தமிழகம் முழுவதும் ஆக.25 முதல் காலை உணவு திட்டம் விரிவாக்கம் - சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: காலை உணவு திட்டம் வரும் ஆக.25-ம்தேதி முதல் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படுவதாக சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நாட்டின் 77-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, 3-வது முறையாக, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் ஸ்டாலின் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, சுதந்திர தின உரை நிகழ்த்தி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்த தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிக்குளத்தில் இயங்கிவரும் அரசு வேளாண்மை கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்துக்கு அவரது பெயர் சூட்டப்படும். சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்ப உறுப்பினர்களின் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.11 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

புதுமைப்பெண் திட்டத்தில், இந்த ஆண்டில் உயர்கல்வி பயிலும் 2.11 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்க ரூ.350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

‘விடியல் பயணம்’ திட்டம்: அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கும் திட்டத்தில் தினமும் 50 லட்சம் பெண்கள் பயணம் செய்கின்றனர். இத்திட்டத்துக்கு ‘விடியல் பயணம்’ என பெயர் சூட்டப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்.15-ம் தேதி 1 முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, வரும் கல்வி ஆண்டு முதல் 31,008 அரசுப் பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், வரும் ஆக.25-ம் தேதி முதல்மாநிலம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பயின்ற திருக்குவளை பள்ளியில் இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறேன். இதற்காக இந்த நிதி ஆண்டில் ரூ.404 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இளம் வயதை ராணுவப் பணியில் கழித்து, பணிக் காலம் நிறைவுபெற்று திரும்பும் முன்னாள் ராணுவத்தினர் பயன்பெறும் வகையில், ரூ.7 கோடியில், 10 ஆயிரம் பேருக்கு உரிய பயிற்சிகள் வழங்கி, திறனை மேம்படுத்தவும், அவர்கள் உரிய பணியில் அமரும் வரை தக்க உதவி செய்யவும் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியாக நல வாரியம்: ஓலா, ஊபர், ஸ்விகி, ஸொமட்டோ போன்ற நிறுவனங்களை சார்ந்த பணியாளர்களின் நலனை பாதுகாக்க, தனியாக நல வாரியம் அமைக்கப்படும்.

பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதியஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தில் 141 பேர் பயனடைந்துள்ள நிலையில், மேலும் 500 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவரும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

55,000 பணியிடங்கள்: பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 55 ஆயிரம் பணியிடங்கள் நடப்பு ஆண்டில் நிரப்பப்படும்.

சென்னை கதீட்ரல் சாலையில் செங்காந்தள் பூங்கா அருகே உள்ள 6.09 ஏக்கர்நிலத்தில் ரூ.25 கோடியில் ‘கலைஞர் நூற்றாண்டு பூங்கா’ அமைக்கப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், தூதரக அதிகாரிகள், துறை செயலர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE