடியவர்களும், அங்கிருந்து மதுரைக்கு வரடிக் கூயடிவர்களும் பயணத்தை மேற்கொள்வதா அல்லது ரத்து செய்வதா எனத் தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

ஏற்பாடுகள் தயார்: இது குறித்து மதுரை மாவட்ட எஸ்பி சிவபிரசாத் கூறுகையில், அதிமுக மாநாடுக்கு தேவையான பாதுகாப்பு, பார்க்கிங் வசதிகளை ஏற்பாடு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநாடு நடக்கும் தினத்தில் (ஆக., 20) எப்போதும் போன்று சுற்றுச் சாலையில் பேருந்துகள், கார், வேன், இரு சக்கர வாகனங்கள் சென்று வரலாம்.

சரக்கு லாரி, டேங்கர் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை வேறு வழியில் மாற்றிவிட திட்டமிட்டுள்ளோம். அதற்காக வழித்தடம் குறித்து ஆய்வு செய்கிறோம். தேவைப்படும் பட்சத்தில் போக்குவரத்தில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து அறிவிப்போம் என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE