நீட் விவகாரம்: ஆளுநர்களைக் கண்டித்து புதுச்சேரியில் ஆக.20-ல் திமுக உண்ணாவிரதம்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளையும், ஆளுநர்களையும் கண்டித்து புதுச்சேரியில் திமுக வரும் 20-ம் தேதியில் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது.

புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் சிவா எம்எல்ஏ இன்று கூறியது: "தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில மாணவர்களின் மருத்துவ கனவைச் சிதைத்து அவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய பாஜக அரசையும், தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்து தமிழ்நாடு முதல்வர் ஆணைப்படி, திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில், மாபெரும் உண்ணா விரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், கல்வியில் தமிழகத்தை பின்பற்றும் புதுச்சேரி மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு ஆளுநர் தமிழிசையின் அக்கறையின்மையால் இன்றும் அந்தரங்கத்தில் தொங்கிக் கொண்டுள்ளதை கண்டித்தும், முதல்வர் நீட் தேர்வில் என்ன நிலைபாட்டைக் கொண்டுள்ளார் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கக் கோரியும், மாநில திமுக–வுடன் கழக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி இணைந்து, புதுச்சேரி சுதேசி மில் அருகில் வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி ஞாயிறு காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள், தமிழக, புதுச்சேரி ஆளுநர்கள் ஆகியோரை கண்டித்து இப்போராட்டம் நடக்கிறது" என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE