சென்னை: உச்ச நீதிமன்றம் மூலமாகவே சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்வது தான் உச்ச நீதிமன்றத்தின் நோக்கம் என்றும், அதன் ஒரு கட்டமாக இதுவரை மொத்தம் 9,423 தீர்ப்புகள் 14 மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்திருக்கிறார்.
நீதித்துறையில் மாநில மொழிகளின் பயன்பாடு குறித்து உச்சநீதிமன்றம் காட்டும் அக்கறை மிகவும் பாராட்டத்தக்கதாகும்.
உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விடுதலை நாள் விழாவில் உரையாற்றிய தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்கள்,‘‘நீதிமன்றத் தீர்ப்புகள் மாநில மொழிகளில் இல்லாவிட்டால், மாநில மொழிகளில் நீங்கள் வாதிடலாம் என்று சொல்வதில் என்ன பயன் இருக்கப் போகிறது?’’ என்றும் வினா எழுப்பியிருக்கிறார்.
உச்ச நீதிமன்றத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள 9423 தீர்ப்புகளில், 8,977 (95.26%) தீர்ப்புகளுடன் இந்தி முதலிடத்திலும், அதற்கு அடுத்தபடியாக 128 (1.35%) தீர்ப்புகளுடன் தமிழ் மிகவும் பின்தங்கி இரண்டாவது இடத்திலும் உள்ளன. 5 ஆண்டுகளில் 128 தீர்ப்புகள் மட்டுமே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கும் உண்மை தான் என்றாலும், மாநில மொழிகளில் தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்பதில் தலைமை நீதிபதி ஆர்வம் காட்டுவது மனநிறைவை அளிக்கிறது. அதுமட்டுமின்றி, மாநில மொழிகளில் தீர்ப்புகள் இல்லாவிட்டால், மாநில மொழிகளில் எவ்வாறு வாதிட முடியும்? என்று தலைமை நீதிபதி வினா எழுப்பியிருப்பதன் மூலம், உயர் நீதிமன்றங்களில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளாக 2018-ஆம் ஆண்டு முதல் பதவி வகித்த அனைவருமே மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். இந்தக் காலத்தில் தான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் மொழிமாற்றம் செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் மாநில மொழிகளில் வழக்கு விசாரணைகளை நடத்துவதற்கான நேரம் வந்து விட்டதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.இரமணா கூறியிருந்தார். அவர்களின் வழியில் இப்போதைய தலைமை நீதிபதியும் பயணிப்பது வரவேற்கப்பட வேண்டியதாகும்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடும் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல பத்தாண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சியும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. எனது வலியுறுத்தலை ஏற்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடும் மொழியாக தமிழை அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை 2006-ஆம் ஆண்டு திசம்பர் 6-ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கொண்டு வந்து நிறைவேற்றினார். ஆனால், அதன் பிறகு 17 ஆண்டுகள் நிறைவடைந்தும் கூட தமிழ் வழக்காடும் மொழியாக ஆக்கப்படவில்லை.
தமிழை சென்னை உயர் நீதிமன்ற ஆட்சி மொழியாக அறிவிப்பதற்கு சட்டரீதியாகவோ, கட்டமைப்பு ரீதியாகவோ எந்தத் தடையும் இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348(2) ஆவது பிரிவின்படி உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக இந்தி அல்லது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியை அறிவிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. இதைப் பயன்படுத்தி அலகாபாத், மத்தியப் பிரதேசம், பிஹார், ராஜஸ்தான் ஆகிய உயர்நீதிமன்றங்களின் வழக்காடும் மொழியாக இந்தி அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், அப்போதைய மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தின் கருத்தைக் கேட்டு, அதற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளிக்காததைக் காரணம் காட்டி, இந்தக் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றங்களில் மாநில மொழிகளில் வாதிடுவதற்கு அனுமதிக்கலாம்; உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளே தொடர்ந்து கூறிவருவதுடன், அதற்கான முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் மூலமாகவே சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்க வேண்டும். உச்சநீதிமன்றத்தை நேரடியாக அணுகி இந்தக் கோரிக்கையை முன்வைப்பதா? அல்லது தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதா? என்பது குறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்தாய்வு செய்து தமிழக அரசு தீர்மானிக்க வேண்டும். தேவைப்பட்டால், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க முன்வர வேண்டும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago