மத்தியில் பலவீனமான ஆட்சியால்தான் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்கின்றன - முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: மத்தியில் பலவீனமான ஆட்சியால்தான் மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

தமிழ்நாடு மாநில தலைமை மீன்வளக் கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து நடத்திய மீனவர் நல மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ராமேசுவரம் அருகேஉள்ள மண்டபம் கலோனியல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தாக்குவதையும், கைது செய்வதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இலங்கையில் தமிழர்களின் உரிமைப் போராட்டம் தொடங்கியது முதலே, தமிழக மீனவர்களைத் தாக்குவதை இலங்கை அரசு வழக்கமாகக் கொண்டிருக்கிறது. தற்போதும் மீனவர்கள் மீதான தாக்குதல்கள், கைதுகள், சிறைச்சாலை சித்ரவதைகள் தொடர்கின்றன.

2014-ல் பாஜக ஆட்சி அமைந்ததற்குப் பின்னர் அடக்குமுறைகள் அதிகமானதுடன், மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படையினர் பறித்துச் செல்வதும் அதிகரித்துள்ளது. 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பாம்பனில் பாஜக சார்பில் நடைபெற்ற ‘கடல் தாமரை’ மாநாட்டில் பேசிய மறைந்த சுஷ்மா சுவராஜ், பாஜக ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவு மீட்கப்படும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்றார். இந்த 9 ஆண்டு காலத்தில் இது நடந்திருக்கிறதா?

2014-ல் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி, ‘தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் துன்புறுத்தப்படுவதற்கும், கைது செய்யப்படுவதற்கும் காங்கிரஸ் அரசின் பலவீனம்தான் காரணம். மீனவர்கள் பாதுகாப்பாக வாழவேண்டும் என்றால், நாட்டில் வலுவான அரசு அமைய வேண்டும். மீனவர்கள் வாழ்வு சிறக்க நான் ஒரு சபதம் எடுக்கிறேன்' என்று கூறினார். அந்த சபதத்தை நிறைவேற்றி விட்டாரா?

இலங்கையைப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க இந்திய அரசு பல்வேறு உதவிகளைச் செய்தாலும், நம் மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன. மோடி அரசு வந்ததிலிருந்து, தமிழக மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 122 படகுகளையும் இலங்கை அரசு நாட்டுடைமையாக்கி உள்ளது.

2020 முதல் தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் 48 முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தமிழக மீனவர்கள் 619 பேர் கைது செய்யப்பட்டு, 83 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 604 மீனவர்களையும், 16 படகுகளையும் இலங்கை அரசு விடுவித்திருக்கிறது.

74 மீனவர்கள் கைது: இந்த ஆண்டில் மட்டும் 74 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களில் 59 பேர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் 67 மீன்பிடிப் படகுகள் இன்னமும் இலங்கைவசம்தான் உள்ளன. பிரதமர் மோடி ஆட்சியில் தாக்குதல் தொடரவே செய்கிறது என்றால், மோடி ஆட்சி பலவீனமான ஆட்சி என்றுதானே அர்த்தம்.

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனில், கச்சத்தீவை மீட்க வேண்டும். பிரதமர் மோடி சென்னை வரும்போதெல்லாம், அவரிடம் நான் இந்தக் கோரிக்கையை முன்வைத்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

கச்சத்தீவு கடற்பகுதியில் தமிழக மீனவர்களுக்கு அனுமதி மறுப்பது, நமது பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மறுப்பதாகும். எனவே, இந்திய அரசு, இலங்கை அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்.

இல்லையெனில், அடுத்து நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு புதிதாக அமையும் அரசு, இதை நிறைவேற்றும். அதற்கேற்ப நமது அரசியல் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம். கச்சத்தீவை மீட்டெடுத்து, தமிழக மீனவர்களின் உரிமையைக் காப்போம். இவ்வாறு முதல்வர் பேசினார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பா. விஷ்ணு சந்திரன் நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்