ரூ.927 கோடியில் மீனவர் நலனுக்கு 10 அறிவிப்புகள் - ராமேசுவரம் அருகே முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே மண்டபத்தில் நடைபெற்ற மீனவர் மாநாட்டில் மீனவர்களுக்கு பட்டா, கூட்டுறவு கடன், மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்வு உட்பட ரூ.926.88 கோடி மதிப்பீட்டிலான 10 முக்கியஅறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இதன்மூலம் 2.77 லட்சம் மீனவர்கள் பயனடைவார்கள். 14 ஆயிரம் பேருக்கு ரூ.88.90 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.

ராமேசுவரம் அருகே மண்டபம் கலோனியல் மைதானத்தில், தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் சார்பில் மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

இந்த மாநாட்டில் ரூ.926.88 கோடி மதிப்பீட்டில் 2.77 லட்சம் மீனவர்கள் பயனடையும் வகையில் 10 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதன் விவரம்:

> வீடு கட்டும் திட்டத்தின்கீழ் 5,035 பேருக்கு பட்டா வழங்கப்படும்.

> 45 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தொழிலுக்கான கூட்டுறவு கடன் வழங்கப்படும்.

> மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை இதுவரை ரூ.5 ஆயிரமாக இருந்தது. இனி ரூ.8 ஆயிரமாக உயர்த்தப்படும். மேலும், 60 வயதுக்குமேற்பட்ட மீனவர்கள் 15 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படும்.

> நாட்டுப் படகு மீனவர்கள் 1,000 பேருக்கு 40 சதவீத மானியத்தில் இயந்திரங்கள் வழங்கப்படும்.

> மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் 3,400 லிட்டரில்இருந்து 3,700 லிட்டராக உயர்த்தப்படும்.

> விசைப் படகுகளுக்கு 18 ஆயிரம்லிட்டரில் இருந்து 19 ஆயிரம் லிட்டராகவும், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளுக்கு 4 ஆயிரம் லிட்டரில் இருந்து 4,400 லிட்டராகவும் டீசல்எண்ணெய் உயர்த்தி வழங்கப்படும்.

> தங்கச்சிமடத்தில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கும், பாம்பன் குந்துகால்மீன் இறங்குதளத்தை மேம்படுத்தவும்ஆய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பாம்பன் வடக்கு மீனவர் கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகளை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

> மீனவர் விபத்து காப்புறுதி திட்டத்தின்கீழ் 205 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மீன் பிடிக்கும்போது காணாமல்போகும் மீனவர்களுக்காக 25 குடும்பங்களுக்கு சுழல் நிதி வழங்கப்படுகிறது.

> கடலோர மேலாண்மை திட்டத்தை விரைவில் வகுத்து, சாத்தியம் உள்ள அனைத்து இடங்களிலும் தூண்டில் வளைவுகள் அமைக்க விரைவில் பணிகள் தொடங்கப்படும்.

> மீனவர்களுக்கான வீட்டுவசதி திட்டத்தின்கீழ் அலகு தொகை ரூ.1.70 லட்சத்தில் இருந்து ரூ.2.40 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இதன்மூலம் 2 லட்சத்து 77,347 மீனவர்கள் பயனடைவார்கள். இதற்காக, மொத்தம் ரூ.926.88 கோடிஒதுக்கீடு செய்யப்படும். மீனவர்களின் இதர கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

நலத்திட்ட உதவிகள்: மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 14,000 மீனவ பயனாளிகளுக்கு ரூ.88.90 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.

மாநாட்டில் மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். அமைச்சர்கள் துரைமுருகன், ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி, எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், மீன்வளம், மீனவர் நலத் துறை செயலர் மங்கத்ராம் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்துக்கு சென்றுமுதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, பெரியகருப்பன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE