ராமநாதபுரம்: "இதுவரை 5 ஆயிரம் ரூபாயாக இருந்த மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை இனி 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 10 முக்கிய அறிவிப்புகளை மீனவர் நல மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து நடத்தும் மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இவ்விழாவில் 14,000 பயனாளிகளுக்கு 88 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையாளமாக 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: "நமது மீனவர்கள் எதிர்பார்த்து வரும் சில முக்கியமான அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இருக்கின்ற ஒரு வழக்கு காரணமாக இந்த பணிகளை உடனடியாக நிறைவேற்ற முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. இதற்கான கடலோர மேலாண்மை திட்டத்தை விரைவில் வகுத்து, உரிய ஒப்புதலை பெற்று தூண்டில் வளைவுகள் தேவைப்படும் இடங்களில் எங்கெங்கு சாத்தியமோ அங்கெல்லாம் பணிகளை விரைவில் தொடங்குவோம்.இதுவரை நான் சொன்ன அறிவிப்புகள் மூலமாக 2 லட்சத்து 77 ஆயிரத்து 347 மீனவர்கள் பயனடைவார்கள். இதற்காக, மொத்தம் 926 கோடியே 88 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப் போகிறோம். ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் போகிறோம். மீனவர்களுக்கு அடுத்தடுத்து இது வழங்கப்பட இருக்கிறது. இதர கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றித் தரப்படும்.
» “பெருந்துயர் வாழ்வுதான் என்றாலும்...’’ - ‘மாமன்னன்’ 50வது நாள் குறித்து மாரி செல்வராஜ்
» பிஹாரில் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை: போலீஸ் தீவிர விசாரணை
பாஜக ஆட்சியில் அதிகம்: மாநிலத்துக்குள் உள்ள தேவைகளை நாங்கள் நிறைவேற்றுவோம். ஆனால், கடலுக்குள் செல்லும் மீனவர்கள் சந்திக்கின்ற பிரச்சினைகள், இன்னமும் பிரச்சினைகளாவே இருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. தமிழக மீனவர்களுக்கு இருக்கும் தீராத பிரச்சினையாக இது இருக்கிறது.
இலங்கையில் தமிழர்களோட உரிமைப் போராட்டம் எப்போது தொடங்கியதோ, அப்போதிருந்தே, தமிழக மீனவர்கள தாக்குவதையும் இலங்கை அரசு வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறது. அதன் பிறகாவது தமிழக மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்க முடியுமா என்றால் அதுவும் இல்லை. அதே தாக்குதல், கைதுகள், சிறைச்சாலை சித்திரவதைகள் தொடரத்தான் செய்கிறது. அதிலும் குறிப்பாக, 2014-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நடந்து பாஜக ஆட்சி அமைந்ததற்குப் பின்னால்தான் அடக்குமுறைகள் இன்னும் அதிகம் ஆகியிருக்கு. கைது, தாக்குதல், சிறைச்சாலைகள் என்பதைத் தாண்டி, மீனவர்களுடைய பல லட்சம் ரூபாய் மதிப்பிலான படகுகள் அந்த படகுகளை இலங்கை அரசாங்கம் பறித்துச் செல்வது அதிகமாக இருக்கிறது.மீனவர்களை விடுவித்தாலும் படகுகளை தருவது இல்லை. மீனவர்களுக்கு வாழ்வாதாரமே படகும், வலையும்தான். படகுகளை உடைப்பதும், வலைகளை அறுப்பதும் இலங்கை அரசாங்கத்துக்கு வழக்கமாக இருக்கிறது. 'இத்தகைய படகுகள் இலங்கை அரசாங்கத்தின் உடமையாகும்'- என்று அந்த நாட்டின் அதிபரே சொல்லும் அளவுக்கு நிலைமை இப்போது மோசமாகயிருக்கிறது.
பிரதமர் மோடி சொன்னது என்ன? 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, பாம்பனில் பாஜக சார்பில் ‘கடல் தாமரை’என்ற போராட்டம் நடத்தப்பட்டது. நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். அப்போது, மறைந்த சுஷ்மா சுவராஜ் இங்கே வந்திருந்தார். ஒன்றியத்தில், பாஜக ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவு மீட்கப்படும். மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று அவர் சொன்னார். இந்த 9 ஆண்டு காலத்தில் இது நடந்திருக்கிறதா?
இதே ராமநாதபுரத்தில்தான் 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், பிரதமர் நரேந்திரமோடி என்ன பேசினார், “தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் துன்புறுத்தப்படுவதும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும் தினசரி நடந்து வருகிறது. இதற்கு காங்கிரஸ் அரசின் பலவீனம்தான் காரணம்” என்று சொன்னார். நாங்கள் கேட்கிறோம், பாஜக ஆட்சியில் இருக்கும் இந்த ஒன்பது ஆண்டு காலத்தில் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படவே இல்லையா?
மீனவர்கள் பாதுகாப்பாக வாழவேண்டும் என்றால், இந்தியாவில் வலுவான அரசு அமையவேண்டும். மீனவர்கள் வாழ்வு சிறக்க நான் ஒரு சபதம் எடுக்கின்றேன் என்று குமரிக்கு சென்று, 2014 ஆம் ஆண்டு ஏப்ரலில் பேசினார் மோடி. சபதத்தை போட்டார். அந்த சபதத்தை நிறைவேற்றி விட்டாரா?''நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர் கூட உயிரிழக்க மாட்டார். தமிழக மீனவர்களுக்கு இலங்கையால் பிரச்சினை. குஜராத் மீனவர்களுக்கு பாகிஸ்தானால் பிரச்சினை. இரண்டு மாநில மீனவர்களையும் இணைத்துப் பேசி கூட்டு நடவடிக்கை எடுப்போம்'' என்று சொன்னது யாரு? பிரதமர் நரேந்திர மோடி.
தொடரும் தாக்குதல்... 2014 முதல் தமிழ்நாட்டு மீனவர்கள் மேல் இலங்கைக் கடற்படைதாக்குதல் நடத்தவில்லையா? 2015-ஆம் ஆண்டும் தாக்குதல் நடந்தது. 2016-ஆம் ஆண்டும் தாக்குதல் தொடர்ந்தது. 2017-தங்கச்சிமடம் மீனவர் பிரிட்டோ கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து, நம் மீனவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றும் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க இந்திய அரசு பல்வேறு உதவிகளை செய்கின்ற நிலையிலும் நம் மீனவர்கள் மீதான தாக்குதல் தொடருகிறது. ஒவ்வொரு முறையும் ஒன்றிய அரசுக்கு நான் கடிதம் எழுதிய பிறகுதான் அவர்கள் ஏதோ நடவடிக்கை எடுக்கிறார்கள்.
2020-ஆம் ஆண்டு முதல் இன்று வரை பார்க்கிறோம், தமிழக மீனவர்கள் மேல் இலங்கைக் கடற்படையினர் 48 தாக்குதல் சம்பவங்கள நடத்தியிருக்கிறார்கள். இதில் தமிழக மீனவர்கள் 619 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 83 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், 604 மீனவர்களையும், 16 படகுகளையும் இலங்கை அரசு விடுவித்திருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் 74 மீனவர்கள் இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. அதில் 59 பேரை விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், 67 மீன்பிடி படகுகள் இலங்கையிடம்தான் இன்னமும் இருக்கிறது.
பிரதமர் மோடி ஆட்சியில் தாக்குதல் தொடரவே செய்கிறது என்றால் என்ன அர்த்தம், மோடி ஆட்சி பலவீனமான ஆட்சி என்று அர்த்தம்?. இந்திய - இலங்கை அமைச்சர்கள் மீனவர்கள் பிரச்சினை பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் சுஸ்மா சுவராஜ். இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் துறை அமைச்சர் மங்கள சமர வீரவும் சந்தித்து பேசினார். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மீன்பிடி மீதான கூட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. எந்த வகையிலும் உயிரிழப்பு ஏற்படக் கூடாது என்று அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதை இரண்டு நாடுகளும் ஏற்றுக் கொண்டது. மறுநாள் இருநாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதை ஏற்று இலங்கை செயல்படவில்லை.“எல்லைக்குள் அத்துமீறக்கூடிய எவர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்த இலங்கைக் கடற்படையினருக்கு அதிகாரம் உண்டு” என்று இலங்கை அமைச்சர் சொன்னார். தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கைக்கு நாட்டுடைமை ஆக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்தது.
கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும்: மோடி அரசு வந்ததும் தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 122 படகுகளையும் நாட்டுடைமை ஆக்கியது இலங்கை அரசு. இப்போதும் கைது தொடருகிறது. படகுகளை தர மறுக்கிறார்கள். இதற்கு பொறுப்பேற்க வேண்டியது யார்? பாஜக அரசுதான். ஒவ்வொரு முறை மீனவர்கள் தாக்கப்படும்போதும் ஒன்றிய அரசின் கவனத்துக்கு நாம் எடுத்துக்காட்டுகிறோம். அவர்களும் இலங்கை அரசுக்கு சொல்லுகிறார்கள். ஆனால், மறுபடியும் கைதும், தாக்குதலும் நடக்கும். இதுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இதற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், அதற்கு கச்சத்தீவு மீட்கப்படவேண்டும். அதுதான் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்.
பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வரும்போதெல்லாம் அவரிடம் இந்த கோரிக்கையை நான் வைத்திருக்கிறேன். உங்களிடம் கொடுத்திருக்கிறேன். ஏன் கடந்த வாரம் இலங்கை அதிபர் இந்தியாவுக்கு வந்தபோது கூட 19.07.2023 அன்று பிரதமருக்கு இது தொடர்பாக நான் கடிதம் எழுதியிருந்தேன். ஆனால், இங்கே இருக்கக்கூடிய சிலர் என்ன சொல்கிறார்கள், இதற்கெல்லாம் காரணம் திமுக ஆட்சிக்காலத்தில்தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது என்று வரலாறு தெரியாமல் உளறிக் கொண்டிருக்கிறார்கள்.
கருணாநிதி வலியுறுத்தல்: 1971-ஆம் ஆண்டு இலங்கை அரசு கச்சத்தீவை சொந்தம் கொண்டாடியதுமே, அன்றைய முதல்வர் கருணாநிதி கச்சத்தீவு நம்முடைய அரசுரிமை என்பதற்கான ஆதாரங்களைத் திரட்டுவதற்கு சட்டப்பேராசிரியர் எஸ். கிருஷ்ணசாமிக்கு உத்தரவிட்டார்.கச்சத்தீவானது, இந்தியாவுக்குத்தான் சொந்தம் என்பதற்கான அறிக்கையை 1973 டிசம்பரில் மறைந்த முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். அதை மீறித்தான் 1974 ஜூன் 26-ஆம் நாள் கச்சத்தீவு ஒப்பந்தம் இந்திய, இலங்கை பிரதமர்களால் போடப்பட்டது. இது ஒப்பந்தம்தானே தவிர சட்டம் அல்ல. நல்லா கவனியுங்கள், அப்படி எந்தச் சட்டமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. அதைத் திமுகவும் ஆதரிக்கவில்லை. உடனடியாக, டெல்லி சென்று பிரதமர் இந்திரா காந்தியை, கருணாநிதி சந்தித்தார். கச்சத்தீவை தரக்கூடாது என்று வலியுறுத்தினார். கச்சத்தீவு நமக்குச் சொந்தம் என்பதற்கான ஆதாரங்களை பிரதமரிடம் கொடுத்தார். அன்றைய சட்ட அமைச்சர் செ.மாதவனும் முதல்வரோடு உடன் சென்றார். சென்னை திரும்பியதும் இதே ஆதாரங்களை வைத்து மறுபடியும் முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதினார்.
கச்சத்தீவு என்பது இலங்கை அரசுக்கு உட்பட்ட தீவாக எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. டச்சு, போர்த்துகீசிய மன்னர் காலத்து வரைபடங்கள்கூட அப்படித்தான் சொல்கின்றன. 1954-ல் இலங்கை என்று வெளியிட்ட வரைபடத்திலும் கச்சத்தீவு அவர்களுடையது என்று சொல்லப்படவில்லை. கச்சத்தீவுக்கு செல்லும் பாதையிலும், கச்சத்தீவின் மேற்குப்பகுதிக் கரை ஓரத்திலும் சங்கு எடுக்கும் உரிமை ராமநாதபுரம் ராஜாவுக்கு தான் இருந்தது என்பதைக் காட்ட ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அங்கு சங்கு எடுத்ததற்காக, அவர் எந்தக் காலத்திலும் இலங்கை அரசுக்குக் கப்பம்கூட கட்டியது கிடையாது. எனவே கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை எந்த சர்வதேச நீதிமன்றத்திலும் நிரூபிக்க முடியும் என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் திரட்டி இந்திய அரசுக்கு கொடுத்ததே மறைந்த முதல்வர் கருணாநிதிதான்.
அதிமுக வெளிநடப்பு: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரன் சிங், வெளியுறவுத்துறை செயலாளர் கேவல் சிங் ஆகியோரை சந்தித்து இந்த ஆதாரங்கள அவர் கொடுத்திருக்கிறார். ''இலங்கைக்குக் கச்சத்தீவை தாரை வார்த்ததன் மூலமாக இந்தியாவுக்கு அல்ல, தமிழகத்துக்குத்தான் முதல் ஆபத்து" என்று இதை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மாறன் நாடாளுமன்றத்தில் முழங்கினார். திமுக உறுப்பினராக இருந்த இரா.செழியன் நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார். வெளிநடப்பு செய்திருக்கிறார். ஒப்பந்தம் கையெழுத்தான மூன்றாவது நாளே, அதாவது 29.6.1974 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் கருணாநிதி கூட்டினார்.கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்தாகவேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்துக் கட்சிகளும் ஆதரித்த அந்தக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அதிமுக தான். அன்று முதல் இன்று வரை ஒரே ஒரு விஷயத்தை தெளிவாக செய்கிறார்கள். அது என்னவென்றால், தமிழகத்துக்கு துரோகம் செய்வது.
21.8.1974 அன்று தமிழக சட்டமன்றத்தில் கச்சத்தீவு ஒப்பந்தத்தை எதிர்த்து சிறப்புத் தீர்மானம் கொண்டு வந்தார் கருணாநிதி. கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு எதிராக கண்டனக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நடத்தப்பட்டது. ஜூலை 14-ஆம் தேதி தொடங்கி 45 முக்கிய நகரங்களில் இந்தக் கூட்டங்களை நடத்துவதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்தது.தஞ்சையில் கருணாநிதி, சென்னையில் அன்பழகன், அப்போது திருப்பெரும்புதூரில் இந்த அடியேன்தான் பேசினேன். இந்த வரலாறு எதுவும் தெரியாமல் மாநில அரசான திமுக இந்தியாவோட ஒரு பகுதியை தாரை வார்த்தது என்று அடிப்படை அறிவும் இல்லாமல், குறைந்தபட்ச நேர்மையும் இல்லாமல், சிலர் பேசி வருவது வெட்கக்கேடானது, கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசு முயற்சிக்க வேண்டும்: கச்சத்தீவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மறுப்பதாகும். எனவே இந்திய அரசு, இலங்கை அரசுடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை ஒன்றிய அரசு இப்போதாவது தொடங்கிட வேண்டும். பாஜக அரசு இந்த முயற்சியில் இறங்கவில்லை என்றால், அடுத்து நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமைய இருக்கும் புதிய அரசு இதனை நிறைவேற்றும் வகையில் நமது அரசியல் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம்.கச்சத்தீவை மீட்டெடுத்து, தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையைக் காப்போம். மீனவர்களின் நலனை காப்பதாக என்றைக்கும் திமுக நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கும்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago