பிரதமர் மோடி ஹாட்ரிக் வெற்றியை பெறுவார் - பாஜக தமிழக இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி நம்பிக்கை

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: பிரதமர் மோடி ஹாட்ரிக் வெற்றியை பெறுவார் என தருமபுரியில் நடந்த, ‘என் மண் என் தேசம்’ அமிர்த கலச சேகரிப்பு நிகழ்ச்சியின்போது பாஜக தமிழக இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பேசினார்.

இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் முடிவுற்றதை கொண்டாடும் வகையில் மத்திய அரசு, ‘அம்ரித் மகோத்சவ்’ என்ற விழாவை கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொண்டாடி வருகிறது. அதன் ஒருபகுதியாக தற்போது, ‘என் மண் என் தேசம்’ இயக்கம் மூலம் நாடு முழுக்க அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவிடங்கள், ஆன்மீக தலங்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், புகழ்மிக்க இடங்கள் என 7,500-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து மண், செடிகள் சேகரித்துச் சென்று இந்திய தலைநகர் புதுடெல்லியில் ‘தியாக வனம்’ என்ற வளாகத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா நினைவு மணிமண்டப வளாகத்தில் பாரத மாதா ஆலயத்தில் மரியாதை செய்து மண் சேகரிக்கும் நிகழ்ச்சி நேற்று (16-ம் தேதி) நடந்தது.

இந்நிகழ்ச்சியில், பாஜக-வின் மாநில இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, பாப்பாரப்பட்டி நகரில் இருந்து மணிமண்டப வளாகம் வரை ஊர்வலமாக சென்று பின்னர் மண் சேகரித்தனர். அதைத் தொடர்ந்து, மணி மண்டப வளாகம் அருகிலேயே அமைக்கப்பட்டிருந்த அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், நாமக்கல், கரூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சேகரிக்கப்பட்ட மண் மற்றும் செடிகள் மாநில இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியிடம் வழங்கப்பட்டது.

பின்னர் இந்நிகழ்ச்சியில் சுதாகர் ரெட்டி பேசியது: தமிழகம் முழுக்க சேகரிக்கப்படும் மண் மற்றும் செடிகள், வரும் 24-ம் தேதிக்குள் சென்னை கமலாலயம் கொண்டு செல்லப்பட்டு 27-ம் தேதி டெல்லி கொண்டு செல்லப்படுகிறது. ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் பாத யாத்திரைக்கு தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு நல்ல அரசு. சிறந்த நிர்வாகத்தை அளிக்கும் அரசாக உள்ளது. தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.8 லட்சம் கோடி நிதி அளித்துள்ளது. 80 கோடி ஏழை மக்களுக்கு கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் மாதம் தோறும் 5 கிலோ அரிசியை வழங்கி வருகிறது. அதேபோல, 11 கோடி விவசாயிகளுக்கு 3 தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 வீதம் கிசான் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

9 கோடி மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பில் முத்ரா தொழிற்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. திறமைவாய்ந்த பிரதமரின் ஆட்சியில் கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. பிரதமர் மோடியை ஜப்பான், அமெரிக்க உள்ளிட்ட சக்திவாய்ந்த நாடுகளும் பின்பற்றத் தொடங்கியுள்ளன. இது பெருமைக்குரிய ஒன்று. உலகின் விஸ்வகுருவாக பிரதமர் உருவெடுத்துள்ளார்.

பொருளாதாரத்தில் இந்தியா பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. பாஜகவின் போராட்டம் தருமப் போராட்டம். மற்றவர்களின் போராட்டம் கவுரவர்கள் போராட்டம். ஆனால், வெற்றி பாண்டவர்களுக்கே. பாரத மாதாவின் தலைமகனான பிரதமர் மோடி ஹாட்ரிக் வெற்றியைப் பெறப் போகிறார்.

மக்களிடம் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக ஊழல் மிகுந்த கட்சி. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். இது, மீடியா பிம்பம் அளிக்கும் விளம்பரங்கள் மூலம் நடக்கும் ஆட்சி. திமுக அரசு ஒரு ஸ்டிக்கர் ஒட்டும் அரசாக உள்ளது. தமிழகத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தொடங்கி மக்களவை உறுப்பினர்கள் வரை பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.

அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக குடும்பக் கட்சி அரசியல் நடத்துவோருக்கு இடையில், தேசம் தான் முதலில், கட்சியெல்லாம் அடுத்தது தான் என செயல்படும் கட்சி பாஜக. தனிநபர் மற்றும் குடும்பம் தான் பிரதானம் என கருதும் கட்சியினருக்கும், பாஜக-வுக்குமான வித்தியாசத்தை மக்கள் நன்றாக உணருவர்" இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில், கே.பி.ராமலிங்கம், தருமபுரி மாவட்ட தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE