மேட்டூர் அணை நீர் இருப்பு 20 டிஎம்சியாக சரிவு - இன்னும் 15 நாட்களுக்கே தண்ணீர் திறக்கும் சூழல்

By த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மேட்டூர் அணைக்கு கடந்த 11-ம் தேதி விநாடிக்கு 5,385 கனஅடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக குறைந்து, நேற்று முன்தினம் காலை 1,478 கனஅடியாகவும், நேற்று காலை 552 கனஅடியாகவும் சரிந்தது. டெல்டா பாசனத்துக்கு அணையிலிருந்து விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனிடையே, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரை விட, நீர்வரத்து குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. தற்போது, அணையின் நீர்மட்டம் 53.38 அடியாகவும், நீர் இருப்பு 20 டிஎம்சியாகவும் உள்ளது (மொத்த கொள்ளளவு 93.47 டிஎம்சி). அணையில் இருந்து தினமும் சராசரியாக நீர்மட்டம் 0.72 அடி சரிந்து வருகிறது. 28 மாவட்ட மக்களின் குடிநீர், மீன் வளத்துக்காக 9 டிஎம்சி வரை அணையில் நீர் இருப்பு வைக்க வேண்டும்.

அணையின் நீர்இருப்பு 20 டிஎம்சியாக உள்ள நிலையில், இன்னும் 15 நாட்களுக்கே தண்ணீர் திறக்க முடியும் சூழல் உருவாகியுள்ளது. பின்னர், குறுவை சாகுபடிக்கு தேவையான நீர் வழங்க முடியாத நிலை உள்ளது. மேலும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் எழுந்துள்ளது.

நடப்பாண்டில் கர்நாடக அரசு ஜூன் மாதத்தில் 2.83 டிஎம்சி, ஜூலையில் 8.74 டிஎம்சி, ஆகஸ்ட் 13-ம் தேதி வரை 6.14 டிஎம்சி என 17.71 டிஎம்சி மட்டுமே தண்ணீர் வழங்கியுள்ளது. ஆனால் கர்நாடக அரசு 62 டிஎம்சி வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர், டெல்டா மாவட்டங்களில் உள்ள விளைநிலங்களுக்கு செல்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் முழுமையாக கிடைக்காததாலும், வெயிலின் தாக்கம் மற்றும் எதிர்பார்த்த பருவமழை இல்லாததாலும், பயிர்கள் கருகி வருகின்றன.

இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், "மேட்டூர் அணையின் நீர் இருப்பை பொறுத்து குறுவை சாகுபடிக்கு ஒரு வாரம் முதல் 15 நாட்கள் வரை நீர் வழங்க முடியும். கர்நாடக அணைகளில் இருந்து கடந்த 5 நாட்களாக விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், பிலிகுண்டுலுவுக்கு 3,500 கனஅடி, மேட்டூர் அணைக்கும் குறைந்தளவே நீர்வரத்து உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து கடந்த 16 நாட்களில் 13 டிஎம்சி திறக்கப்பட்டுள்ள நிலையில், பிலிகுண்டுலுவுக்கு இதுவரைக்கும் 7 டிஎம்சி மட்டுமே வந்துள்ளது. ஓரிரு நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் என நம்புகிறோம். பொறுத்திருந்து பார்ப்போம்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE