திசையன்விளை அருகே கடலில் குளித்த 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு: வைரலான வீடியோ பதிவு

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே நவ்வலடி கிராமத்தில் கடலில் குளித்த 3 பள்ளி மாணவர்கள் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்துக்கு முன்பாக அம்மாணவர்கள் ஏற்கெனவே பதிவிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.

திசையன்விளை அருகே உள்ள நவ்வலடி கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம் மகன் முகேஷ் (13) , இசக்கியப்பன் மகன் ராகுல் (12) , வள்ளி முத்து மகன் ஆகாஷ் (13) மற்றும் பிரகாஷ் ஆகிய 4 பேரும் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். அப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை சுதந்திர தினவிழா நடைபெற்றது. அதில் பங்கேற்றபின் மாலையில் அவர்கள் கடலில் குளிக்க சென்றனர்.

கடலில் குளித்து விளையாடிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக 4 பேரும் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர். இதில் பிரகாஷ் மட்டும் தத்தளித்து கரைக்கு வந்து சேர்ந்துள்ளான். மற்ற மூவரும் கடலில் மூழ்கி மாயமானார்கள். தப்பிவந்த பிரகாஷ் ஊருக்குள் வந்து அங்கிருந்தவர்களிடம் விவரத்தை கூறியதும், அப்பகுதி மீனவர்கள் கடலில் இறங்கி 3 மாணவர்களையும் தேடினர்.

இந்தச் சம்பவம் குறித்து உவரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார், தீயணைப்பு படையினர், கடலோர பாதுகாப்பு படையினர் அங்குவந்து மீனவர்கள் உதவியுடன் மாயமான மாணவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இப்பணி செவ்வாய்க்கிழமை இரவிலும் நீடித்தது. இரவோடு இரவாக அங்குவந்த தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு தேடும் பணியை துரிதப்படுத்தினார்.

இரவு முழுக்க தேடும் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில் புதன்கிழமை அதிகாலையில் 3 மாணவர்களின் சடலங்கள் கோடாவிளை அருகே கரை ஒதுங்கியது. இச்சம்பவத்தால் நவ்வலடி கிராமமே சோகத்தில் மூழ்கியது. அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை உள்ளிட்டோர் 3 மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

வீடியோ வைரல்: இதனிடையே கடலில் மூழ்கி உயிரிழந்த மாணவர்கள் ஏற்கெனவே வெளியிட்டிருந்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. அதில், "மச்சான் நான் சாகப்போறேன் டா" என்று ஒருவர் சொல்கிறார். "நானும் வரேன் டா மச்சான்" என மற்றொரு சிறுவன் சொல்லிவிட்டு அவன் தோளில் கை போட்டுக்கொண்டு செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இவர்கள் விளையாட்டுத்தனமாக செய்த ரீல்ஸ் வீடியோ இன்று நிஜமாகிப்போன சம்பவம் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத துயரமாக மாறியுள்ளது.

தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: இந்நிலையில் கடலில் மூழ்கி இறந்த 3 பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். | > தொடர்புடைய செய்தி: கடலில் மூழ்கி உயிரிழந்த நெல்லை சிறுவர்கள் 3 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE