சதுரகிரியிலில் ஆடி அமாவாசை கோலாகலம்: 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம்

By அ.கோபால கிருஷ்ணன்

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் சிவகிரி, விஷ்ணு, பிரம்மகிரி, சித்தகிரி ஆகிய 4 மலைகளுக்கு நடுவே சஞ்சீவிகிரி எனும் சதுரகிரி மலை உள்ளது. அதனால் இக்கோயில் பஞ்சபூத லிங்கத்தலம் என போற்றப்படுகிறது. சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கமும் இரட்டை லிங்கமும் சுயம்பு லிங்கமாகவும், சுந்தரமூர்த்தி ஆரிட லிங்கமாகவும், சந்தன மகாலிங்கம் தைவீக லிங்கமாகவும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அகஸ்தியர் உட்பட 18 சித்தர்களும் வாழ்ந்து வழிபட்ட சிறப்புக்குரியது. இன்றும் சதுரகிரியில் சித்தர்கள் பல்வேறு ரூபங்களில் வந்து வழிபாடு நடத்துவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.

இதனால் இக்கோயில் வட இந்தியாவில் புகழ்பெற்ற கேதார்நாத், அமர்நாத் உள்ளிட்ட சிவன் கோயில்களுக்கு இணையாக மகத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இக்கோயிலில் கடந்த 2015-ம் ஆண்டு முன் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் மலையேறிச் சென்று இரவு கோயிலில் தங்கி வழிபாடு நடத்தி வந்தனர். 2015-ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பின் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களுக்கு மட்டும் கோயிலுக்கு செல்ல அனுமதி அளித்து இரவில் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது.

பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழாவுக்காக ஆகஸ்ட் 12 முதல் 17-ம் தேதி வரை 6 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கியது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினாரி சதுரகிரி மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்று ஆடி அமாவாசை முன்னிட்டு சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி மற்றும் 18 சித்தர்களுக்கு 4 கால பூஜைகளிலும் 18 வகையான அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. 12 வகையான மலர்களால் சுந்தர மகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 3500 அடி உயரத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்வதற்கு தேனி மாவட்டம் வருசநாடு உப்புத்துறை பாதை, மதுரை மாவட்டம் சாப்டூர் வாழைத்தோப்பு பாதை, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாணிப்பாறை வழியாக செல்ல முடியும். வத்திராயிருப்பு தாணிப்பாறை பாதையே பிரதானமாக உள்ளது.

தாணிப்பாறை வனத்துறை நுழைவு வாயிலில் இருந்து இன்று அதிகாலை 3:50 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை 30 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர். இது தவிர வருசநாடு மற்றும் சாப்டூர் பாதை வழியாகவும் ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சதுரகிரி மலையில் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர். வனத்துறை, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE