மதுரை மாநகராட்சியில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு வளர்ச்சிப் பணிகள் - சுதந்திர தின விழாவில் மேயர் தகவல்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ‘‘மதுரை மாநகராட்சியில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு வளர்ச்சிப்பணிகள் நடக்கிறது’’ என்று சுதந்திர தின விழாவில் மேயர் இந்திராணி தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மாநகராட்சி மேயர் இந்திராணி தலைமை வகித்து தேசிய கொடியேற்றி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து தேசிய தரச் சான்றிதழ் பெற்ற மஸ்தான்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் முனிச்சாலை மருத்துவ குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

மேலும், மாநகராட்சியில் சிற்பபாக பணியாற்றிய பணியாளர்களுக்கும், பள்ளிகளில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன. கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை மேயர் இந்திராணி வழங்கினார்.

விழாவில் மேயர் இந்திராணி பேசியதாவது: ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திலிருந்து சுதந்திரம் பெறுவதற்கு எத்தனை உயிர்களை இழந்திருப்போம். எத்தனை வளங்களை வாரி கொடுத்திருப்போம். இன்றைய சமூகம் மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் வாழ வேண்டும் என்பதற்காக, வாழும் ஒவ்வொரு நிமிடமும் நம் செயல்களால் இந்திய திருநாட்டை வளப்படுத்துவோம்.

சுதந்திரம் என்பது ஒரு நாட்டின் குடிமக்கள் பேச்சு, எழுத்து, வாழ்தல், பொருள் ஈட்டுதல், மதம், மொழி ஆகிய எல்லாவற்றிலுமே பிறர் தலையீடு இன்றி வாழ்தல் என்கின்றார்கள். மனித நேயத்துடன் சத்தியத்தின் மீதும், அகிம்சையின் மீதும் பற்று கொள்ள வேண்டும். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியைப் பெற்று உலக நாடுகளில் வளர்ந்து வரும் நாடுகளுக்கெல்லாம் எடுத்துக்காட்டாகவும் முன் உதாரணமாகவும் திகழ்கின்றோம்.

இந்த வளர்ச்சிக்கு மிக முக்கியமாக நான் கருதுவது கூட்டாச்சி கருத்தியலை முன்னெடுக்கும் நமது அரசியல் சாசன சட்டம் தான். இந்தியாவின் பன்முகத் தன்மையையும், ஒருமைப்பாட்டையும், நாம் கடைப்பிடிக்கும் கூட்டாச்சி தத்துவம் இருக்கும் வரை எவராலும் நம்மை சிதைத்துவிட முடியாது. இந்நேரத்தில் மத்தியல் கூட்டாச்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று முழங்கிய முன்னாள் முதல்வர் கருணாநிதியை நாம் நினைவில் போற்றுவோம்.

இன்றைய காலகட்டம் மதுரை மாநகராட்சிக்கு மிகமுக்கியமான ஒரு வளர்ச்சி காலகட்டமாகும். மதுரை மாநகராட்சியில் சுகாதாரம், பொறியியல், கல்வி ஆகிய பிரிவுகளில் அடிப்படை கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் சுமார் ரூ.2000 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது" இவ்வாறு அவர் பேசினார்.

துணை ஆணையாளர்கள் சரவணன், தயாநிதி, மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, வாசுகி, சுவிதா, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கண்காணிப்பு பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE