சென்னை: “தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்துக்கு மாற்றுவதற்கான முயற்சியை திமுக அரசு கைவிட வேண்டும்” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென்ற நோக்கத்தில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் கூடிய தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனையையும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையையும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ஏற்படுத்தியவர் ஜெயலலிதா. இந்த மருத்துவமனை பொதுமக்களின் ஒட்டுமொத்த ஆதரவுடனும், வரவேற்புடனும் கடந்த பத்து ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் இலட்சக் கணக்கான ஏழையெளிய மக்கள் உயர்தர சிகிச்சையினை பெற்று வருகின்றனர்.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடனேயே, கிண்டியிலுள்ள கிங் ஆய்வக வளாகத்தில் 250 கோடி ரூபாய் செலவில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது இந்தப் பகுதியினை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஆய்வு செய்தபோது, இந்த உயர் தர மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டவுடன், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் அங்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவை கிண்டியில் உள்ள கிங் ஆய்வக வளாகத்திற்கு மாற்றப்படும் என்றும், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தலைமைச் செயலகம் மாற்றப்படும் என்றும் செய்திகள் வந்தன.
இதனைக் கண்டித்து 10-06-2021 அன்று நான் ஓர் அறிக்கையினை வெளியிட்டதோடு, இதில் உண்மை இருக்கும் பட்சத்தில், அந்த முடிவினை உடனடியாக கைவிட வேண்டுமென்று வலியுறுத்தி இருந்தேன். இதற்கு மறுப்பு தெரிவித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பதில் அளித்து இருந்தார். தற்போது, கிண்டியிலுள்ள கிங் ஆய்வக வளாகத்தில் 250 கோடி ரூபாய் செலவில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்ற 2021ம் ஆண்டிற்கான அறிவிப்பிற்கிணங்க சில மாதங்களுக்கு முன்பு அந்தக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டு, மருத்துவமனை செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
» “மோடி ஆட்சி பலவீனமான ஆட்சி” - மீனவர் நல மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் சாடல்
» காவிரி நீர் வழக்கு | அவசர வழக்காக விசாரிக்கக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு
இந்தச் சூழ்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் தனது அறிக்கை மூலம் முதல்வர் வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதில் தலைமைச் செயலகத்தில் இட நெருக்கடி உள்ளதாகவும், கட்டடத்தின் உறுதித் தன்மை கேள்விக் குறியாக உள்ளதாகவும் தெரிவித்து தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் வளாகத்துக்கு இடம் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கை விடப்பட்டு இரண்டு நாட்கள் கடந்த நிலையில் உணவுத் துறை செயலர் அறையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதாகவும், கோப்புகள் நனைந்ததாகவும் தகவல்கள் வருகின்றன.
கிண்டியில் உயர்தர மருத்துவமனைக்கான கட்டடம் நிறைவுற்ற நிலையில், இதுபோன்ற அறிவிப்பினை தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் வெளியிடுவதையும், அரசு செயலர் அறையில் குடிநீர் குழாய் உடைந்து கோப்புகள் நனைந்ததாக செய்திகள் வருவதையும் பார்க்கும் போது, இதற்குப் பின்னணியில் தி.மு.க. அரசின் கைவண்ணம் உள்ளதோ, தி.மு.க. அரசால் நாடகம் நடத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட பன்னோக்கு உயர் மருத்துவமனை என்ற ஒரே காரணத்துக்காக இதுபோன்ற நடவடிக்கையை தி.மு.க. அரசு எடுக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அங்கிருந்து மாற்ற முயற்சிக்கும் தி.மு.க. அரசின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது.
ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அங்கிருந்து கிண்டி கிங் ஆய்வக வளாகத்திற்கு மாற்றிவிட்டு ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் தலைமைச் செயலகத்தினை அமைக்கும் முயற்சியினை தி.மு.க. அரசு உடனடியாக கைவிட வேண்டுமென்றும், தலைமைச் செயலகத்தை மாற்ற வேண்டுமென்று நினைத்தால் அதற்கென தனி இடத்தை தெரிவு செய்து அங்கு கட்டடங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் முதல்வரை அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
18 hours ago