“51 அடி கம்பத்தில் கொடி; 25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்” - அதிமுக மாநாடு குறித்து கே.பி.முனுசாமி தகவல்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ‘‘மதுரை அதிமுக மாநாட்டில் 51 அடி கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைக்கிறார். 25 லட்சம் பேர் மாநாட்டில் கலந்துகொள்வார்கள்’’ என்று மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிடவந்த அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுமாமி தெரிவித்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாநில மாநாடு வரும் 20-ம் தேதி மதுரை விமானநிலையம் அருகே நடக்கிறது. மாநாட்டுப் பணிகளை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், அமைப்புச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா ஆகியோர் செய்து வருகிறார்கள். மாநாட்டுப் பணிகளை துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி பார்வையிட்டார்.

முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, செல்லூர் ராஜு, ஆர்பி.உதயகுமார், அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான், மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், முன்னாள் எம்எல்ஏ-க்கள் தமிழரசன், எஸ்எஸ்.சரவணன், டாக்டர் பா. சரவணன், ஜெ, பேரவை வெற்றிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கே.பி.முனுசாமி செய்தியார்களிடம் கூறுகையில், ‘‘இந்தியாவே திரும்பிப் பார்க்கும்வகையில் இந்த மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள், தேவையான குடிநீர், இருக்கைகள், காலை முதல் இரவு வரை சுடச்சுட உணவு ஆகிய ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெறுகிறது. மாநாட்டு அன்று காலை 51 அடியில் அமைக்கப்பட்டுள்ள கொடியினை கே.பழனிசாமி ஏற்றுகிறார். அதனைத் தொடர்ந்து கண்காட்சியை திறந்து வைக்கிறார். தொடர்ந்து காலை முதல் மாலை வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மாலை கே.பழனிசாமி பேசுகிறார். மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்து 25 லட்சம் பேர் பங்குபெறும் வகையில் மாநாடு திடல் மற்றும் உணவுக் கூடங்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன’’ என்றார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE