ஆளுநரிடம் நீட் எதிர்ப்பு: அம்மாசியப்பன் மீது நடவடிக்கை கோரி சேலம் இரும்பாலை நிர்வாகத்திடம் பாஜகவினர் மனு

By எஸ்.விஜயகுமார்

சேலம்: தமிழக ஆளுநரிடம் நீட் தேர்வு குறித்து கேள்வி எழுப்பிய சேலம் இரும்பாலை ஊழியர் அம்மாசியப்பன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் இரும்பாலை நிர்வாகத்திடம் பாஜகவினர் மனு அளித்தனர்.

மத்திய அரசின் குடிமைப் பணிகள் தேர்வுக்குத் தயாராகும் பட்டதாரிகள், கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுடன் எண்ணித் துணிக எனும் தலைப்பில் தமிழக ஆளுநர் ரவி கலந்துரையாடல் நடத்தினார். இந்நிகழ்ச்சியில், நீட் தேர்வில் முதல் 100 இடங்களைப் பிடித்த தமிழக மாணவர்கள், தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டனர். அப்போது, சேலத்தைச் சேர்ந்த மாணவரின் தந்தை அம்மாசியப்பன் என்பவர் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தி பேசினார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநரிடம் கேள்வி எழுப்பிய அம்மாசியப்பன், சேலம் இரும்பாலையில் சீனியர் ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அம்மாசியப்பன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் இரும்பாலை பொது மேலாளர் மானஸ் ராத், செயல் இயக்குநர் வி.கே.பாண்டே ஆகியோரிடம், சேலம் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சண்முகநாதன், அவரது கட்சியினருடன் வந்து மனு அளித்தனர்.

மனு குறித்து மாவட்ட பாஜக தலைவர் சண்முகநாதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: ''சேலம் இரும்பாலையில் பணியாற்றி வரும் அம்மாசியப்பன், மத்திய அரசின் கொள்கையை விமர்சித்து, தமிழக ஆளுநரிடம் கேள்விகளை எழுப்பினார். இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை அவர் மீறி இருக்கிறார். குறிப்பாக, ஆளுநரிடம் பேசியது குறித்து, தனது பணி விவரத்தை குறிப்பிட்டு, தொலைக்காட்சி ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார்.

சேலம் இரும்பாலைக்கு, 1993 மற்றும் 1994-ம் ஆண்டுகளில் நிலம் கொடுத்தவர்களுக்கு பணி வழங்கப்பட்டது. அப்போது, அம்மாசியப்பன் போலியான இருப்பிடச் சான்று கொடுத்து, பணியில் சேர்ந்ததாக புகார் உள்ளது. இது குறித்து இரும்பாலை நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு பணியில் இருப்பவர்கள், அரசுக்கு எதிராக கருத்து கூற உரிமை கிடையாது. எனவே, இரும்பாலை நிர்வாகம் அம்மாசியப்பன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்துள்ளோம். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், இரும்பாலையைக் கண்டித்து போராட்டங்களில் ஈடுபடுவோம். புகார் மனுவின் நகலை மத்திய உருக்குத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, செயில் சேர்மன் ஆகியோருக்கு அனுப்பியிருக்கிறோம்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE