மதுரையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்: தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா அதிமுக மாநாடு?

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரையில் ஆக.20-ல் நடைபெறும் அதிமுக மாநாட்டுக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அரங்குகள், முகப்புகள் அமைக்கும் பணியில் திரைப்படத் துறையைச் சேர்ந்த கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பல அணிகளாக பிளவுபட்ட நிலையில் கட்சி, சின்னத்தை கைப்பற்றிய கே.பழனிசாமி, அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் போன்றோர், அதை ஏற்றுக்கொள்ள மறுத்து அதிமுகவை பழனிசாமியிடம் இருந்து மீட்காமல் விடமாட்டோம் என அவருக்கு எதிராக காய் நகர்த்தி வருகின்றனர்.

அதிமுகவின் 90 சதவீத நிர்வாகிகள் கே.பழனிசாமி பக்கம் இருந்தாலும், கட்சியைத் தாண்டி தமிழக அரசியலில் தனது செல்வாக்கை நிரூபிக்கவும், அடுத்த ஆண்டு வரக்கூடிய மக்களவைத் தேர்தலுக்கு அதிமுகவை தயார்ப் படுத்தக்கூடிய இக்கட்டான நிலையில் உள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு பொதுச் செயலாளராக பொறுப் பேற்றபோது மதுரையில் ஆக.20-ல் கட்சியின் மாநில மாநாடு நடத்தப்படும் என அறிவித்தார்.

அதன்படி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மதுரை வலையங்குளத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன. மாநாட்டுப் பந்தல், வாகனங்கள் நிறுத்துமிடம், உணவு தயாரிக்கும் கூடம் அமைக்கும் பணிகள் மிகப்பெரிய அளவில் நடக்கின்றன. 5 லட்சம் சதுர அடியில் மாநாட்டுப் பந்தல் அமைக்கும் பணி நேற்றுடன் நிறைவு பெற்றது.

மாநாட்டு மேடை மட்டும் 20 அடி நீளம், 100 அடி அகலத்தில் டிஜிட்டல் மேடையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேடையில் தலைவர்கள் பேசும்போது, அவர்கள் பேசும் காட்சி நேரலையில் மேடையின் பின்புறம் உள்ள டிஜிட்டல் திரையில் மேடை முன் அமர்ந்திருக்கும் தொண்டர்களுக்குத் தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டு நுழைவாயிலில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கீழே இருவருக்கும் நடுவில் கே.பழனிசாமி இருக்கும் வகையில் அரண்மனைத் தோற்றத்துடன் பின்னணியில் மலைக் குன்றுகள் இருப்பது போன்று முகப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளில் திரைப்படத் துறையைச் சேர்ந்த கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

5 ஆயிரம் சமையல் கலைஞர்கள்: மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு உணவு தயாரிப்பதற்காகவே மாநாட்டுப் பந்தல் அருகே 35 ஏக்கரில் தனித் தனியாக உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புளிசாதம் போன்ற முன்கூட்டியே தயாரிக்கக்கூடிய உணவுகள் நேற்று முதல் தயாரிக்கும் பணி தொடங்கியது. 10 லட்சம் தொண்டர்களுக்கு உணவு தயார் செய்யப்படுகிறது.

இப்பணியில் 5 ஆயிரம் சமையல் கலைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 90 ஆயிரம் கிலோ அரிசி, 30 ஆயிரம் கிலோ பருப்பு மற்றும் காய்கறிகள், பலசரக்குப் பொருட்கள் தேவையான அளவுக்கு நேற்று முதல் வந்து இறக்கப்பட்டன. தொண்டர்களுக்கு உணவு பெரிய பாக்கு மட்டை தட்டுகளில் விநியோகம் செய்யப்பட இருக்கிறது. புளிசாதம், பருப்பு சாதம், ஒரு பொறியல், துவையல் வழங்கப்பட இருக்கிறது.

இதில், புளிசாதம் எந்நேரமும் கிடைக்கும் வகையில் பொட்டலமாக தொண்டர்களுக்கு விநியோகம் செய்யப்பட இருக்கிறது. தமிழகம் முழுவதும் இருந்து வரும் நிர்வாகிகள், தொண்டர்களின் வாகனங்கள் மதுரை விரகனூர் சந்திப்பு, மண்டேலா நகர் வழியாகவும், கப்பலூர் டோல்கேட், தோப்பூர் வழியாக விமான நிலையம் செல்லும் சாலை, காரியாபட்டி வழியாக வலையங்குளம் மாநாடு நடக்கும் இடத்துக்கு எளிதாக வந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநாட்டுக்கு வருவோரின் வாகனங்களை நிறுத்த 350 ஏக்கரில் வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள் தேவையான அளவு அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்களில் வருவோர் முந்தைய நாள் இரவு மாநாடு நடக்கும் இடத்துக்கு வருவதற்கு 10 கி.மீ., சுற்றளவில் இரவைப் பகலாக்கும் வகையில் மின்விளக்குள் அமைக்கப்பட்டுள்ளன.

கட்சியின் தலைமை நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், எம்எல்ஏ-க்கள், முன்னாள் எம்எல்ஏ-க்கள் போன்றோர் தங்குவதற்கு மதுரையில் உள்ள ஹோட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகளைப் பிடித்து முன்பதிவு செய்துள்ளனர். அதேபோல், மாநாடு நடக்கும் இடத்தின் அருகில் முக்கியத் தலைவர்கள் தங்குவதற்கு அனைத்து வசதிகளுடன் தற்காலிக வீடுகள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.

51 அடி உயர கொடிக் கம்பம்: மாநாடு நடைபெறும் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 51 அடி உயரம் கொடிக்கம்பத்தில் பொதுச்செயலாளர் கே.பழனிசாமி அதிமுக கொடியை ஏற்றி வைக்கிறார். மாலை 4 மணியளவில் இசைநிகழ்ச்சி, பட்டிமன்றம், பேச்சு அரங்கம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மாலை வரை நடக்கின்றன. மாலையில் மீண்டும் வரும் கே.பழனிசாமி, கட்சியின் மூத்த மற்றும் இரண்டாம் தலைவர்கள் பேசிய பின் மாநாட்டில் சிறப்புரை ஆற்ற உள்ளார்.

மாநாட்டுக்கு 10 லட்சம் பேர் வரை வருவார்கள் என அதிமுக தலைமை எதிர்பார்க்கிறது. 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஜெயலலிதா மதுரை, கோவை, திருச்சி போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மாநாடுபோல் பிரம்மாண்ட கூட்டத்தைக் காட்டி தமிழக அரசியலில் தனக்கான செல்வாக்கை காட்டினர். அந்தத் தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சியைப்பிடிக்க அதுபோன்ற பிரமாண்ட கூட்டங்கள் முக்கியக் காரணமானது.

அதுபோலவே கே.பழனிசாமி, வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன் மக்கள் மத்தியில் தனக்கான செல்வாக்கை நிரூபிக்க பிரம்மாண்ட கூட்டத்தை இந்த மாநாட்டு மூலம் நிரூபிக்க நினைக்கிறார். அவரது இந்தத் திட்டம், தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா? என்பது இந்த மாநாட்டுக்குப் பிறகு தெரிய வரும். மாநாட்டுக்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர்களான செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் முன்னின்று செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்