முரசொலி மாறன் 90-வது பிறந்தநாள்: மதுரையில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

By செய்திப்பிரிவு

மதுரை: மறைந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான முரசொலி மாறனின் 90-வது பிறந்தநாளையொட்டி மதுரையில் அவரது உருவப்படத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதுதொடர்பாக முதல்வர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாளெல்லாம் நம்மை இயக்கிடும் நூற்றாண்டு நாயகர் தலைவர் கருணாநிதியின் மனச்சாட்சியென வாழ்ந்திட்ட முரசொலி மாறனின் 90-ஆவது பிறந்தநாள் இன்று. மதுரை சிலைமானில் மறைந்த முதல்வர் கருணாநிதியால் 1952-இல் திறந்து வைக்கப்பட்ட கட்சி அலுவலகத்தில், முரசொலி மாறனின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

கொள்கைக் கருவூலமான முரசொலி மாறன் எழுதிய மாநில சுயாட்சி நூல் அனைவரும் படித்திட வேண்டிய ஒன்று.முரசொலி மாறன் புகழ் போற்றுவோம். அவரது கருத்துகளை இளைய சமுதாயத்துக்குப் பயிற்றுவிப்போம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றும் மதுரை சென்றார். நேற்று இரவு முனிச்சாலை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன் சிலையைத் திறந்து வைத்தார். மதுரை விமான நிலைய சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்று இரவு ஓய்வெடுத்தார்.

வியாழக்கிழமை காலை ராமநாதபுரம் செல்வதற்காக காலை 9 மணியளவில், காரில் புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் மதுரை சிலைமான் பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான முரசொலி மாறனின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, அங்குள்ள முரசொலி மாறன் படிப்பகத்தை பார்வையிட்டு அண்ணா மன்றத்தின் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார். பின்னர் அந்தப் பகுதியில் கூடியிருந்த பொதுமக்களை சந்தித்த முதல்வர், அவர்களிடம் உரையாடினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ராமநாதபுரம் சென்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE