புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் பல்நோக்கு கூடம் எப்போது திறக்கப்படும்?

By அ.முன்னடியான்

புதுச்சேரி: இந்தியாவுடன் இணைவதற்கு முன், புதுச்சேரி ஒரு துறைமுக நகரமாக விளங்கியது. கடந்த 1952-ம் ஆண்டு வீசிய கடல் சூறாவளியில் சிக்கி, கடலில் இருந்த துறைமுக பாலம் சின்னா பின்னமான நிலையில் சீகல்ஸ் ஓட்டல் அருகில் துறைமுகம் கட்டப்பட்டு, 1964-ம் ஆண்டு செயல்படத் தொடங்கியது. இந்தத் துறைமுகம் வாயிலாக மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து பாமாயில், மரம், சீனாவில் இருந்து வேதிப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இங்கிருந்து மொலாசஸ் ஏற்றுமதி செய்யப்பட்டது. நாளொன்றுக்கு 800 மெட்ரிக் டன் அளவுக்கு சரக்குகள் கையாளப்பட்டன.

இந்த துறைமுக பாலத்தின் தூண்கள் சேதமடைந்தன. அதை தொடர்ந்து உப்பளம் பகுதியில் புதிய துறைமுகம் கட்டப்பட்டு கடந்த 1993-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் பழைய துறைமுக வளாகம் எந்த பயன்பாட்டுக்கும் இல்லாமல் இருந்து வந்தது. இங்கு சரக்குகளை இறக்கி வைக்க பயன்படுத்தப்பட்ட குடோன்கள் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் இருந்தது.

தற்போது இந்த வளாகத்தில் துறைமுக அலுவலகம், புயல் எச்சரிக்கை கூண்டு செயல்பட்டு வருகிறது. அதோடு, இந்த துறைமுக வளாகத்தில் உள்ள காலி இடத்தில் அவ்வப்போது ஒப்பந்த அடிப்படையில் கடைகள், கண்காட்சி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இதைத் தொடர்ந்து புதுச்சேரி அரசு சுற்றுலா துறை சார்பில் அங்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய பல் நோக்கு கூடம் கட்ட முடிவு செய்தது.

இதற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு முதல் கட்டமாக ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன. இதில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட பிரமாண்ட அரங்கு, விழாவுக்கு வருபவர்கள் தங்கும் அறைகள், சமையல் கூடம், நவீன கழிப்பறை கட்டப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன.

இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு என்.ஆர்.காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற உடன் முதல்வர் ரங்கசாமி அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு ஒரு சில பணிகள் மட்டும் முடிவடையாமல் இருந்தது. எனவே அந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அதன்படி பணிகளும் முடிக்கப்பட்டன. ஆனால் பணிகள் முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளாக பல்நோக்கு கூடம் பயன்பாட்டுக்கு வராமல் காட்சிப் பொருளாக உள்ளது.

இது தொடர்பாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறும்போது, பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்ட இந்த பல்நோக்கு கூடம் செயல்பாட்டுக்கு வராமல் இருக்கிறது. இந்தக் கட்டிடம் பயன்பாட்டுக்கு வரும் போது அங்கு பிரம்மாண்ட அளவில் திருமணங்கள், பெரிய மாநாடுகள், முக்கிய பிரமுகர்களின் நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், திரைப்பட படப்படிப்புகள், அரசியல் கட்சி கூட்டங்கள் போன்றவற்றை நடத்த முடியும்.

இந்த வளாகத்தில் முடியாமல் உள்ள சிறிய பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும் போது, அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். எனவே அரசு தேவையான நடவடிக்கை எடுத்து இந்த பல்நோக்கு கூடத்தை திறந்து அதனை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர். அரசு தரப்பில் விசாரித்த போது, தொலைநோக்கு பார்வையுடன் இந்த பல்நோக்கு கூடம் கட்டப்பட்டது. விரைவில் இது திறக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE