கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தின் கோயில் நிலத்துக்கான குத்தகை பாக்கி ரூ.74 லட்சம் டெபாசிட்: அரசு தகவல்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக குத்தகைக்கு எடுக்கப்பட்ட வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயில் நிலத்துக்கான குத்தகை பாக்கி 74 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு ஆட்சியர் அலுவலகம் அமைக்க, வீரசோழபுரத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை நீண்டகால குத்தகைக்கு விடுவதை எதிர்த்து ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 2020-ம் ஆண்டு ஜூலை முதல், மாதம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை வாடகையாக கணக்கிட்டு ஒரு மாதத்தில் கோயில் நிர்வாகத்துக்கு செலுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை அமல்படுத்த உத்தரவிடக் கோரியும், வாடகை பாக்கியை கோயில் நிர்வாகத்துக்கு வழங்கக் கோரியும், கோயில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடக் கோரியும் கோயில் அறங்காவலர் குழுவின் முன்னாள் தலைவர் தெய்வீகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை மீண்டு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், குத்தகை பாக்கி 74 லட்சத்து 16 ஆயிரம் ரூபாயை கோயில் நிர்வாகத்திடம் டெபாசிட் செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஏற்கெனவே அளித்த உத்தரவாதத்தின்படி கோயில் சீரமைப்புக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசுத் தரப்பில், 2 கோடி ரூபாய் செலவில் கோயில் சீரமைக்கப்படும் என பதில் அளிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயிலின் சீரமைப்பு பணிகள் எப்போது துவங்கப்படும் என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE