Tele Medicine | எந்த நாளில் என்ன சிகிச்சை? - ஆலோசனை பெற சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் புதிய வசதி

By செய்திப்பிரிவு

சென்னை: திங்கள்‌ முதல்‌ சனிக்கிமை வரை காலை 9 மணி முதல்‌ 12 மணி வரையில்‌, மக்கள்‌ இணையவழி மருத்துவ ஆலோசனை சேவையை பயன்படுத்திக்‌ கொள்ளலாம்‌ என்று ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: உலகளவில்‌ கிராமப்புற மற்றும்‌ தொலைதூர பகுதிகளில்‌ வாழும்‌ மக்கள்‌, வயதானவர்கள்‌, நடமாடுவதில்‌ சிரமம்‌ உள்ளவர்கள்‌, பொருளாதார சுமை உள்ளவர்கள்‌ என பலதரப்பட்ட மக்களுக்கு சிறப்பு மருத்துவ ஆலோசனை பெறுவதில்‌ பல சிரமங்கள்‌ உள்ளன. தற்போதைய நவீன தொலைதொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சி காலகட்டத்தில்‌ தொலை மருத்துவம்‌ என்பது தொலைதொடர்பு இணைப்புகள்‌ மூலம்‌ இத்தகைய மக்களுக்கு வீட்டில்‌ இருந்தபடியே சிறப்பு மருத்துவ நிபுணரிடம்‌ ஆலோசனை பெறுவதற்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது. இது சுகாதார சேவைகளை பயனாளிகள்‌ வீட்டுக்கே எடுத்துச் செல்லும்‌ உன்னதமான முறையாகும்‌. தொலை மருத்துவம்‌ பின்வரும்‌ மூன்று வழிகளில்‌ உதவுகிறது:

> நோயாளிகளுக்கு தங்கள்‌ வீட்டிலேயே கிட்டும்‌ சுகாதார சேவையாகும்‌
> பங்குபெறும்‌ மருத்துவரின்‌ சேவை அங்கீகரிக்கப்படுகிறது
> அவரது நிறுவனத்திற்கு இது செயல்திறன்‌ மேம்பாடு ஆகும்‌

கோவிட்‌ பேரிடர்‌ காலத்தில்‌, தொலை மருத்துவத்தின்‌ மருத்துவத்தை இந்த உலகம்‌ அறிந்தது. சிறப்பு மருத்துவ. ஆலோசனை தேவைப்படும்‌ கிராமப்புற மற்றும்‌ நகர்புற பகுதிகளில்‌ இருக்கும்‌ வயதானவர்கள்‌ மற்றும்‌ பயணம்‌ செய்ய இயலாதவர்களுக்கு தொலை மருத்துவம்‌ சிறந்த பரிசாக அமைகிறது. இதை கருத்தில்‌ கொண்டு, ராஜீவ்‌ காந்தி அரசு பொது மருத்துவமனையில்‌ தொலை மருத்துவம்‌ எனப்படும்‌ இணையவழி மருத்துவ ஆலோசனை சேவை மக்களுக்காக, மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை அமைச்சரால்‌ ஆகஸ்ட்‌ 11,2023 அன்று தொடங்கப்பட்டது.

திங்கள்‌ முதல்‌ சனிக்கிமை வரை காலை 9 மணி முதல்‌ 12 மணி வரையில்‌, மக்கள்‌ இந்த சேவையை பயன்படுத்திக்‌ கொள்ளலாம்‌. பொது மருத்துவம்‌, பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம்‌, குழந்தை நல மருத்துவம்‌, முதியோர்‌ நல மருத்துவம்‌ மற்றும்‌ தோல்‌ நோய்‌ மருத்துவம்‌ ஆகிய துறைகளை சார்ந்த சிறப்பு மருத்துவ நிபுணர்கள்‌ ஆலோசனை வழங்கிக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட பயனாளிகள்‌ இந்த சேவையை பெறுவதற்கு https://teleconsultation.s10safecare.com என்ற இணைப்பினை உபயோகிக்கலாம்‌.

எந்தெந்த நாளில் என்னென்ன ஆலோசனை வழங்கப்படுகிறது? - திங்கள் முதல் வெள்ளி காலை 9 மணி முதல் 1 மணி வரை பொதுமருத்துவம், திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 11 மணி வரை பொது அறுவை சிகிச்சை, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 11 மணி வரை குழந்தை நல மருத்துவம், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 11 மணி வரை, முதியோர் நோய் மருத்துவம், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மகப்பேறு மருத்துவம், திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தோல் நோய் மருத்துவம் தொடர்பான ஆலோசனைகளைப் பொதுமக்கள் பெறலாம், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE