மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு ஒப்பந்தப்புள்ளி வெளியீடு - இரு கட்டமாக 33 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டம்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. பணிகளை இரு கட்டங்களாக நடத்தி 33 மாதங்களில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்கப்படும் என 2015 பிப்.28-ல் மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இடம் தேர்வு செய்தது முதல் நிதி ஒதுக்குவது வரை இந்தத் திட்டம் கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. முடிவாக 2018 ஜூனில் மதுரை அருகே தோப்பூரில் சுமார் 224.24 ஏக்கரில் ரூ.1,264 கோடியில் ‘எய்ம்ஸ்’ அமையும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், அப்போதைய அதிமுக அரசு இந்த மருத்துவமனையை தஞ்சாவூர் பகுதிக்கு கொண்டு செல்ல முடிவு செய்திருந்ததால் தாமதமானது. அதன்பின் மதுரையில் இடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், நிதி ஒதுக்குவதில் தாமதத்தை சந்திக்கத் தொடங்கியது.

நாட்டில் மற்ற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட ‘எய்ம்ஸ்’களுக்கு மத்திய அரசே நேரடியாக நிதி ஒதுக்கியது. ஆனால், மதுரை ‘எய்ம்ஸ்’க்கு மட்டும் ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்திடம் கடன் கேட்டது. அந்நிறுவனம், கடன் வழங்க ஒப்புக் கொண்டாலும் அதற்கான நடைமுறைகள், ஆய்வுப் பணிகளுக்கு நீண்ட தாமதம் செய்தது. இதனால், திட்ட மதிப்பீடு ரூ.1,977 கோடியாக உயர்ந்தது. திமுக ஆட்சிக்கு வந்தால் ‘எய்ம்ஸ்’ கட்டுமானப்பணி உடனடியாக தொடங்கும் என சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி அறிவித்தனர்.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் கட்டுமானப்பணி தொடங்கவில்லை. மத்திய அரசு, தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான முழுமையான இடத்தை மாநில ஒப்படைக்கவில்லை என்றும், ‘எய்ம்ஸ்’ அமைப்பதற்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியது.

மாநில அரசு, மத்திய அரசின் தாமதத்தாலே ‘எய்ம்ஸ்’ வர தாமதமாவதாக குறை கூறியதால் கட்டுமானப்பணியைத் தொடங்காமலே ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லுரிக்கான 50 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதித்தது. மதுரையில் வகுப்பறை வசதியில்லாததால் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில், தற்காலிகமாக வகுப்புகள் தொடங்கப்பட்டு தற்போது 2-வது ஆண்டாக நடந்து வருகிறது.

மதுரை ‘எய்ம்ஸ்’ விவகாரத்தில் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே முட்டல், மோதல் அதிகமானது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், வெளிப்படையாகவே மத்திய அரசு மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு நிதி ஒதுக்குவதற்கு ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்திடம் எந்த முயற்சியும் செய்யவில்லை, மத்திய அரசால்தான் கட்டுமானப் பணி தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாக குற்றம்சாட்டினார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மதுரை வந்தபோது, ‘‘மக்களவையில் உறுதியளித்தப்படி கட்டுமானப்பணிகள் முடிந்து மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை 2026-ம் ஆண்டில் தொடங்கிவிடும். இன்னும் அந்த தேதி தாண்டவில்லை. மதுரையில் அமையும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை பிற மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகளை போல் அமைக்கப்படவில்லை. மதுரையுடன் ஒப்பிடும்போது அவற்றில் படுக்கைகள், மற்ற வசதிகள் குறைவாகவே உள்ளன.

அதனாலே, இந்த மருத்துவமனைகள் ரூ.500 கோடி முதல் ரூ.600 கோடி வரை மத்திய அரசு நேரடியாக நிதி வழங்கி பணிகள் நடக்கிறது. ஆனால், மதுரை ‘எய்ம்ஸ்’ கிட்டத்தட்ட ரூ.2,000 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை போன்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தன்னிச்சையாக செயல்படும் வகையில் திட்டம் உள்ளது. மேலும், ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் நிதி ஒதுக்குவதில் ஏற்பட்ட தாமதமே தவிர, மத்திய அரசின் தாமதம் எந்த வகையிலும் இல்லை’’ என்றார்.

மத்திய அரசும், மாநில அரசும் ஒருவர் மீது ஒருவர் மாறிமாறி குற்றம்சாட்டவே, மதுரையில் ‘எய்ம்ஸ்’ வருமா? வராதா? என மக்கள் குழப்பமடைந்தனர். மதுரை ‘எய்ம்ஸுடன் அறிவித்த நாட்டின் பிற மருத்துவமனைகளின் கட்டுமானப் பணிகள் முடிந்தும், நடந்துவரும் நிலையிலும் 2026-ல் திறக்கப்பட வேண்டிய மதுரை ‘எய்ம்ஸ்’-க்கு பணிகள் எதுவுமே தொடங்கப்படவில்லை.

இந்நிலையில், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்திடம் எய்ம்ஸ் கட்டிடம் கட்ட நிதி கிடைத்துள்ளது. இதனால், 222. 47 ஏக்கரில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு எய்ம்ஸ் வலைதளம் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. ஒப்பந்த நிறுவனங்கள் செப்.18-ல் பகல் 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அன்று பிற்பகல் 3 மணிக்கு விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமானபணிகளை 2 கட்டங்களாக நடத்தி 33 மாதங்களில் முடிக்ககால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

870 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை வளாகம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சைக்கு 30 படுக்கைகளுடன்கூடிய அறை, இயக்குநர் அலுவலகம், 150 எம்பிபிஎஸ் மாணவர்கள், செவிலியர்கள் பயிலும் வகுப்பறைகள், விடுதிகள், கலையரங்கம், உணவகம், பணியாளர் குடியிருப்பு உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE