புதுச்சேரி வில்லியனூரில் குடியரசுத் தலைவர் திறந்து வைத்தும் நடைமுறைக்கு வராத ஆயுஷ் மருத்துவமனை

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்துதல், இயற்கை சார்ந்த உணவு ஊட்டங்களின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குதல் ஆகிய திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, மத்திய ஆயுஷ் அமைச்சகம் நாடு முழுவதும் ஆயுஷ் மருத்துவமனைகளை தொடங்க ஆர்வம் காட்டி வருகிறது. இந்த மருத்துவமனைகளில் சித்த மருத்துவம், ஆயுர் வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகக் கலைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மக்களுக்கு மருத்துவம் அளிக்க வேண்டும் என்பதே மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் இலக்கு.

இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி யூனியன் பிரதேசம், வில்லியனூரில் ரூ.7 கோடியே 93 லட்சம் செலவில் ஆயுஷ் மருத்துவமனை ஒன்றை கட்டதிட்டமிடப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டுகாங்கிரஸ் ஆட்சியில், அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில், அப் போதைய முதல்வர் நாராயணசாமி இந்த மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். மத்திய அரசின் நிதியளிப்பில், பொதுப்பணித்துறை சார்பில், 4 ஆயிரம் சதுர அடியில் தரைத்தளம், 3 மாடி கட்டிடங்களுடன் 2 ஆண்டுகளில் இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது.

இடையில்கரோனா ஊரடங்குவர, பணிகளில் தொய்வு ஏற்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப்பின், என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அரசு பொறுப்பு ஏற்றவுடன், பணிகள் விரைவுப் படுத்தப்பட்டு, கட்டுமான பணிகள் முடிவடைந்தன. கடந்த 7-ம் தேதி புதுச்சேரிக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, இம்மருத்துவமனையை ஜிப்மர் வளாகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

அப்போது அரசு தரப்பில் வெளியிடப்பட்ட காணொலியில், இந்த ஆயுஷ் மருத்துவ மனையின் முதல் தளத்தில் சித்தா மற்றும் ஆயுர்வேத பிரிவில் இருபாலருக்கும் தலா 10 படுக்கை அறைகள், மருந்தகம், ஆய்வக வசதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இரண்டாவது தளத்தில் ஸ்கேன், எக்ஸ்ரே மற்றும் 15 படுக்கை அறைகள், மூன்றாவது தளத்தில் கருத்தரங்க கூடம், அலுவலகம், மருத்துவ அதிகாரி அறைகள் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளதாக இந்தக் காணொலியில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த மருத்துவமனை பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட வில்லை. இந்த மருத்துவமனையில் பணியாற்ற என்று, ஒரு பணியிடம்கூட நிரப்பப்படவில்லை. இருக்கிற சூழலைப் பார்த்தால் இந்த மருத்துவமனை செயல் பாட்டுக்கு வரவே பல மாதங்களாகும் எனத் தெரிகிறது.

இதுபற்றி மனித உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் முருகானந்தம் கூறுகையில், “குடியரசுத் தலைவர் திறந்து வைத்துள்ளதால், நமக்கு உரிய தரமான சிகிச்சை கிடைக்கும் என்று வில்லியனூரில் உள்ள இந்த ஆயுஷ் மருத்துவமனைக்கு மக்கள் ஆர்வமுடன் சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை அளிப்பதற்கான எந்தவிதமான முகாந்திரமும் இல்லை.

இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். அவர்கள், ‘ஆயுஷ் மருத்துவமனையை செயல்பாட்டுக்கு கொண்டு வரத் தேவையான பணியாளர்களில் ஒருவரைக் கூட தேர்வு செய்யவில்லை, இதனால் இந்த மருத்துவ மனை செயல்பாட்டுக்கு வர குறைந்தது 6 மாதங்களாவது ஆகும்’ என்றனர்.

இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றால், அடுத்த மாத தொடக்கத்தில் குடியரசுத் தலைவருக்கே இதுபற்றி கடிதம் எழுத இருக்கிறோம்” என்றார். நம் நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ள குடியரசுத் தலைவரை அழைத்து, புதிதாக ஒரு மருத்துவமனையை திறக்கிறோம்.

அவர் திறந்து வைத்த அன்றே, அது செயல்பாட்டுக்கு வருவதுதானே முறையாகும். அதுதானே நல்ல நிர்வாகத்துக்கு அழகு. அவ்வாறு செய்யாமல், ஏன் இப்படி செய்கிறார்கள்? என்ற கேள்வி பொதுமக்களைப் போல் நமக்கும் எழுகிறது.

இதுபற்றி சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளிடம் விசாரித்த போது," வில்லியனூர் ஆயுஷ் மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில் நுட்ப உதவியாளர்கள் என 65 பணியிடங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா, ஹோமியோபதி ஆகிய மருத்துவப்பிரிவுகள் இங்கு தொடங்கப்படும். யோகாபயிற்சி கூடமும் இங்கு இயங்கும். ஆயுர்வேதாவில் பஞ்சகர்மா சிகிச்சை, சித்தாவில் வர்மம், தொக்கணம் சிகிச்சைக்கும் சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இதையெல்லாம் செய்து, இந்த ஆயுஷ் மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர 3 மாதங்களுக்கு மேலாகும்" என்று தெரிவித்தனர். சுகாதாரத் துறை அதிகாரிகள் இவ்வாறு சொல்லும் போது, பிரதமர் மோடியால், புதுச்சேரியில் கடந்த 2021-ம் ஆண்டு திறந்து வைத்து, இதுவரையிலும் பயன்பாட்டுக்கு வராமல் முடங்கி கிடக்கும் நகராட்சிக்கு சொந்தமான மேரிக் கட்டிடம் நினைவுக்கு வந்து போகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE